தஞ்சாவூர், குட்கா வழக்கை முறையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இரவு ரோந்து பணி தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் அருகே இரும்புதலை பகுதியில் காரில் இருந்து குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனைக்காக சப்ளை செய்யப்படுவதாக கடந்த 10-ந் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் (வயது45) தலைமையிலான போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் தன்னுடன் ஏட்டு கவுதமன் (35), போலீஸ்காரர் அழகர்சாமி (37) ஆகியோரை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். போதைப்பொருள் பறிமுதல் அங்கு குட்கா போன்ற போதைப்பொருட்களுடன் நின்று கொண்டிருந்த அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (45), மற்றும் முருகன் (48), ஆகிய 2 பேரையும் பிடித்து அவர்களிடம் இருந்து சுமார் 73 கிலோ குட்கா போன்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் குட்காவுடன் 2 பேரையும் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். மறுநாள் காலையில் அவர்களிடம் எந்தவித விசாரணையும் செய்யாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து அனுப்பிவிட்டனர். ஆதாயம் அடையும் நோக்கத்தில் குட்கா பறிமுதல் செய்த வழக்கில் சரியாக விசாரணை செய்யாததுடன், குட்கா கடத்தியவர்களுக்கு ஆதரவாக போலீசாரே செயல்பட்டு இருப்பதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கவனத்திற்கு உளவுபிரிவு போலீசார் கொண்டு சென்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குட்கா கடத்தியவர்களிடம் சரியாக விசாரணை நடத்தாமல், அவர்களிடம் ஆதாயம் அடையும் நோக்கத்தில் போலீசாரே விடுவித்தது தெரியவந்தது. காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் உடனே குட்கா கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குட்கா கடத்தியதாக ஆறுமுகம், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் கடந்த 13-ந் தேதி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, போலீஸ் இன்ஸ் பெக்டர், அவருக்கு துணையாக இருந்த ஏட்டு, போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரை செய்தார். சஸ்பெண்ட் அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஏட்டு கவுதமன், போலீஸ்காரர் அழகர்சாமி ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் உத்தரவு பிறப்பித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/aiding-gutkha-smugglers-3-police-personnel-including-an-inspector-suspended




