சென்னை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். அனல் பறந்த சட்டசபை கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது. யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;- “மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அடித்தளம் காவல்துறை. ஒரு மாநிலத்தின் அமைதியில் தான் முன்னேற்றம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும். அரசு பணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவரது பெயர் நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வரும்போது அந்த செய்தி அவரை மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கிறது. எனவே அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் நேர்மையை கடைபிடித்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எந்த அவப்பெயரும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்கள் சட்டப்பூர்வமான கடமையை எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் த.வெ.க. அரசு எந்த சமரசமும் செய்யாது. போதைக்கு எதிரான நடவடிக்கைகள் கடந்த கால ஆட்சியாளர்களால் போதைப்பொருள் கலாசாரம் கவனிக்கப்படாமல் இருந்ததால், அது தற்போது வேரூன்றி வளர்ந்து நிற்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதற்காக போதைப்பொருள் தடுப்புப்படை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டும்தான் வெட்டியுள்ளோம். ஆனால் அதனை வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ, 100 நாட்களிலோ முடிகின்ற பணி அல்ல. மாநிலத்தின் 37 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,846 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 159 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதோடு, நமது இளைஞர்களை போதையின் பிடியில் இருந்து விடுவிப்பதே இந்த அரசின் முதன்மையான நோக்கமாகும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரண்டு பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக கொண்டுள்ள ஒரே அரசு த.வெ.க. அரசுதான். பெண்களை தாயாக, அக்காவாக, தங்கையாக, தோழியாக பார்க்கக் கூடிய அரசு இது. பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது இந்த அரசின் மிக முக்கியமான பொறுப்பாகும். குற்றம் நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல், குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பது இந்த அரசின் நோக்கமாகும். இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுக்காப்பை மையமாக கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இரண்டு சக்கர வாகனங்கள், மற்றும் ரூ.357 கோடியில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின் மூலம் 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 21 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. காவல் மரணங்களை தடுக்கும் நடவடிக்கைகள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது காவல் மரணங்கள் குறித்து பேசியிருந்தனர். காவல் மரணம் என்பது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். எனவே காவலில் எந்தவொரு மரணம் ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு குறித்து வெளிப்படையான, பாரபட்சமற்ற, சட்டப்பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்தில் தெரிவிக்கப்படுவதோடு, தேவையான மருத்துவ உடற்கூராய்வு மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதற்காக எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது. காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் சி.சி.டி.வி. கண்காணிப்பு பயிற்சி, மருத்துவ பரிசோதனைல், தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/2546-new-posts-have-been-created-in-the-lioness-special-task-force-chief-minister-vijay




