வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் மும்பை மூன்று மாத ட்ரைனிங் பெங்களூரில் முடிந்தது. வெவ்வேறு மாநிலத்திலிருந்து நாற்பது பேர் அங்கு ஒன்றாகப் பயிற்சி பெற்றோம். பயிற்சி முடிந்ததும் அனைவரும் இந்தியாவில் ஒரோர் மூலைக்கு அனுப்பப்பட்டார்கள். எனக்கு குஜராத். சந்தியா வந்தனம் முடித்து எழுந்த விவேக், என் கையிலிருந்த ஆர்டரைப் பார்த்துவிட்டுச் சொன்னான். அவன் பீஹாரைச் சேர்ந்தவன். சில வருடங்களாக அவனது குடும்பம் மும்பையில் செட்டிலாகி இருந்தது. ‘குஜராத் போகும் வழியில் கண்டிப்பாக மும்பை வந்து என் வீட்டில் தங்கிவிட்டுத் தான் செல்ல வேண்டும்’ என்று கட்டளையிட்டான். மீறமுடியவில்லை. டிரைன் ஏறி அடுத்த நாள் மும்பை சென்றடைந்தோம். சத்ரபதி ரயில் நிலையம் மூச்சுத் திணறும் அளவுக்கு படு கும்பலாக இருந்தது. டேக்ஸி பிடித்து உள்ளே அமர்ந்துகொண்டு ஜன்னல் வழியாக மும்பை சாலையை பராக்கு பார்த்துக் கொண்டே போனேன். கருக்கல் நேரம். மெய்ன் ரோடில் இருந்து பிரிந்த போதுதான் கவனித்தேன். நெரிசலான குடியிருப்புப் பகுதிக்குள் நுழைகிறோம். துர்நாற்றம் அடித்தது. இங்கு தான் அவன் வீடு இருக்குமோ என்று சற்றே திடுக்கிட்டேன். ‘சரி, அவனது வீட்டிற்கு இந்த வழியாகத்தான் செல்லவேண்டும் போல’ என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். அப்போது தான் ‘இறங்கு’ என்றான். ‘இங்கேயா?’ ‘ஆமா. இதுக்கப்புறம் டேக்ஸி போகாது’ என்றான். வளைந்து வளைந்து ஒரு குறுகிய சந்துக்குள் நுழைந்தான். இரண்டு டூவீலர் செல்லும் அளவுக்குத்தான் அகலம். வீட்டு வாசலில் குறுகிய அளவில் திறந்த வெளி ஓடை. உள்ளே நுழைந்தோம். அவனது அம்மா, அப்பா, அக்கா என எல்லாருமே அன்பாக ‘ஆவோ, ஆவோ’ என வரவேற்றார்கள். புன்னகையால் தங்கள் முகத்தை நிரப்பியிருந்தார்கள். நுழைந்தவுடன் சிறு அறை. நம் ஊரில் எல்லாம் இரவு நேரத்தில் சைக்கிளைத் தூக்கி உள்ளே வைப்போமே. அந்த அளவுதான். ஐந்தடி நீளம். ஆறடி அகலம் இருக்கலாம். பின்பு ஒரு ஹால். ஆறுக்கு ஆறு. அதேபோன்று ஒரு கிச்சன். இரவாகிவிட்டதால் ஆகாரம் அளித்தார்கள். தாளி உணவு. கொஞ்சம் சோறு, ரொட்டி, பருப்பு, ஒரு சப்ஜி மற்றும் பப்படம். சுவையாக இருந்தது. முடித்துவிட்டு படுக்கச் சென்றோம். அந்த முன் அறையில் நான்கு பேர் தூங்கினோம். சற்று குறுக்கித் தான் படுக்க வேண்டியிருந்தது. உடலை முடக்கிக் படுத்ததை விட, அந்த வீட்டின் சுவர்கள் என்னை ஏதோ ஒரு பெரிய இரும்புப் பெட்டிக்குள் அடைத்தது போன்ற ஒருவித இறுக்கத்தை தந்துகொண்டே இருந்தன. அடுத்த நாள் இதைவிடப் பேரதிர்ச்சியாக இருக்கும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. பயணக் களைப்பில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று ‘டமார், டமார்’ என்று சத்தம். பாதித் தூக்கம் போய்விட்டது. மீண்டும் அதே ‘டமார், டமார்’ சத்தம். முழித்துப் பார்த்தேன். அவனது தந்தை இரண்டு மத்தளங்களை வைத்துக் கொண்டு ஜாகிர் உசேன் போல் தலையை ஆட்டி ஆட்டி வாசித்துக் கொண்டிருந்தார். ஒரு மத்தளம் என் காதுக்கு அருகில் இருந்தது. ஒவ்வொரு அடியும் என் மண்டைக்குள் இறங்கியது. முழித்துக் கொண்டேன். மணி அதிகாலை நான்கு. என்னை பார்த்ததும் ‘நன்றாகத் தூங்கினியா?’ என்று கேட்டுவிட்டு, ‘டமார், டமார்’ எனத் தொடர்ந்தார். விவேக் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பழக்கமாகிவிட்டது போல. அதோடு தூக்கம் ஒழிந்தது. தபேலா கச்சேரியுடன் கண்விழித்த எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஆறு மணி போல விவேக் எழுந்தான். ஒரு சொம்பு தண்ணீர் குடித்ததும் விவேக், ‘வா, வாக்கிங் போலாம். பக்கத்தில் ஒரு மைதானம் இருக்கிறது’ என்றான். அப்போதுதான் அந்த ஏரியாவை கவனித்தேன். மிக நெரிசலான ஒரு குப்பம் அது. காலா படத்தில் வருமே. அதே போன்று ஒரு இடம். துவைப்பது, அங்கேயே குளிப்பது என எல்லாமே சாலையில் தான். அந்த அதிகாலையிலேயே மக்கள் சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் போய்க்கொண்டே இருந்தார்கள். பயிற்சியின் போதே ஒரு சபதம் எடுத்திருந்தோம். டீ, காபி குடிக்கக் கூடாது என்று. இன்றளவும் அதைக் கடைபிடிக்கிறோம். ‘வந்திடுச்சி’ என்றான். ‘பிளே கிரௌண்டா?’ என்று கேட்டேன். ‘இல்லை. பாத்ரூம்.’ என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்தான். புறக்கடையில் போனவன் இரு பக்கெட்டைத் தூக்கிக் கொண்டு வந்தான். ஐந்து லிட்டர் ஏசியன் பெயிண்ட் டப்பா. ‘ஆவோ, ஆவோ’ என்று ஷாப்பிங் செல்வது போல் அழைத்தான். பின்னாடியே சென்றேன். அடுத்தத் தெரு முனையில் அடிபம்பில் இரண்டு வாளிகளிலும் தண்ணீர் நிரப்பி ஒன்றை என் கையில் கொடுத்தான். ‘கொஞ்ச நேரம் கழித்து குளித்துக் கொள்கிறேன்.’ என்றேன். ‘குளிப்பதற்கு இல்லை. பாத்ரூம் போவதற்கு’ என்று அங்கிருந்த வரிசையை காண்பித்தான். அப்போது தான் பார்க்கிறேன். மூன்று வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்தார்கள். பொது கழிப்பிடம். எல்லோர் கையிலும் ஒரு பக்கெட். முதலில் நின்று கொண்டிருந்தவன் கதவைத்தட்டி குய்யோ முய்யோ என்று ஏதோ கத்திக் கொண்டிருந்தான். ‘இங்கேயா?’ ‘ஆமாம்’ என்று கூறிவிட்டு ஒரு வரிசையில் போய் நின்று கொண்டான். என் கால்கள் அங்கேயே உறைந்துவிட்டன. என் வாழ்வில் நான் எப்போதாவது கண்டுகேட்ட அதிர்ச்சிகளையெல்லாம் தாண்டிய பயம் அப்போது என்னைச் சூழ்ந்து கொண்டது. இந்தப் பொது கழிப்பிடம் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. நான் உள்ளே இருக்கும்போது வெளியே பத்து பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே எனக்கு எதுவும் வரவில்லை. போதாக்குறைக்கு ஒரே ஒரு வாளித் தண்ணீர். இலவசமாக இதற்கு முன் சென்றவனின் நாற்றம். எனக்கு