தூத்துக்குடி, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெறும் 11 நாள் ஆண்டு திருவிழாவை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தூய பனிமய மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு காவல்துறையின் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூய பனிமய மாதா பேராலயத்தின் 11 நாள் திருவிழா தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 11 நாள் ஆண்டு திருவிழா கடந்த 26.7.2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 5.8.2026 வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் 26.7.2026 (கொடியேற்ற விழா): கொடியேற் நிகழ்ச்சியன்று பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 660 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 27.7.2026 முதல் 2.8.2026 வரை: இந்த நாட்களில் தினமும் சுமார் 150 போலீசார் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாட்கள்; பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் 3.8.2026 முதல் 5.8.2026 வரை இறுதி 3 நாட்களில் 70,000 பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தினமும் 50 ஆண் மற்றும் பெண் காவலர்கள் சீருடை அணியாமல் பொதுமக்களுடன் கலந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதி 3 நாட்களில் இந்த எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். 6 கண்காணிப்பு கோபுரங்கள், 4 டிரோன் கேமராக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், முக்கிய இடங்களில் 82 தற்காலிக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 4 டிரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இதனுடன், சிறப்பு காவல் குழுவும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அவசரகால உதவி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒத்துழைப்பு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது உரிமையாளர் இல்லாமல் கிடக்கும் பொருட்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை எச்சரிக்கை திருவிழாவின் அமைதியையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்லது திருவிழாவை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-warn-of-strict-action-if-anyone-tries-to-disrupt-the-panimaya-mata-cathedral-festival-in-thoothukudi




