அனைவருக்கும் பசுமை வணக்கம்! மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால், டெல்டா பாசனத்துக்கு இந்த ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இரண்டரை மாதங்கள் தாமதமாக அணை திறக்கப்பட்டதால், டெல்டா விவசாயிகள் சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடியைக் கைவிட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, தமிழக முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையைத் திறந்துவைத்தவுடன். ‘45 நாள்கள் மட்டுமே டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும்’ எனத் தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவித்தது. இது, விவசாயிகளை மிகுந்த குழப்பத்திலும் பெரும் கவலையிலும் ஆழ்த்தியது. டெல்டாவைப் பொறுத்தவரை. நீண்டகால நெல் ரகங்களைப் பயிர் செய்தால்தான், வடகிழக்குப் பருவமழையில் பாதிப்படையாமல் விளைச்சல் எடுக்க முடியும். இதற்குக் குறைந்தபட்சம் 140 நாள்களுக்குத் தண்ணீர் தேவை. மிகவும் காலதாமதமான தண்ணீர் திறப்பால், பருவம் தப்பி, டெல்டா விவசாயிகள் நீண்டகால நெல் ரகங்களைப் பயிர் செய்ய முடியவில்லை. ‘அறுவடை நேரத்தில் நெற்பயிர்கள் வடகிழக்குப் பருவமழையில் சிக்கி, மகசூல் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை’ எனக் குறுகியகால நெல் ரகங்களைப் பயிர் செய்ய ஆயத்தமாயினர். இதற்கும், குறைந்தபட்சம் 110 நாள்களுக்குத் தண்ணீர் தேவை. வெறும் 45 நாள்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டால் அதற்கும் சாத்தியமில்லாமல் போகும். இதனால் டெல்டா விவசாயிகள் மன உளைச்சல் அடைந்துள்ளார்கள். ஆனால், இதைப் பற்றித் தமிழக முதலமைச்சரோ, அமைச்சர் பெருமக்களோ கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுடைய கவனம் எல்லாம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில்தான். கர்நாடக அரசு, தங்கள் விவசாயிகள் விஷயத்தில் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. வறட்சி குறித்து விவாதிப்பதற்காக ‘சட்டமன்றச் சிறப்புக் கூட்டம்’ கூட்டியுள்ளார், முதல்வர் டி.கே.சிவக்குமார். இந்தத் தருணத்தில் தமிழக அரசுக்கு டெல்டா விவசாயிகள் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்: “டெல்டாவை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து. சிறப்புத் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். மேட்டூர் அணையில் குறைந்தளவு தண்ணீர் இருப்பதால் சம்பாச் சாகுபடியை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தை உடனடி யாக நடத்த வேண்டும். நெல்லை மட்டுமே நம்பியிராமல் எந்தெந்தப் பயிர்களை மாற்றுப்பயிர்களாகச் சாகுபடி செய்யலாம் என்பது குறித்தும், கொள்முதல் உத்தரவாதம் குறித்தும் தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என டெல்டா விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். ‘உழவே தலை’ என்றார் வள்ளுவர். விவசாயிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டாது அக்கறையுடன் நடந்துகொள்வது, ஆட்சியாளர்களின் முதல் கடமை. - ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/tamil-nadu-delta-farmers-protest-delayed-irrigation




