புதுடெல்லி, ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற உள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு நாடு முழுவதும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கேட்டுக்கொண்டுள்ளார். தொடக்க விழா 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகச நிகழ்ச்சிகள் மற்றும் லேசர் காட்சிகள் இடம்பெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக 45 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்களது தேசியக் கொடிகளுடன் அணிவகுத்து செல்ல உள்ளனர். இந்திய அணிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் செல்கின்றனர். 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் செப்டம்பர் 19 (இன்று) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், 37 விளையாட்டுப் பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 45 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த வீரர்கள், 43 விளையாட்டுகளில் 469 பதக்க நிகழ்வுகளில் போட்டியிடுகின்றனர். டோக்கியோவில் 1958-ம் ஆண்டும், ஹிரோஷிமாவில் 1994-ம் ஆண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய ஜப்பான், தற்போது 3-வது முறையாக இந்தப் போட்டியை நடத்துகிறது. 107 பதக்கங்கள் கடந்த 2023-ம் ஆண்டு ஹேங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. இந்த முறையும் சிறப்பாக செயல்பட்டு அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்புடன் இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். ரிஷப் பண்ட் வேண்டுகோள் இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று ரிஷப் பண்ட் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது: “ஆசிய விளையாட்டுப் போட்டிகளைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளேன். நமது இந்திய வீரர்களுக்குப் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவளிப்போம். அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். போட்டியின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு நமது முழு ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்குவோம்” என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/give-them-a-big-cheer-and-a-lot-of-support-rishabh-pant-urges-fans-to-back-indian-athletes-ahead-of-asian-games-2026




