மும்பை, பிள்ளைகள், பெற்றோர்களை கவனிக்காவிட்டால் எழுதி கொடுத்த சொத்தை திரும்ப பெறலாம் என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதிரடி தீர்ப்பு முதுமை காலத்தில் தங்களைப் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பிள்ளைகளுக்கு சொத்துகளை எழுதி வைக்கும் பெற்றோருக்கு ஆதரவாக, மும்பை ஐகோர்ட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. பெற்றோரைச் சரியாகக் கவனிக்காத பட்சத்தில், பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த சொத்துகளை அவர்கள் தாராளமாகத் திரும்ப பெறலாம் என்று ஐகோர்ட்டு திட்டவட்டமாக கூறியுள்ளது. அதன் விவரம் வருமாறு: மகனுக்கு நிபந்தனையுடன் தானப்பத்திரம் மும்பை லோயர் பரேல் பகுதியைச் சேர்ந்த 68 வயது நகைக்கடை உரிமையாளர் ஒருவர், கடந்த 2005-ம் ஆண்டு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். முதுமை காலத்தில் தன்னையும், தனது 60 வயது மனைவியையும் அன்போடு கவனித்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்ற முக்கிய நிபந்தனையுடன், கடந்த 2023-ம் ஆண்டு மே 8-ந்தேதியன்று அந்த வீட்டைத் தனது மகனுக்கு தானப்பத்திரம் மூலம் அவர் மாற்றிக்கொடுத்தார். சிறப்பு தீர்ப்பாயத்தை அணுகிய தந்தை ஆனால், சொத்து கைக்கு வந்த சில காலத்திலேயே குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் உச்சகட்டமாக, கடந்த 2025-ம் ஆண்டு அந்த முதியவரும், அவரது மனைவியும் சொந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். மகன் தங்களைக் கைவிட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், 'பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், 2007'-ன் கீழ் செயல்படும் சிறப்புத் தீர்ப்பாயத்தை அணுகி முறையிட்டனர். ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த மகன் இந்த வழக்கை முழுமையாக விசாரித்த தீர்ப்பாயம், மகனும், அவரது குடும்பத்தினரும் அடுத்த 60 நாட்களுக்குள் வீட்டை முழுமையாகக் காலி செய்து, பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அவரது மகன் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில் ஆஜரான வக்கீல் “எனது மனுதாரரின் தந்தை பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெற்றவர். அவருக்குச் சொந்த தொழிலும், பிற சொத்துகளும் தாராளமாக உள்ளன. எனவே இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்" என்று வாதாடினார். இந்த வாதத்தை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். நிபந்தனைகள் மீறப்பட்டால் சொத்தை திரும்ப பெறலாம் மேலும் அவர்கள் தங்கள் தீர்ப்பில் "முதியோர் நலச்சட்டத்தின் 23-வது பிரிவின்படி, பெற்றோரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சொத்து மாற்றம் செய்யப்பட்டு, அந்த நிபந்தனையைச் சொத்தைப் பெற்றுக்கொண்டவர் நிறைவேற்றத் தவறினால், அந்தச் சொத்து மாற்றத்தையே செல்லாததாக அறிவிக்க சட்டத்தில் இடமுண்டு. மேலும், இந்தச் சட்டப்பிரிவின் பயன்பாடு என்பது மூத்த குடிமக்களின் பொருளாதார நிலையைப் பொறுத்தது அல்ல. பெற்றோர் ஏழையா?, பணக்காரரா? என்பது முக்கியமல்ல. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பராமரிப்பு நிபந்தனைகள் மீறப்பட்டால், சொத்து மாற்றத்தை தாராளமாக செல்லாததாக அறிவிக்கலாம். எனவே பிள்ளைகள், பெற்றோர்களை கவனிக்காவிட்டால் எழுதி கொடுத்த சொத்தை திரும்ப பெறலாம்" என்று கூறியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/property-can-be-taken-back-if-parents-are-not-taken-care-of-bombay-high-court-verdict




