மேலூர், மேலூர் பகுதியில் ஆன்லைன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் புகார் அளிக்க குவிந்தனர். ஆன்லைன் செயலியில் மோசடி மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடம் பலர், எப்.கியூ.எல். நிறுவனம் என்ற நிதி நிறுவனம் சார்பில் செல்போன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக நேரில் வந்து ஆசைவார்த்தை கூறியுள்ளனர். குறிப்பாக பெண்களிடம் பேசினர். இதற்காக ஏஜெண்டுகள் செயல்பட்டனர். இந்த செயலிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் கடன் வாங்கி முதலீடு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பணத்தை இரட்டிப்பு செய்து தரவில்லை என கூறப்படுகிறது. போராட்டம் இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் மேலூரில் மதுரை- சென்னை நான்கு வழிச்சாலையில் 4 மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினர். மற்றொரு இடத்திலும் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 25 ஆயிரம் பேர் மனு இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் நேரடி மேற்பார்வையில் நேற்று 3 இடங்களில் பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளலூர் நாடு கோட்டநத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் முகாம் நடந்தது. இதில் மேலூரில் நடந்த முகாமில் 18,500-க்கும் மேற்பட்ட மனுக்களும், செட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முகாமில் 1,450-க்கும் மேற்பட்ட மனுக்களும், வெள்ளலூர்நாடு கோட்டனத்தம்பட்டி தனியார் திருமண மண்டப முகாமில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களும் பொதுமக்கள் அளித்தனர். குறிப்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நின்று புகார் அளித்தனர். நேற்று ஒரே நாளில் இந்த முகாம்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட புகார் மனுக்களை கட்டுக்கட்டாக மலை போல போலீசார் அடுக்கி வைத்திருந்தனர். கூட்டம் கூட்டமாக இந்நிலையில் மதுரை, மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் 3வது நாளாக இன்றும் புகார் கொடுக்க கூட்டம் கூட்டமாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் போலீசார் திணறி வருகின்றனர். இன்று மட்டும் இதுவரை 1,200 பேர் தங்களது புகார் மனுக்களை அளித்துள்ள நிலையில், தலா ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக புலம்பி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/victims-of-online-fraud-file-complaints-for-the-third-consecutive-day-police-struggle-to-cope




