சிவகங்கை, சிவகங்கை அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டம் மற்றும் ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. பழங்கால கற்கள் சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே உள்ள பிரவலூர் கிராமத்தில் பழங்கால கற்கள் இருப்பதாக இக்கிராமத்தை சேர்ந்த சரவணன், அஜய், மதிச்செல்வம், செந்தூர், பாலசுப்பிரமணியன், மணி ஆகியோர் அளித்த தகவலின் பேரில் அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் வேலாயுதராஜா களஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கற்கள் ஆனது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங் கற்கால ஈமச்சின்னங்கள் மற்றும் கல்வட்டம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கூறியதாவது:- பிரவலூர் கிராமத்தின் வடக்குப்பகுதியில், கடம்பன்குடி கண்மாய்க்கு தெற்கு பகுதியில் பரந்துவிரிந்த ஒரு மேட்டுப்பகுதியும், அதன் அருகில் வறண்ட நிலையில் ஒரு ஓடையும் காணப்படுகிறது. அதன் மேற்பரப்பில் ஏராளமான கல்வட்டங்களும், ஈமத்தாழிகளும் காணப்படுகின்றன. மண் அரிப்பு காரணமாக பெரும்பாலான ஈமத்தாழிகள் வெளியில் நன்கு தெரிகின்றன. மேலும் அதிகமான கல்வட்டங்களும், 2 குத்துக்கற்களும் காணப்படுகின்றன. மேலும் ஆங்காங்கே உடைந்த கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகளும், இரும்புக்கசடுகளும், குவார்ட்ஸ் வகைக்கற்களும் காணப்படுகின்றன. இவை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இறந்தவர்களை புதைத்த இடத்திலோ அல்லது அவரது எலும்புகளை புதைத்த இடத்திலோ பெரிய கற்களை கொண்டு எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்களை, பெருங்கல் சின்னங்கள் என கூறுகிறார்கள். பெருங்கற்கால சின்னங்கள் இங்கு இரும்பை உருக்கி கருவிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் பிரவலூரில் உள்ள இப்பகுதியில் இரும்பு கசடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவை சிவகங்கை மாவட்ட தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் விரிவான ஆய்வு செய்வ தன்மூலம் மேலும் அதிக தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/3000-year-old-burial-monuments-and-a-stone-circle-discovered-near-sivaganga




