வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரபாபு, வயது 52. இவர் அந்த ஊராட்சியின் முன்னாள் மன்றத் தலைவராக இருந்தவர். தற்போது, இவரின் மனைவி புவனேஸ்வரி கொசவன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர் சமீபத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்து தலைவர் புவனேஸ்வரிடமும், அவரின் கணவர் சந்திரபாபுவிடமும் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் அமர்ந்த நாற்காலிகளை தூக்கி வெளியே போட்டு தீ வைத்து எரித்திருக்கிறார் சந்திரபாபு. நாற்காலிகளை எரித்ததை சந்திரபாபுவே தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறார். தீ வைக்கப்பட்ட நாற்காலி அந்த வீடியோவில் பக்கத்திலிருந்த நபரிடம் பேசும் சந்திரபாபு `காலனிக்காரனுங்க உட்கார்ந்துட்டானுங்க. அதான் நாற்காலியைக் கொளுத்திட்டேன்’ என்று கூறியதோடு, அச்சில் ஏற்ற முடியாத தகாத வார்த்தைகளாலும் பட்டியல் சமூக மக்கள் பற்றிப் பேசுகிறார். சுமார் 2 நிமிடங்கள் நீடிக்கும் அந்த வீடியோவில் நாற்காலி முழுவதுமாக எரிந்து உருகிப்போகிறது. இந்த வீடியோவை சந்திரபாபுவே சமூக வலைதள பக்கங்களிலும் பதிவு செய்திருக்கிறார். இதனால், அப்பகுதியில் சமூக பதற்றமும் ஏற்படும் அச்சம் உருவானது. இதையடுத்து, `சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்’ எனக் கருதிய கிராம நிர்வாக அலுவலர், கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், சந்திரபாபு மீது `வன்கொடுமை’ தடுப்பு சட்டப்பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/chair-set-on-fire-case-registered-against-former-panchayat-president-under-the-prevention-of-atrocities-act




