விநியோகிக்க டெண்டர்சிமெண்ட் ஓயாமல் நடந்த பெரும் விவாதங்களுக்குப் பிறகு மேட்டூரில் அணை கட்ட, சிமெண்ட் பயன்படுத்துவது என்ற முடிவெடுக்கப்பட்டு அதை விநியோகிக்க டெண்டர் கோரப்பட்டது. இதன் அடிப்படையில், உறுப்பினர் ஏ. ரங்கநாத முதலியார் சில கேள்விகளை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த அரசாங்கம், “ஷஹாபாத் சிமெண்ட் நிறுவனம்” 1,53,000 டன் சிமெண்டை டன் ஒன்றுக்கு ரூ.31.70. ஷஹாபாத் விலையில் வழங்கும். ரயில் கட்டணம் உட்பட, அரசாங்கத்திற்கு ஏற்படும் மொத்த செலவு சுமார் ரூ. 82,62,000 என்று அரசு அவையில் தெரிவித்தது. மேலும் இரண்டு டெண்டர்கள் பெறப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் விதிமுறைகள் “ரகசியமானவை” என்பதால் வெளிப்படுத்த இயலாது எனவும் கூறப்பட்டது. ஏற்கப்பட்ட ஷஹாபாத் நிறுவன டெண்டர் விகிதங்கள், மற்ற இரண்டு டெண்டர்களின் விகிதங்களை விட குறைவானவை என அரசு தெரிவித்தது. இந்த நிறுவனம் இன்றைய சுதந்திர இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் அமையப் பெற்றிருந்தாலும் பிரிட்டிஷ் காலத்தில் “ஷஹாபாத்” மெட்ராஸ் மாகாணத்தில் உள்ளடங்கிய ஊராக இருந்தது. மேட்டூர் கட்டுமானத்துக்கு சிமெண்ட் அங்கிருந்து ரயில் மூலம் தொடர்ந்து கொண்டு வரப்பட்டது. உறுப்பினர்கள் மேலும் கேட்ட கேள்விகளுக்கு, இது இந்திய நிறுவனம் என்றும், நிர்வாக இயக்குநர் இந்தியர் என்றும் தெரிவிக்கப்பட்டது. டெண்டரில் கலந்து கொண்ட மற்ற நிறுவனங்களின் பெயர்கள் ரகசியம் என்பதால் வழங்க முடியாதெனவும் அரசு மறுத்தது. மேலும், ஷஹாபாத் நிறுவனத்தினர் பெயரளவினர் அல்லவா என்றும் உறுப்பினர் சி.வி.வி கேட்க, அப்படி சந்தேகிக்க காரணமே இல்லை என அரசு தரப்பில் பதில் அளித்தார் சர் நார்மன் மார்ஜோரி பாங்க்ஸ். இது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓரளவு நிம்மதி அளித்தது. ஏனெனில் அப்போது “இங்கிலாந்து நிறுவனங்களே அதிகம் ஆதாயம் அடைகின்றன” என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது தவிர்க்கப்பட்டது. இந்த விவாதம், டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையும், அரசு ரகசியம் காக்கும் அணுகுமுறையை எடுத்துக் கொண்டதையும் வெளிக்காட்டியது. உறுப்பினர்களின் கூர்மையான கேள்விகள் மூலம், திட்டத்தின் பின்னணியில் மறைந்து கிடந்த சந்தேகங்கள், குறைகள் அனைத்தும் சட்டமன்ற மேடையில் வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்தன. அணைக்காக நிலங்களை கையகப்படுத்துதல் காவிரி–மேட்டூர் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, நீர்த்தேக்கத்திற்காக பெருமளவு நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது நாம் அறிந்ததே! இந்நிலங்கள் பெரும்பாலும் வளமான நிலங்களாக இருந்தன. நிலங்களை இழந்தவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்பதால், அவர்களுக்கு மாற்று நிலங்கள் வழங்கப்படுமா என்ற கேள்வி சட்டமன்றத்தில் எழுந்தது. “சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா “வனவாசி” என்ற ஊருக்கருகில் உள்ள காட்டுப் பகுதியில் 620 ஏக்கர் நிலத்தை காடழிப்பு செய்து மாற்று நிலங்கள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு காட்டுப் பகுதியை காடழிப்பதற்கான முன்மொழிவுகள் பரிசீலனையில் உள்ளன” என்று அவையில் தெரிவிக்கப்பட்டது. இது பின்னாளில் செயல்படுத்தப்பட்டது. வாடகை விதிமுறைகள் “கையகப்படுத்தப்பட்ட போது உண்மையான