சென்னை, 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஏன் முடக்குகிறது? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. வாகன பேரணி 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மோட்டார் சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இதற்கு அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, "போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி மோட்டார் சைக்கிள் பிரசாரத்துக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்” என்று வாதிட்டார். போலீஸ் விளக்கம் போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன், தமிழ்நாடு அரசு 'நீட்' தேர்வு போராட்டங்களுக்கு எதிரானது இல்லை. இது சமூக ஊடகங்களின் காலம் ஆகும். சமூக ஊடகங்களில் தகவல் பரவினால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிடும். இதுபோன்ற போராட்டங்களால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்படும். பேரணி தொடங்க அனுமதி கோரியுள்ள இடங்கள் அனைத்துமே மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளாகும். அதனால், அனுமதி மறுக்கப்பட்டது. இந்த பேரணியில் பங்கேற்க ஒருவருக்கு அனுமதி கொடுத்தால், பின்னர் இந்த எண்ணிக்கை அதிகமாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அதனால், சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதி வழங்கும் விதமாக அந்தந்த போலீஸ் நிலையங்களை அணுகும்படி மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்தார். ஏன் தடுக்கிறது? அதற்கு நீதிபதி, "கன்னியாகுமரி முதல் சென்னை வரை பேரணி வரவேண்டும் என்றால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் அனுமதி பெற வேண்டுமா? 'நீட்' தேர்வு முடிந்து, முடிவும் வெளியாகி விட்டது. இருந்தாலும், 'நீட்' தேர்வுக்கு எதிராக போராட மனுதாரருக்கு உரிமை உள்ளது. பேச்சுரிமை, கருத்துரிமை போல போராட்டம் நடத்துவது, பேரணி செல்வது அடிப்படை உரிமையாகும். 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும், பேரணியையும் தமிழ்நாடு அரசு ஏன் முடக்குகிறது? தடுக்கிறது? இந்த மோட்டார் சைக்கிள்கள் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு ஏற்கப்போகிறதா? போக்குவரத்து நெரிசல், மக்கள் பாதுகாப்பு காரணம் கூறி பேரணிக்கு மறுத்தால், ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? மோட்டார் சைக்கிளில் வெளியேறும் புகையினால் புற்றுநோய் வரும் என்பதற்காக மோட்டார் சைக்கிள்களை தடை செய்ய முடியுமா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். உடனே, பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்க போலீஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-block-protests-against-neet-high-court-asks-tamil-nadu-government