முன்னால் இருந்தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே போய் வந்தார்கள். ஆண் பெண் என இருபாலரும் ஒரே இடத்தில் தான். எனது வரிசையும் வந்தது. முடிந்த அளவு மூச்சை அடக்கிப் பார்த்தேன். முடியவில்லை. தலை சுற்றியது. வேறு வழியின்றி அணிந்திருந்த டீஷர்ட்டால் என் மூக்கையும் முகத்தையும் இறுக்கமாக மூடிக்கொண்டேன். உள்ளே நுழைந்த அந்த சில நொடிகளுக்குள், கதவைத் தட்ட ஆரம்பித்துவிட்டனர். ஒரு வழியாக வெளியே வந்த பிறகு தான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. விவேக் பாட்டு பாடிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான். குளித்துவிட்டு சாப்பிடலாம் என்றான். உனக்காக எங்கள் வீட்டில் ஸ்பெஷல் சாப்பாடு ரெடியாகிக் கொண்டிருக்கிறது என்று கூறினான். துண்டை எடுத்துக் கொண்டு புறக்கடைக்கு சென்றேன். அங்கு எதுவுமே இல்லை. வீட்டில் தனி கழிப்பறையே இல்லாதபோது, குளியலறையும் இருக்காது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். ‘எங்கே குளிப்பது?’ என்றேன். ‘இங்கே தான்’ என்று சமையலறை ஓரமாக ஒரு இடத்தைக் காண்பித்தான். முழங்கால் அளவுக்கு ஒரு மறைப்பு இருந்தது. அங்கே போய் உட்கார்ந்து குளி என்றான். போய் உட்கார்ந்தேன். அவரது அக்காவும் அம்மாவும் சமையலறையில் வேலை செய்துக் கொண்டே இருந்தனர். எனது தயக்கத்தைப் பார்த்து இருவரையும் ஹாலுக்கு போகச் சொன்னான். வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அங்கு உட்கார்ந்து குளித்தேன். வெளியே வந்து உடை மாற்றிய பின்பு என்னைச் சாப்பிட அழைத்தார்கள். அதே தாளி உணவு. இந்த முறை சப்பாத்திக்கு பதில் பூரி. கூடவே ஒரு இனிப்பு. அவரது அம்மாவும் அக்காவும் அருகிலேயே உட்கார்ந்துகொண்டு சாப்பாடு எப்படி இருக்கிறது? பிடித்திருக்கிறதா? என்று பேசிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் ஹிந்தியில் பேச, விவேக் எங்கள் இருவருக்கும் இடையில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தான். நெகிழ்வாக இருந்தது. அன்று மதியம் விவேக்கின் வீட்டை விட்டுக் கிளம்பினேன். அவனது அம்மா, ‘மும்பைக்கு நீ வந்தால் கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டும்’ என்று சிரித்துக்கொண்டே வழியனுப்பி வைத்தார். குஜராத் செல்லும் ரயிலில் அமர்ந்திருந்தேன். ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் வேகமாக மாறிக் கொண்டிருந்தன. மும்பையில் இறங்கிய நொடியிலிருந்து அடுத்தடுத்து நான் சந்தித்த சங்கடங்களையெல்லாம் விட, அந்தச் சிறிய வீட்டில் "ஆவோ, ஆவோ" என்று இன்முகத்தோடு என்னை வரவேற்ற அந்தக் குடும்பத்தின் பேரன்புதான் என் நினைவில் நிலைத்திருந்தது. ்தனைஎத்தனைமனிதர்கள் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/literature/a-heartwarming-mumbai-travelogue