குடியிருப்பாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிலங்கள் முதன்மையாக வாடகைக்கு வழங்கப்பட வேண்டும். அந்த இடங்கள் நீரில் மூழ்கும் வரை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவரை, மேட்டூர் சட்டமன்ற பிரதிநிதிகள் குழுவின் பரிந்துரையை ஏற்று, வாடகைத் தொகை அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டின் 4% ஆக மட்டுப்படுத்தப்பட்டது. இந்த பின்புலத்தில்தான் அந்த கிராமங்களில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளை நீர் சூழ்ந்த இறுதி நாட்கள் வரை அங்கே வசித்து பின் தங்கள் உடமைகளுடன் காலி செய்து வேறு இடத்திற்கு புலம் பெயர்ந்தனர்” மேலும், சட்டமன்றத்தில், சில கேள்விகளுக்கு அளித்த பதில்களிலிருந்து கீழ்க்கண்ட செய்திகளையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. முன்மொழியப்பட்ட நீர்த்தேக்கத்தின் மொத்த பரப்பளவு சுமார் 60 சதுர மைல்களாக இருக்கும். புதிய நீர்ப்பரப்பில் உள்ள தனியார் சொத்தின் அளவை துல்லியமாக கொடுக்க முடியாது. தோராயமாக 19,000 - 20,000 ஏக்கர்கள் வரை இருக்கும். அதன் மதிப்பு ஏக்கருக்கு ரூ. 100. நீர்த்தேக்கம் நிரம்பினால் ஒகேனக்கல்லில் உள்ள நீர், கடல் மட்டத்திலிருந்து +790 MSL இருக்கும் போன்ற தகவல்கள் இதில் அடங்கும். 1928-1929 நிதியாண்டுக்கான தீர்மானங்கள் 1928-ம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி, அரசு சார்பில் சர் நார்மன் மார்ஜோரி பேங்க்ஸ், ரூ 235.17 லட்சம் வரையிலான செலவினத் தொகை பாசனம்-பொதுப்பணி மற்றும் மின்சாரத்திற்காக வழங்க வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்தார். உறுப்பினர் ஜே.ஏ.சல்தானா அதை எதிர்த்து ரூ100/- குறைக்க வெட்டுத் தீர்மானத்தை கொண்டு வந்தார். அவர் மேலும், “மூலதன செலவினங்களில் மிக முக்கியமானது “காவிரி- மேட்டூர் திட்டமாகும். தற்போது ரூபாய் 7 கோடியே 17 லட்சம் செலவாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 5 கோடியில் இருந்து இப்போது ஏழு கோடி வரை தாவி இருக்கிறது. இதில் காரணங்கள் எதுவாக இருந்தாலும் கவலை அளிப்பதாக உள்ளது. இதை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த “மெட்ராஸ் மெயில்” நாளிதழுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பல லட்சம் ரூபாய்கள், வெறுமனே அனாக்கள் மற்றும் பைசாக்கள் போன்று சிறிய அளவில் பேசப்படுகிறது. இதே நிலை நீடித்தால் இந்த அணையின் மதிப்பீடு ரூபாய் பத்து கோடியை தாண்டும் என்று அஞ்சுகிறோம். வீணான செலவினங்களை குறைக்க வேண்டும். திருத்தப்பட்ட மதிப்பீடுகளை தந்து அவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். AI மற்ற உறுப்பினர்கள் உரையாற்றும் போது, செலவு உயர்வு காரணமாக மக்களுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்படும் என்றும், பாசன நீர் எல்லா மாவட்ட மக்களுக்கும் சமமாக பிரித்தளிக்க வேண்டும் எனவும் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். மேலும் பட்டுக்கோட்டையில் குறைந்தது 1000 குளங்கள் உள்ளன. இதன் மூலம் மேட்டூர் கால்வாயில் இருந்து நீர் பெறப்பட்டு மீன் வளத்துறையை மேம்படுத்துவது மற்றும் வேறு துணை தொழில்கள் மூலம் வருவாயை கூட்டும் யோசனைகளைத் தெரிவித்தனர். “இந்த அணை திட்டத்தால் தஞ்சாவூர் மட்டுமே பயன்பெறும். அவ்வாறின்றி கோயம்புத்தூர், சேலம், திருச்சி மாவட்ட விளை நிலங்களுக்கும் பயன்பட்டால் அதுவே புத்திசாலித்தனம்” என்றார், ஒரு உறுப்பினர். “வருவாயை விட