திருவண்ணாமலை, உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், காலாவதியான பால் பாக்கெட்டுகளைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சம்பவம் ஆன்மீகப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதோஷ வழிபாடு திருவண்ணாமலையில் உலகப் புகழ பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது. அங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலையில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டின் போது, பெரிய நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்காக பக்தர்கள் வழக்கம்போல் பால் பாக்கெட்டுகளை வாங்கி வந்து கோவில் பணியாளர்களிடம் வழங்கியுள்ளனர். காலாவதியான பாலில் அபிஷேகம் அந்த பால் பாக்கெட்டுகளைக் கொண்டு அண்ணாமலையாருக்கு அபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட அந்த பால் பாக்கெட்டுகள் அனைத்தும் பல நாட்களுக்கு முன்பே, அதாவது கடந்த 8-ந்தேதி அன்றே காலாவதியானவை என்பது தெரியவந்தது. காலாவதி தேதியை சரிபார்க்காமல் கோவில் பணியாளர்கள் அந்தபாலைப் பயன்படுத்திய விவகாரம் காட்டுத்தீயாய் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. களத்தில் இறங்கிய அதிகாரிகள் இந்த தகவல் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிரடி சோதனையில் இறங்கினர். கோவில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகே உள்ள ஒரு கடையில் இத்தகைய காலாவதியான பால் பாக்கெட்டுகள் பக்தர்களுக்கு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.10,000 அபராதம் -எச்சரிக்கை விதிமீறலில் ஈடுபட்டு, காலாவதியான பாலை விற்பனை செய்த அந்த குறிப்பிட்ட கடையின் உரிமையாளருக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக ரூ.10,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், இனிவரும் காலங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் மற்றும் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் பால் பாக்கெட்டுகளின் காலாவதி தேதியை முறையாக சோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என கோவில் அதிகாரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் அண்ணாமலையாருக்கு செய்யும் அபிஷேகப் பாலை, பின்னர் தீர்த்தமாகப் பருகும் வழக்கம் உள்ளதால், இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என பக்தர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். Tiruvannamalai | காலாவதியான பாலில் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் | ஸ்பாட்டில் இறங்கிய அதிகாரிகள் — Thanthi TV (@ThanthiTV) September 25, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/abhishekam-performed-for-lord-annamalaiyar-using-expired-milk-officials-impose-fine-on-shop



