சென்னை, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சாக்கியா அருகே காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் மரிமங்கலா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அடிக்கடி வேட்டைக்காரர்கள் புகுந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். இதனால் வனப்பகுதியில் ரோந்து பணியை வனத்துறையினர் அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் சாக்கியா வனப்பகுதியில் மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு அவர்கள் சென்றபோது வனத்துறையினர், வேட்டைக்காரர்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அந்த சமயத்தில் வேட்டைக்காரர்கள் சுட்டதில் வனக்காவலர் ஒருவர் காயம் அடைந்தார். பின்னர் வேட்டைக்காரர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதனால் அவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். தமிழர்கள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் ஹனூர் அருகே தோமியார்பாளையாவை சேர்ந்த அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் என்பதும் அவர்களின் பூர்வீக தமிழகம் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் வனத்துறையினர் 3 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றதை அறிந்து அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே சாக்கியா, தோமியார்பாளையா கிராம மக்கள், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். வழக்கு தொடர வேண்டும் இந்நிலையில் கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் மானை வேட்டையாட வந்தார்கள் என்று கர்நாடக அரசு பழிபோடுவதை தமிழ்நாடு அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா? இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கருத்து என்ன? வனத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்குழுவை அனுப்புக. கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்குப்பதிந்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-killed-in-an-encounter-in-karnataka-what-is-the-tamil-nadu-governments-stance-seeman-asks