மனிதாபிமானம் முக்கியம் அதையும் கவனியுங்கள்” என்றார் மற்றொரு உறுப்பினர். “நாட்டில் பஞ்சம் நிலவும் இந்த நேரத்தில் அரசாங்கம் இந்த மேட்டூர் திட்டத்தை புத்திசாலித்தனமாக தொடங்கியுள்ளது” என ஒரு உறுப்பினர் பாராட்டு தெரிவித்தார். “ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு இது நன்மை பயக்கும்” என்று ஒருவர் கூறினார். பட்டுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அப்போது எண்ணிக்கையில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பரிதாபத்திற்கு உரியதாக இருந்துள்ளது. கூடவே பஞ்சம் நிலமையை மோசமாக்கியது. இந்த சூழ்நிலையில்தான், பட்டுக்கோட்டை வழியாக புதிதாக கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு சென்றால் அந்த மக்கள் வாழ வசதி ஏற்படும் என்று திட்ட ஆரம்பத்தில் அங்கு கால்வாய் வெட்டி கொண்டு செல்ல திட்டத்தில் சேர்க்கப்பட்டது. “நீண்ட கால நம்பிக்கையை ஏற்படுத்தும் திட்டமாக இருக்க வேண்டும் என்றும் இந்த மாகாண மக்கள் மற்றும் இந்த சபையின் ஏகோபித்த ஒப்புதலை இந்த திட்டம் பெறவில்லை” என சாடினார் மற்றொரு உறுப்பினர். இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் எஸ்.சத்தியமூர்த்தி, சி.வி.வெங்கட்ரமண அய்யங்கார், முனிசாமி பிள்ளை, டி எம் நாராயணசாமிப் பிள்ளை, டாக்டர்.பி.எஸ். மல்லையா, எஸ்.முத்தையா முதலியார், திவான் பகதூர் ஆர்.என். ஆரோக்கியசாமி முதலியார், கே.கோட்டி ரெட்டி, எஸ்.அற்புத சாமி உடையார், ஜி. ஹரி சர்வோத்தமராவ் போன்றவர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். குறிப்பாக இந்த விவாதம் மிகவும் நீண்ட நேரத்துக்கு விரிவாக ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்தனர். மக்களின் வாழ்வாதாரத்துக்கு மட்டுமே முன்னுரிமை தந்து திறம்பட இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் என்ற அக்கறையுடன் மிகவும் விரிவாக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர். இடம் கருதி மிகவும் சுருக்கமாக இங்கே தரப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் அறியவும். நீரில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலஸ்தான கோபுரம், பின்னால் நந்தி கோபுரம் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் விவாத கேள்விகளுக்கு நிதி வருவாய் மற்றும் சட்டப் பொறுப்பில் இருந்த சர்.மார்ஜோரி பேங்க்ஸ் இறுதியாக பதிலளித்தார். “கோயம்புத்தூருக்கு கால்வாய் உருவாக்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. சேலம் நில மட்டம் காவிரி ஆற்றில் இருந்து மிகவும் உயரத்தில் (சுமார் 400 அடி) அமைந்துள்ளதால், அங்கு கால்வாய் அமைப்பதில் நடைமுறை சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன என்றும் இவை கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும் என்றும் விளக்கினார். இந்த தீர்மானம் குறித்து பல உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தனர் என்றும் தனது முன்னோடி சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்களின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது என்றும் சர். மார்ஜோரி பாராட்டினார். தீர்மானம் குறித்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வெட்டுத் தீர்மானம் தோல்வியடைந்தது. அதனால் மானிய கோரிய கோரிக்கை நிறைவேறியது. காவிரி பாலம் – பொதுமக்கள் பயன்பாடு மறுப்பு தொடர்பான விவாதம் மேட்டூரில் காவிரி நதியின் மீது புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு, அதன் பயன்பாட்டை பற்றிய கேள்விகள் பலமுறை சட்டமன்றத்தில் எழுந்தன. திரு. சி.