துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநாகர் தல் அவிவ் நோக்கிச் சென்ற flydubai விமானத்தில் விமானிகளுக்கிடையே நடந்த தகராறில் விமானம் சவூதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியான செய்தியில், flydubai நிறுவனத்திற்குச் சொந்தமான ‘FZ1073’ பயணிகள் விமானம், துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரம் வானில் பயணித்தது. சவூதி அரேபியா வான்வெளியில் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென இரண்டே நிமிடங்களில் 17,400 அடிகள் சரிந்து 16,600 அடி உயரத்திற்கு இறங்கியது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் அலறியதை அடுத்து, விமானத்தில் ஆபத்து நிலைமையை உணர்த்தும் சர்வதேச அவசரகாலக் குறியீடு '7700' மற்றும் விமானம் கடத்தப்பட்டதைக் குறிக்கும் '7500' ஆகிய சிக்னல்கள் அனுப்பப்பட்டன. flydubai விமானம் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இந்த ஆபத்து எச்சரிக்கையைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உடனடியாக நடுவானில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டன. முதற்கட்டமாக விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்ட போதிலும், பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் கடத்தல் முயற்சி எதுவும் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் இரண்டு விமானிகளுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு விமானி, விமானத்தை வேண்டுமென்றே கீழே வீழ்த்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், அதை மற்றொரு விமானி தடுத்துப் போராடியதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலின்போது ஒரு விமானி கத்தியால் குத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை இஸ்ரேல் அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. flydubai விமானம் இந்தச் சலசலப்பைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள ‘தபூக்’ (Tabuk) என்ற சிவில் மற்றும் ராணுவ விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 180 இஸ்ரேலிய பயணிகள் உட்பட அனைவரும் விமானத்திற்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். விமானத்தைச் சுற்றி சவூதி பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இஸ்ரேலுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். flydubai நிறுவனமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்‘ ஓர் ஏமாற்று விமானம் - ட்ரம்ப் கதையை முடிக்கப் பார்த்ததா ஈரான்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/trending/viral/the-incident-involving-a-mid-air-altercation-between-flydubai-pilots-has-caused-a-stir



