செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. வண்ணமயமான பட்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பட்டம் விடும் திருவிழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், சுற்றுலாத்துறை கமிஷனர் ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ. பா.விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பட்டம் பறக்கவிடும் வீரர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். இந்த விழா ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று, இந்தியாவின் பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு பட்டங்களை பறக்கவிட்டனர். பார்வையாளர்களை கவர்ந்தது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், கடற்கரை பகுதியில் வண்ணமயமான 70 பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்திய தேசிய கொடி, ஆமை, டால்பின், ஆக்டோபஸ், மிக்கி மவுஸ், ஜல்லிக்கட்டு காளை, சூப்பர்மேன், மீன்கள், டிராகன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் எல்.இ.டி. விளக்குகளுடன் ஜொலித்த பட்டங்கள் வானில் பறந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வானில் பறந்த வண்ணமயமான பட்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்ததுடன், பல்வேறு இடங்களில் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். விழாவில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் கமலக்கண்ணன், மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் அபர்ணா, நகராட்சி பொறியாளர் சுபாஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும், பட்டம் விடும் திருவிழா நடைபெறும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/international-kite-festival-in-mamallapuram-colorful-kites-delight-public




