தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடைபெற்ற 2026 ஐ.பி.எஃப் உலக சப்-ஜூனியர் பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை மதுரா கர் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியனாக வரலாறு படைத்துள்ளார். மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரியைச் சேர்ந்த 17 வயதான மதுரா, 52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று தனது அபாரமான திறமையை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியுள்ளார். 12-ம் வகுப்பு படித்து வரும் மதுரா கர், தனது உடல் எடையை விட பல மடங்கு அதிக எடையைத் தூக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். போட்டியின் போது அவரது உடல் எடை 49.35 கிலோவாக இருந்த நிலையில், மொத்தமாக 292.5 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார். ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட்லிஃப்ட் என மூன்று தனிப்பட்ட பிரிவுகளிலும் முதலிடம் பிடித்ததுடன், ஒட்டுமொத்த எடையிலும் முதலிடத்தைப் பெற்று நான்கு தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றார். மூன்று பிரிவுகளிலும் முதலிடம்! போட்டியின் ஸ்குவாட் பிரிவில் மதுரா கர் 107.5 கிலோ எடையைத் தூக்கி முதலிடத்தைப் பிடித்தார். தொடர்ந்து நடைபெற்ற பெஞ்ச் பிரஸ் பிரிவில் 60 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கி தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். இதையடுத்து டெட்லிஃப்ட் பிரிவில் 125 கிலோ எடையைத் தூக்கிய மதுரா, மூன்றாவது தங்கத்தை உறுதி செய்தார். இந்த மூன்று பிரிவுகளிலும் அவர் பதிவு செய்த எடைக மொத்தம் 292.5 கிலோவாக அமைந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பிரிவிலும் முதலிடம் பிடித்து நான்காவது தங்கப் பதக்கத்தையும் வென்றார். 49.35 கிலோ மட்டுமே உடல் எடை கொண்ட ஒரு பள்ளி மாணவி, சர்வதேச போட்டியில் 292.5 கிலோ மொத்த எடையைத் தூக்கியிருப்பது அவரது கடின உழைப்பு, பயிற்சி மற்றும் மன உறுதியை வெளிப்படுத்துகிறது. இளம் வயதிலேயே உலக அளவில் தனது திறமையை நிரூபித்துள்ள மதுராவின் இந்த சாதனை இந்திய பவர்லிஃப்ட்டிங் விளையாட்டுக்கு மேலும் ஒரு பெருமையாக அமைந்துள்ளது. தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் மதுரா மதுரா கர் சர்வதேச அளவில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். 2024-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற அவர், அடுத்த ஆண்டும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தார். 2025ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப்பிலும் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். மேலும், சீனாவில் நடைபெற்ற ஆசிய பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் மதுரா கர் வென்றுள்ளார். இந்த வெற்றிகள் அவரது சர்வதேச போட்டி அனுபவத்தையும் தொடர்ந்து மேம்பட்டு வரும் திறமையையும் காட்டுகின்றன. உலக அரங்கில் புதிய இலக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபரிதாபாத்தில் நடைபெற்ற தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் மதுரா வெற்றி பெற்றார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்ச்சியாக பதக்கங்களைக் குவித்து வரும் அவர், இளம் வயதிலேயே பவர்லிஃப்ட்டிங் உலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியுள்ளார். பள்ளிப் படிப்புடன் இணைந்து கடுமையான பயிற்சியிலும் கவனம் செலுத்தி வரும் மதுரா, எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் பயணித்து வருகிறார். சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 17 வயதிலேயே உலக சாம்பியன் பட்டத்தை வென்று நான்கு தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்துள்ள மதுரா கர், பவர்லிஃப்ட்டிங் விளையாட்டில் இந்தியாவின் அடுத்த தலைமுறை நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://sports.vikatan.com/madhura-kar-from-india-wins-4-gold-medals-in-powerlifting-championships




