தூத்துக்குடி, தூத்துக்குடியில் கிரேட் காட்டன் ரோட்டில் உள்ள கடை வாசலில் சாலையோரம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனநலம் பாதிப்பு தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த முத்துமாலை மகன் சேகர் (வயது 50). இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநல பாதிப்புக்குள்ளான சேகர், வீட்டை விட்டு வெளியேறி சிவன் கோவில் அருகிலும் சாலையோரங்களிலும் தங்கி உணவருந்தி வந்துள்ளார். கார் மோதி உயிரிழப்பு இந்த நிலையில் சேகர் நேற்று இரவு கிரேட் காட்டன் ரோட்டில் உள்ள ஓர் இட்லி கடை முன்பாக படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலையில் அப்பகுதியில் வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் ஆய்வு இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். விசாரணை அதில் சேகர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த இடத்தில் வெள்ளை நிற கார் ஒன்று பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய வெள்ளை நிற கார் மற்றும் அதை ஓட்டி வந்தவர் யார் என்பது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/man-sleeping-on-the-roadside-dies-after-being-hit-by-car-in-thoothukudi