வி. வெங்கடரமண அய்யங்கார் அவர்கள், பொதுமக்கள் அந்தப் பாலத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதால் ஏற்படும் சிரமங்களை சுட்டிக்காட்டினார். அப்போது பொதுமக்கள் அந்த பாலத்தை பயன்படுத்த தடை உத்தரவு அமலில் இருந்தது. உறுப்பினர் சி.வி.வி. சில முக்கியமான கேள்விகளை முன்வைத்தார்: அந்தப் பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் நதியை கடக்க சிரமப்படுகிறார்கள். பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார். அரசாங்கத்தின் பதில்: இதுவரை அரசாங்கத்திற்கு எந்த விண்ணப்பமும் வரவில்லை. பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் தலைமை பொறியாளர் மற்றும் வருவாய் வாரியத்திடமிருந்து ஒரு விரிவான அறிக்கையை கோரியுள்ளதாக விளக்கப்பட்டது. இதிலிருந்து தெளிவாக தெரியவருவது, புதிய பாலம் அப்போது அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே இருந்தது என்பதே! ஓரளவு அணை கட்டுமானத்திற்கான பொருட்களின் போக்குவரத்து குறைந்த போது அந்த காவிரி பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இயந்திரங்கள் கொள்முதல் மற்றும் அதிகாரிகள் குறித்த சந்தேகம்: சட்டமன்ற அரங்கம் – 28 பிப்ரவரி 1929: உறுப்பினர் ஜே. ஏ. சல்தானா எழுப்பிய கேள்வி: “மேட்டூர் திட்டத்தின் சமீபத்திய திருத்தப்பட்ட மதிப்பீடுகள், வருவாய்–செலவுகள், அதிகப்படியான செலவுகள், மற்றும் இயந்திரங்கள் ஆர்டர் செய்யப்பட்ட நிறுவனங்கள் பற்றிய விவரங்களைக் கொண்ட அறிக்கையை சபையின் முன்வைக்க முடியுமா? மேலும், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் விளம்பரம் செய்து ஒப்பு நோக்கி மலிவான அதேசமயம் தரம் வாய்ந்த இயந்திரங்கள் வாங்க முயற்சி செய்யப்பட்டதா? எந்த நிறுவனங்கள் டெண்டர் செய்தன, எவை ஏற்றுக்கொள்ளப்பட்டன? இடம் முழுவதும் வண்டல் மண் படிந்த நிலம் கடைசியாக, ஏற்கனவே அந்த நிறுவனங்களில் பணியாற்றியவர்களை அரசு ஏன் அதிகாரிகளாக நியமித்தது என்பதை குறித்து விளக்கம் கோரினார்.” சர் நார்மன் மார்ஜோரி பாங்க்ஸ் (வருவாய்த் துறை உறுப்பினர்): “பதிலாக, கடந்த மே மாதத்தில் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் எல்லா உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டன. வருவாயில் 54.61 லட்சம் என மதிப்பிடப்பட்டது. பின்னர் ஜூலை மாதத்தில் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பிய மதிப்பீட்டில் அது 55.64 லட்சமாக உயர்ந்தது. இயந்திரங்கள் மற்றும் ஆலைகளுக்கான செலவு, மதிப்பிட்ட தொகையை விட சுமார் 9 லட்சம் ரூபாய் கூடலாம். ஆனால், அது பிற பிரிவுகளில் சேமிப்பால் சமப்படுத்தப்படும். 10 அக்டோபர் 1928 வெளியிடப்பட்ட அரசாணையில் (G.O. No. 2616 I) டெண்டர்கள் மற்றும் ஆர்டர்கள் பற்றிய விவரங்கள் உள்ளன, என்றார். அதிகாரிகள் பற்றிய கேள்விக்கு: 1. J. C. டால்டன் – பட்டறை மேற்பார்வையாளர். முன்னாள் Massey & Co-வில் பணியாற்றியவர். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியாவில் இயந்திர, கட்டிட, கனரக பொறியியல் துறைகளில் பெரிய அனுபவம் கொண்டவர். 