கடலூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரவுடி ஆனந்தராஜ் (36). இவருக்கும், கீழ்வடக்குத்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரௌடி கோபி (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கோபி மீது ஏற்கெனவே 2 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 16-ம் தேதி கோபி தனது கூட்டாளிகள் 16 பேருடன் சென்று ஆனந்தராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், இந்திரா நகரைச் சேர்ந்த நரேஷ்குமார் (26) சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து உயிரிழந்த நரேஷ்குமாரின் தாய் அம்மு (47) அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய 16 பேரில் 14 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ரவுடி கோபியை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே, முத்தாண்டிக்குப்பம் பகுதியில் ரவுடி கோபி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெய்வேலி நகர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட புலவன்குப்பம் சாலையில் உள்ள ஒதியடிவீரன் கோயில் அருகே விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த கோபியை போலீசார் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற கோபி, தன்னிடம் இருந்த அரிவாளால் போலீசாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலைமைக் காவலர் பாண்டியராஜன் (33) இடது கையிலும், மற்றொரு தலைமைக் காவலரான விஜயலாதசோழன் (36) இடது முழங்கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோபியைத் தாக்குதலை நிறுத்தும் வகையிலும், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தனது கைத்துப்பாக்கியால் கோபியின் வலது முழங்காலி இரண்டு முறை சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்து கீழே விழுந்த கோபியை போலீஸார் மடக்கிப் பிடித்து நெய்வேலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கோபிக்கு நெய்வேலி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த தலைமைக் காவலர்கள் பாண்டியராஜ் மற்றும் விஜயலாதசோழன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-shot-and-apprehended-a-rowdy-who-had-been-absconding-in-a-murder-case




