`சட்டம் தன் கடமையைச் செய்யும், ஆனால் சில நேரங்களில் அது தூங்கிவிடும்; எனினும் இறுதியில் விழித்துக்கொள்ளும்' என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கொலைக் குற்றவாளி, பரோலில் வெளியே வந்து, 40 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து, அரசுப் பள்ளி ஆசிரியராகி, `சிறந்த ஆசிரியர்' விருதும் பெற்று, ஓய்வூதியமும் வாங்கி வாழ்ந்த பிறகு, தனது 77-வது வயதில் மீண்டும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ள இச்சம்பவம், நிர்வாக அமைப்பின் அலட்சியத்தையும் சட்டத்தின் பிடியையும் ஒருசேரப் படம் பிடித்துக் காட்டுகிறது. சிறந்த ஆசிரியரான ஆயுள் தண்டனைக் கைதி sandela-veeranna 1970-களின் இறுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேலா வீரண்ணா என்பவருக்கு, 1983-ம் ஆண்டு வாரங்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனை பெற்று வெறும் 6 மாதங்கள் மட்டுமே அவர் சிறையில் கழித்தார். 1983 டிசம்பர் மாதம் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு, பின்னர் அது 1984 மார்ச் 17 வரை நீட்டிக்கப்பட்டது. மார்ச் 18, 1984 அன்று அவர் மீண்டும் சிறையில் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் வீரண்ணா சிறைக்குத் திரும்பவில்லை; காற்றில் கரைந்தது போல் மாயமானார். சிறையை விட்டுத் தப்பிய வீரண்ணா காடுகளிலோ அல்லது வேறு மாநிலத்திலோ ஒளிந்து வாழவில்லை; மாறாக, சமூகத்தின் மத்தியில் மிகத் தைரியமாக ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். தனது குற்றப் பின்னணியை மறைத்து, ஆந்திரப் பிரதேச அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆந்திரா/தெலங்கானா எல்லைப் பகுதிகளில் பணியாற்றி, மாணவர்களுக்கு நற்போதனை செய்யும் குருவாக வலம் வந்தார். இவருடைய சிறப்பான பணிக்காக 2004-ம் ஆண்டு ஆந்திர அரசிடமிருந்து `சிறந்த ஆசிரியர்' விருதையும் பெற்றார். 2013-ம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து பணி ஓய்வு பெற்று, அரசு ஓய்வூதியத்தையும் முறைப்படி பெற்று வந்தார். சிறந்த ஆசிரியரான ஆயுள் தண்டனைக் கைதி sandela-veeranna மகாபூபாபாத் மாவட்டத்தின் தந்தலப்பள்ளி கிராமத்தில், ஓய்வுபெற்ற மற்றொரு அரசு ஊழியரான தனது மனைவியுடன் கௌரவமான குடும்பத் தலைவராக வாழ்ந்து வந்தார். இவர்களது மகன் லண்டனில் நிரந்தரக் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு விழித்த சட்டம் (மே 2024) நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பரோல் தலைமறைவுக் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகத் தெலங்கானா சிறைத்துறை அமைத்த சிறப்பு அதிரடிப்படை, பழைய ஆவணங்களைத் தூசு தட்டியது. மகாபூபாபாத் காவல்துறையினரின் உதவியுடன், 2024 மே 16 அன்று 77 வயதான வீரண்ணாவை அவரது வீட்டில் வைத்து அதிரடிப்படையினர் கைது செய்தனர். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஹைதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட வீரண்ணாவை வயது முதிர்வு, கடுமையான உடல்நலக் குறைவு மற்றும் கருணை அடிப்படையில் பரோலில் விடுவிக்கக் கோரி அவரது மனைவி சந்தேலா சரம்மா தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். "நாங்கள் 40 ஆண்டுகளாக வெளிப்படையாகவே கிராமத்தில் வாழ்ந்தோம். காவல்துறை எங்களைத் தேடி வரவே இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனையைத் தொடர்வது இயற்கை நீதிக்கு எதிரானது" என்று அவரது மனைவி வாதிட்டார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி டி. மாதவி தேவி மனுவைத் தள்ளுபடி செய்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார்: "குற்றப் பின்னணியை மறைத்து அரசு வேலையில் சேர்ந்து, வாழ்வின் பொற்காலத்தை தண்டனையின்றி கழித்ததே வீரண்ணா செய்த திட்டமிட்ட ஏமாற்று வேலை என்பதை நிரூபிக்கிறது. அவர் தலைமறைவாக இருந்த காலம் தண்டனைக் காலமாக மாறாது. எஞ்சிய ஆயுள் தண்டனையை அவர் சிறையில்தான் கழிக்க வேண்டும். சிறையிலேயே அவருக்கான மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்."என்றார். சிறந்த ஆசிரியரான ஆயுள் தண்டனைக் கைதி sandela-veeranna 40 ஆண்டுகளாக ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் விட்ட சிறைத்துறையின் மெத்தனத்தைக் கடுமையாகக் கண்டித்த நீதிமன்றம், பரோலில் செல்பவர்களைக் கண்காணிக்கத் தனி நடைமுறைகளையும் சிறப்புப் படைகளையும் உருவாக்குமாறு உத்தரவிட்டது. சினிமாக் கதைகளில் மட்டுமே சாத்தியம் என நாம் நினைக்கும் பல சம்பவங்கள் நிஜத்திலும் நடக்கின்றன என்பதற்கு சந்தேலா வீரண்ணாவின் வாழ்க்கை ஒரு பெரும் உதாரணம். அரசு நிர்வாகத்தின் பின்னடைவுகளையும் ஓட்டைகளையும் பயன்படுத்தி 40 ஆண்டுகள் ஒருவரால் சமூகத்தில் கௌரவமாக வலம் வர முடிந்தாலும், இறுதியில் "குற்றம் செய்தவர் ஒருபோதும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது" என்ற சட்டத்தின் அடிப்படை விதியை இந்த இறுதித் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/trending/sandela-veeranna-parole-murder-convict-teacher-arrested-40-years