2. W. ஸ்மித் – டிராக்லைன் எக்ஸ்கவேட்டர்கள், கால்வாய் அமைப்பு போன்றவற்றில் நிபுணர். RUSTON & HORNSBY நிறுவனத்தில் பணியாற்றியவர். அவருக்கு ஹார்ன்பி இயந்திரங்களின் பராமரிப்பு, பழுது பார்க்கும் திறன்கள் உள்ளன. சி. வி. வெங்கடரமண அய்யங்கார்: “திரு. ராபர்ட்ஸ் முன்னர் அரசாங்கத்திற்கு இயந்திரங்களை வழங்கிய நிறுவனத்தில் பணியாற்றியவர் அல்லவா?” சர் நார்மன் மார்ஜோரி பாங்க்ஸ்: “இல்லை. அவர் 1907 முதல் அரசாங்க சேவையில் உள்ளார். அதற்கு முன் ஏதேனும் இருந்தால் அது 20 ஆண்டுகளுக்கு முன்பு.” சத்தியமூர்த்தி: “குறிப்பாக இந்த நபர்களை நியமிப்பதற்கான விசேஷமான காரணங்கள் என்ன? இவ்வளவு திறமை மிக்கவர்கள் மற்ற இடங்களில் கிடைக்காதா?” மார்ஜோரி பாங்க்ஸ்: “அவர்களின் தகுதிகளே காரணம். அவர்களின் அனுபவம், குறிப்பாக அவர்கள் முன்பு இத்தகைய இயந்திரங்களில் பணியாற்றிய அனுபவம், அவர்களை மிகவும் பொருத்தமாக ஆக்கியது.” சத்தியமூர்த்தி: “ஆனால், அரசு வேறு தகுதியானவர்களை தேடி பார்த்ததா? பார்க்காமல் எப்படித் தகுதியானவர்கள் கிடையாது என்று முடிவு செய்ய முடியும்? மேலும், இவர்கள் முன்பு பணிபுரிந்த நிறுவனங்களுக்கு சாதகம் காட்டுவார்கள் என்ற அபாயம் இல்லையா?” மார்ஜோரிபாங்க்ஸ்: “நாங்கள் தேடவில்லை. தேவையான தகுதியும் அனுபவமும் உடையவர்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்களின் முந்தைய தொடர்புகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அரசாங்கம் கருதியது அவர்களின் அறிவும் திறமையும் மட்டுமே.” உறுப்பினர்கள் அரசாங்கம் அளித்த பதிலில் திருப்தி அடையவில்லை. ஆதலால்,, எதிர்க்கட்சியினர் இதை “மிக மலிவான பதில்” என்றும், வெளிப்படைத்தன்மை குறைவாக உள்ளது என்றும் சாடினர். குறிப்பு: இதன் விரிவான நீண்ட உரையை வாசிக்கும்போது, இந்தக் கேள்விகள் பொத்தாம் பொதுவாக எழுப்பப்பட்ட கேள்விகளாகத் தெரியவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கேள்விகளை எழுப்புவதற்கு முன்பு, தீவிர விசாரணை செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. குறிப்பிட்ட பிரிட்டிஷ் பொறியாளர் ராபர்ட்ஸ் முன்னதாக 1907-ம் வருடம் இந்திய அரசுப் பணியில் சேர்ந்திருந்தாலும், தற்போது இந்திய அரசாங்கத்துக்கு இயந்திரங்கள் வழங்கும் நிறுவனத்துக்கு தனது பழைய எஜமான விசுவாசம் காண்பிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம் என்ற வினா எழுப்பப்பட்டது, சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த அளவிற்கு நேர்மையை, வெளிப்படைத் தன்மையை ஆதரிக்கும் நல்ல மனப்பாங்கு (Attitude) உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ளலாம். பாராட்டப்பட வேண்டிய விடயமல்லவா இது! தூர்வாருவது குறித்த சுவையான சுற்றறிக்கை: எந்த ஒரு அணையிலும் அதிக கொள்ளளவு நீரை சேமிக்க அணை பராமரிப்பு மற்றும் நீர் நிலைகளை தூர் வாரி நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டியது பொதுப்பணித் துறையின் முக்கியக் கடமைகளில் ஒன்று. பழங்காலந்தொட்டே இந்த தூர்வாருவது குறித்த நடைமுறைகள் காலத்துக்கேற்றவாறு மாறுதலும் அடைந்துள்ளது. கும்பகோணம், தேதி 5 பிப்ரவரி 1908, மதராஸ் ஆளுநர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது பொதுப்பணித்துறை குறித்த ஒரு குறிப்பு நேரில் வழங்கப்பட்டது. அந்த குறிப்பு பின்னாளில் அரசாணை எண். 