சென்னை, மாணவருக்கு சேர வேண்டிய சட்டப்பூர்வமான உரிமையை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ இயற்பியல் (M.Sc. Medical Physics) முதுகலைப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான (BCM) 3.5 சதவீத சமூகநீதி உள் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். மொத்தம் 11 இடங்கள் கொண்ட இந்தப் பாடப்பிரிவில், 1 சதவீத இடஒதுக்கீடு கொண்ட பழங்குடியினர் (ST) மற்றும் 3 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்ட அருந்ததியர் (SCA) பிரிவினருக்கு 200-புள்ளி சுழற்சி முறைப்படி (200-Point Roster System) இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், 3.5 சதவீத இடஒதுக்கீடு கொண்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த தகுதியான மாணவருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறானது பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமும் (AUT) பாதிக்கப்பட்ட மாணவரும் சுட்டிக்காட்டியுள்ளபடி, இடஒதுக்கீட்டு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது. எதிர்காலத்தில் சேர்க்கை இடங்களை உயர்த்தப் பரிந்துரைப்பதாகக் கூறி மழுப்புவதும், மாணவருக்கு சேர வேண்டிய சட்டப்பூர்வமான உரிமையை மறுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சமூகநீதிக் கொள்கை புகாரின் அடிப்படையில் உயர்கல்வித்துறை தலையிட்டுத் தற்போது சேர்க்கைப் பட்டியலை இடைநிறுத்தி வைத்துள்ள போதிலும், இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட மாணவரின் சேர்க்கைப் பிரச்சினை மட்டுமல்ல. மாறாக, தமிழ்நாடு பல தசாப்தங்களாகப் போராடிப் பாதுகாத்து வரும் 'சமூகநீதிக் கொள்கை' உயர்கல்வி நிறுவனங்களில் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற மிகப்பெரிய அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது. எனவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களும், உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகம் உட்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சமூகநீதி இடஒதுக்கீடு சுழற்சி முறைப்படி துல்லியமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சமூகநீதியின் முகவரி மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் 200-புள்ளி ரோஸ்டர் முறை முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து நடுநிலையான அதிகாரிகளைக் கொண்டு உயர்மட்ட விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு எவ்வித காலதாமதமுமின்றி உடனடியாகப் பாடப்பிரிவில் சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமூகநீதியின் முகவரியாக திகழும் தமிழ்நாட்டில், அரசுப் பல்கலைக்கழகத்திலேயே இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தவறான வழிகாட்டுதலை வழங்கிய பல்கலைக்கழக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் உரிமையைப் பாதுகாக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/sdpi-calls-for-high-level-inquiry-into-denial-of-internal-reservation-for-muslims-at-bharathidasan-university




