சென்னை, இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 1954-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அமரன்' திரைப்படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. 3 பிரிவுகளில் 'அமரன்' வெற்றி 'அமரன்' திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை கைப்பற்றியுள்ளது. இந்த விருதுகள் படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழ் சினிமாவிற்கும் மேலும் ஒரு தேசிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. ஜி.வி. பிரகாஷுக்கு 3-வது தேசிய விருது 'அமரன்' திரைப்படத்தின் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றுள்ளார். இது அவரது திரைப்பயணத்தில் கிடைக்கும் மூன்றாவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக 68-வது தேசிய விருதில் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும், 'வாத்தி' திரைப்படத்திற்காக 71-வது தேசிய விருதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் ஜி.வி. பிரகாஷ் வென்றிருந்தார். தற்போது 'அமரன்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தேசிய விருதை வென்றுள்ள ஜி.வி. பிரகாஷுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விருது வென்ற மகிழ்ச்சியில் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது, மூன்றாவது முறையாக கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் 'அமரன்' திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான 72-வது தேசிய திரைப்பட விருதைப் பெறுவது எனக்கு மிகுந்த பணிவையும், அளவற்ற நன்றியுணர்வையும் அளிக்கிறது. மூன்றாவது முறையாக இந்த உயரிய விருதைப் பெறுவது எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். இந்த அங்கீகாரத்தை மனமார்ந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த அற்புதமான அங்கீகாரத்தை வழங்கிய மதிப்பிற்குரிய நடுவர்கள் மற்றும் தேர்வுக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அழகான திரைப்படத்தில் என்னை நம்பி, இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய எங்கள் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள். இந்த மறக்க முடியாத பயணம் முழுவதும் உறுதுணையாக இருந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, மற்றும் 'அமரன்' திரைப்படத்தின் அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இவ்வளவு திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த இசைக்கு உயிர் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த எனது ஒலி பொறியாளர் ஜெஹோவாசன் அவர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த அங்கீகாரத்தை எனது அன்பான குடும்பத்தினர், என்னுடன் பயணித்த அற்புதமான இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர், எனது நண்பர்கள், எனது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் துணையாக இருந்த அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, எனது ரசிகர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். நீங்கள் என்மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பு, தொடர்ந்த ஊக்கம் மற்றும் முடிவில்லா நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலமும் உத்வேகமும் ஆகும். நான் உருவாக்கும் ஒவ்வொரு இசைக் குறிப்பும் உங்களுக்காகவே அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த விருது எனக்கு மட்டுமல்ல, உங்களில் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/3rd-national-award-this-belongs-to-my-fans-too-gv-prakash