518, I., தேதி 21 டிசம்பர் 1909 அன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் சோழ வம்சத்தினரால் மாவட்டத்தின் நுழைவாயிலில் கட்டப்பட்ட கிராண்ட் அணைக்கட்டு (கல்லணை) பிரபலமானது. இந்த அணைக்கட்டு காவிரி நதியின் நீரை இந்த மாவட்டத்தின் பாசனத்திற்காக பாதுகாக்க கட்டப்பட்டது. இது ஒரு பிரமாண்டமான பணி. இதன் கட்டுமானம் பிரிட்டிஷ் பொறியாளர்களின் பாராட்டைப் பெற்றது. பின்னாளில் சர். ஆர்தர் காட்டன் இதே போன்று ஒரு பிரமாண்டமான பணியை மேலும் சில மைல்கள் மேலே மற்றொரு அணைக்கட்டைக் கட்டி (மேலணை) திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பாசனத்துக்கு அதிக அளவு நீர் பெற்றுத் தந்தார். பாலவாடி கோவில் முகப்பு - நந்தி சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதியில் கிராண்ட் அணைக்கட்டுக்கு (கல்லணை) அருகில் தஞ்சாவூர் நிலங்களின் பாசனத்தை ஒழுங்குபடுத்த மற்றொரு அணைக்கட்டு (கீழணை) கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டுகள் இந்த மாவட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மற்றும் நில வருவாயின் மிகப்பெரிய அதிகரிப்புக்கு பெருமளவில் பங்களித்துள்ளன. கடைசியாக குறிப்பிடப்பட்ட பணி காவிரி நீரை இரண்டு பகுதிகளாகப் பிரித்து தஞ்சாவூரின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு பாசன வசதியை புதுப்பிக்கிறது. இந்த இரண்டு நீரோட்டங்கள் பல நதிகளாக கிளை பிரிகின்றன. மேலும் இந்த நதிகள் பல கிராமங்களின் நிலங்களை நீர்ப்பாசனம் செய்வதற்காக பெரிய மற்றும் சிறிய நீளங்களின் கால்வாய்களுக்கு நீரை வழங்குகின்றன. இந்த நடவடிக்கைகளுக்காக விவசாயிகள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றனர். கல்லணை அருகே காவிரியில் பெரிய அணை கட்டப்பட்டதிலிருந்து, மணலை கொள்ளிடம் வழியாக வெளியேற்றுவதற்காக முதலில் கட்டப்பட்டிருந்த அனைத்து அணைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் உள்ளடக்கங்களின் அளவு குறைந்து, மக்களின் மதிப்புமிக்க நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. இந்த விஷயம் அடிக்கடி பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவர்கள் மிகவும் அனுதாபமாகவும் செயல்பாட்டிலும் இருந்தாலும், இதுவரை ஒரு தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை. வெள்ளத்தின் போது மிக அதிக அளவு நீர் வீணாவதும், ஆண்டில் பிற பகுதிகளில் விவசாயிகளுக்கு பெரும் இழப்பும் ஏற்படுகிறது. இந்த தவறுக்கு எதிராக பல புகார்கள் மற்றும் இந்த பழுதுபார்ப்பு களுக்கான மனுக்கள் இன்னும் கேட்கப்படவில்லை. காவிரி மற்றும் அதன் கிளைகள் மற்றும் கால்வாய்களின் படுகைகள் படிந்த மணல் காரணமாக உயர்ந்துள்ளன. இதனால் பயிரிடப்பட்ட நிலங்களின் பாசனம் மற்றும் வடிகால் ஆபத்தில் உள்ளது. விவசாயிகள் உங்கள் தலைமை அரசாங்கத்திடம் பாசனம் மற்றும் வடிகால் மூலங்கள், பழமையான வழக்கம், மாவட்டத்தின் பழைய உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கு ஏற்ப சிறந்த நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டுகின்றனர். இவற்றை திறமையான நிலையில் வைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளூர் அதிகாரிகள் பெரும்பாலும் பட்ஜெட்டில் இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி இல்லை என்று கூறுகின்றனர். மேலும் பட்ஜெட்டில் உள்ள ஒதுக்கீடுகள் குறித்து மக்களால் எதுவும் செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியும். 