கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தேவர்மலை கிராம நிர்வாக அலுவலராக கார்த்திக் என்பவர் பணியில் இருந்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற விவசாயி வங்கியில் கடன் பெறுவதற்காக சிட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், விவசாயியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசி, 'விவசாய இடம் எங்கே உள்ளது?' என்று கேட்டு, அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அப்போது, தான் பாளையத்தில் உள்ளதாகவும், அரை மணி நேரத்தில் வி.ஏ.ஓ அலுவலகத்தில் வந்து சந்திப்பதாகவும் விவசாயி கூறியுள்ளார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர், 'பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள பிரண்ட்ஸ் ஹோட்டலில் இரண்டு எண்ணெய்யில் பொறித்த மீன் வருவல், மீன் குழம்பு மற்றும் தனியாக ஈர வெங்காயம் பார்சல் செய்து வாங்கி வா. என் செல்லமில்ல. பார்சல் கட்டி வாங்கி வா' என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. இதன் பிறகு விவசாயி தேவராஜின் மகன் செல்போனை வாங்கி கிராம நிர்வாக அலுவலரிடம் பேசியுள்ளார். vao அப்போது, அந்த விவசாயியின் மகன், 'உங்களிடம் ஒரு டவுட் கேட்கலாமா? கிராம நிர்வாக அலுவலரே சொல்லுங்க' என்று கேட்டுள்ளார். வி.ஏ.ஓ-வும், 'சரி கேளு' என்று சொல்ல, 'கவர்மென்ட் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா? அரசாங்கம் உங்களிடம் இது போல் சிட்டா பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் மீன் வறுவல் குழம்பு எல்லாம் வாங்கி தர சொல்லி கூறியுள்ளார்களா?' என கேட்டபோது, `எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் அலுவலகத்திற்கு வந்து சிட்டா வாங்கிக் கொள்ளுங்கள்' என்று வி.ஏ.ஓ பல்டி அடித்துள்ளார். 'நான் நேரடியாக வருகிறேன்' என்று கூறிய போது, 'நீங்கள் வர வேண்டாம். உங்கள் தந்தையை மட்டும் அலுவலகத்திற்கு அனுப்புங்கள்' என்று கூறியுள்ளார். அதற்கு தேவராஜின் மகன், 'இல்லை சார். நான் உங்களிடம் நேரடியாக சில கேள்விகளை கேட்க வேண்டும். நானே நேரடியாக வருகிறேன்' என்று சொன்னபோது, மீண்டும், 'நீங்கள் வர வேண்டாம். உங்கள் தந்தையை மட்டும் அனுப்பி வையுங்கள்' என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது. எண்ணெயில் பொறித்த மீன் வறுவல் குழம்பு வாங்கி வர சொல்லி கிராம நிர்வாக அலுவலர் விவசாயியிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்ததன் காரணமாக குளித்தலை சார்பு ஆட்சியர் அவரை தற்போது பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/kulithalai-action-taken-against-vao-who-asked-bribe




