சென்னை, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்யவும் தடை விதித்துள்ளது. செந்தில் பாலாஜி தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். டாஸ்மாக் முறைகேடு பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. முன்ஜாமீன் தள்ளுபடி இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக பழைய வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார்கள். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவரை கைதுசெய்யக் கூடாது.’ என வாதிட்டார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டாஸ்மாக் வழக்கில் 100 கோடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் வழக்கின் விசாரணைக்கு பல்வேறு வழிகளில் தடையை ஏற்படுத்தினார். அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளது.’ என வாதிட்டார். கைது செய்ய தடை இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும். என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கூறினர். அத்துடன், செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அவரை கைது செய்யவும் தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நீதிபதிகள், நிபந்தனைகளை மீறினால் முன் ஜாமீனை ரத்துசெய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji-arrest-stayed