8 ஜூன் 1865 தேதியிட்ட தஞ்சாவூர் கலெக்டர் அவர்களின் அறிவிப்பு மூலம் இந்த உண்மையை எவரும் அறியலாம். மனமகிழ் மன்றம்; குளிர்சாதனப் பெட்டி ஏன் வாங்கப்பட்டது? - தூள் பறந்த விவாதம் | மேட்டூர் அணை ஓசை 34 குளங்கள் மற்றும் கால்வாய்களின் பழுதுபார்ப்புகள் தொடர்பான பின்வரும் விதிகளுக்கு நிர்வாக அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மற்றும் தொடர்புடையோர் கவனத்தை ஈர்க்கிறோம்:— I. 25 வேலிகளுக்கும் (1 வேலி என்ற அளவு 6.17 ஏக்கருக்கு சமம்) குறைவாக பாசனம் செய்யும் கால்வாய்களில் குடிமராமத்து மூலம் சரிசெய்யப்பட வேண்டும். II. மதிப்பீடு கால்வாயிலிருந்து பெறப்பட்ட வருவாயில் 5 சதவீதத்திற்குள் வந்தால், எந்த சிறிய கால்வாயையும் அரசாங்கம் அறிவிக்கக்கூடாது. III. மதிப்பீடு கால்வாயிலிருந்து பெறப்பட்ட வருவாயில் 1.5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், எந்த பெரிய கால்வாயையும் அரசாங்கம் மராமத்து செய்யக்கூடாது. IV. மதிப்பிடப்பட்ட தொகை ரூ. 25 க்கும் குறைவாக இருந்தால், சிறிய குளங்கள் அல்லது கால்வாய்களுக்கு எந்த பழுதுபார்ப்பும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படக்கூடாது. நந்தி கோபுரம் V. ஐந்து ஆண்டுகளுக்குள் அரசாங்கத்தால் எந்த குளங்கள் அல்லது கால்வாயில் மராமத்து பராமரிப்பு செய்யக்கூடாது. (கையொப்பம்) ஜி. லீ மோரிஸ், கலெக்டர். (G. LEE MORRIS) (இதுபோன்ற உத்தரவு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது) (தலைமை பொறியாளரின் நிலையான சுற்றறிக்கை எண் OXXXI, 26 டிசம்பர் 1860-ல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பார்வைக்கு இணைக்கப்பட்டிருந்தது. மேலும் தலைமை பொறியாளரின் சுற்றறிக்கை எண் XIX, 28 ஆகஸ்ட் 1861. வேலைகள் மேலே உள்ள விதிகளுக்கு விதிவிலக்கு என்ற குறிப்புடன் இடம் பெற்றிருந்தது) இவற்றை ஆராய்ந்து அரசு ஆணை—எண். 518 I., 21 டிசம்பர் 1909 அன்று அரசாணை ஒன்று பிறப்பித்தது. 1.தஞ்சாவூர் மாவட்ட சங்கத்தின் மனுவில் உள்ள புகாரை அரசாங்கம் கவனமாக பரிசீலித்துள்ளது. 2. தஞ்சாவூர் பாசனத்தை பற்றி நெருக்கமான அறிவு கொண்ட, பாசனத்திற்கான முன்னாள் தலைமைப் பொறியாளர் கர்னல் ஏ. டபிள்யூ. ஸ்மார்ட், ராயல் பொறியாளர் உள்ளிட்ட பல உயர் பொறியியல் அதிகாரிகள், கால்வாய்களில் சேற்றை அழிப்பது நிரந்தரமான நடைமுறை நன்மையைத் தராது என்றும், சேறு சிக்கலை திறம்பட சமாளிக்க கால்வாய்களில் சேறு சேராமல் இருக்கும் வகையில் மாற்றங்களை செயல்படுத்துவது அவசியம் என்றும் கருதுகின்றனர். இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மேலணையை மறுமாதிரியாக்குதல் மற்றும் திட அணைகளை திறந்த அணைகளாக மாற்றுதல் போன்ற நிரந்தர மேம்பாடுகளுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் குறையாத தொகையை செலவிட்டுள்ளது. இவை முக்கியமாக வெள்ளம் மற்றும் சேறு சிக்கலை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. இதன் காரணமாக, பல ஆண்டுகளாக மாறாமல் இருந்த காவிரி அமைப்பின் மூலதனச் செலவு இரட்டிப்பாகியுள்ளது. அதே காலகட்டத்தில் பராமரிப்பு செலவும் இரட்டிப்பாகியுள்ளது, இதனால் பாசன அமைப்பு எந்த வகையிலும் புறக்கணிக்கப்பட வில்லை என்பது தெரிகிறது. 3. மனு 1865 ஆம் ஆண்டில் அப்போதைய கலெக்டர் திரு. லீ மோரிஸ் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையை குறிப்பிடுகிறது. அரசாங்கம் இந்த சுற்றறிக்கையை படித்து, இது முக்கியமாக எதிர்மறையான தன்மை கொண்டது மற்றும் முக்கியமாக குடிமராமத்தை அமல்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கவனிக்கிறது. இது முன்பு இருந்த அளவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்று தெரிய வருகிறது. 4. அரசாங்கத்தின் செலவில் கால்வாய்களை பழுது பார்க்கும் வழக்கம் மற்றும் விவசாயிகளின் உரிமை மற்றும் சலுகை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அரசாங்கம் எந்த சட்டப்பூர்வ கடமையும் இல்லை என்று அறிவுறுத்தப்படுகிறது. பழுது பார்க்கும் பொறுப்பு இருந்தால், அது ஒவ்வொரு பாசனப் பணியில் இருந்தும் தண்ணீரை அனுபவிக்கும் தகுதியுள்ளவர்களிடமே உள்ளது. மெட்ராஸ் சட்டம் I 1858 இன் கீழ், பாசனம் அல்லது வடிகால் நோக்கத்திற்காக கிராம சமூகத்தின் கூட்டு உழைப்பால் வழக்கமாக செயல்படுத்தப்படும் பணிகளை செயல்படுத்துவதற்கு விவசாயிகள் உழைப்பை பங்களிக்க சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தப்படுகின்றனர். இந்த கடமையை செயல்படுத்துவதில் ஏதேனும் புறக்கணிப்பு அல்லது தவறு ஏற்பட்டால், அது அவர்களை அரசாங்கத்தின் வரி குறைப்பு வழங்குவதில் கட்டுப்படுத்தாது. 5. 'குடிமராமத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது அல்லது சேர்க்கப்படவில்லை என்பதை அரசாங்கம் குறிப்பாக வரையறுக்க தயாராக இல்லை. ஆனால் தஞ்சாவூர் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் பராமரிப்பு விஷயத்தில் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவை இப்போது பொதுப்பணித் துறையின் பொறுப்பில் உள்ளது. மேற்பார்வை பொறியாளர் கலெக்டருடன் கலந்தாலோசித்து, அரசாங்கத்தின் கருத்துப்படி வசதியாக பராமரிக்கப்பட கூடிய கால்வாய்களின் முழுமையான பட்டியலை தயாரித்து அரசாங்கத்தின் ஆணைக்கு சமர்ப்பிப்பார். இந்த கால்வாய்கள், அரசாங்கம் தேவையானதாக கருதும் இந்த எதிர்கால மாற்றத்திற்கும் உட்பட்டு, பொதுப்பணித் துறையின் நேரடி மற்றும் உடனடி பொறுப்பில் இருக்கும், மற்ற அனைத்து கால்வாய்களில் குடிமராமத்து கீழ் விவசாயிகளால் பராமரிக்கப்படும். இப்படி ஒரு அறிவிப்பு சேறு, மற்றும் தூர்வாருவது குறித்த அப்போதைய அரசின் கடமையிலிருந்து நழுவுவதாக நமக்குத் தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக, பலமுறை மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் இந்த தொடர் சம்பந்தமாக ஆய்வு செய்ய நாம் நேரில் சென்றிருந்த போது பண்ணவாடி கிராமம் அருகே பழைய காலத்தில் கட்டப்பட்டு, நீரில் மூழ்கி இருக்கும் கிறிஸ்தவ தேவாலயங்கள், ஜலகண்டேஸ்வரர் ஆலயம் போன்றவற்றை அருகில் சென்று காண முடிந்தது. தண்ணீர் இன்றி வறண்ட சூழ்நிலையில் கோவிலின் நந்தி சிலை தரை மட்ட அளவில் தான் உள்ளது. அந்த கோவிலின் அமைப்பின் படி சுமார் 20 அடி உயரத்தில் தான் அந்த நந்தி அமைக்கப்பட்டுள்ளது. எனில், சுமார் 20 அடிக்கும் குறைவில்லாமல் சேறும், சகதியும், வண்டல் மண்ணும் அங்கே படிந்துள்ளது என்பது மிகத்தெளிவாக எவரும் உணரலாம். பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இவ்வாறு வண்டல் படிந்துள்ளதை தூர்வாரி அங்கே பழைய நிலமட்டத்தை கொண்டு வந்தால் பல டி.எம்.சி (T.M.C) நீர் அதிகமாக அணையில் சேமித்து வைக்க முடியும். நீரில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலஸ்தான கோபுரம், பின்னால் நந்தி கோபுரம் நீரில் மூழ்கிய ஜலகண்டேஸ்வரர் கோவிலின் (REPLICA) மாதிரியாக அங்கிருந்து வெளியேறிய மக்கள் வெகுகாலம் முன்னே பாலவாடி என்ற கிராமத்தில் பழைய கோவிலின் அதே அளவுகளில் ஒரு கோவிலை நிர்மாணித்திருக்கிறார்கள். அதில் உள்ள நந்தி சிலை இருக்கும் உயரம் வைத்து மூழ்கியுள்ள கோவிலின் கோபுரத்தை ஒப்பு நோக்கினால் குறைந்தது 20 அடி உயரம் சேறு மற்றும் சகதி இருப்பது உறுதியாகிறது. இது தூர் வார வேண்டிய அவசியத்தை தெளிவாக விளக்குகிறது. கடந்த காலங்களில் தூர்வாருவது குறித்து அறிவிப்பு வந்தாலும் அவை சரியான அமைப்பு முறை பின்பற்றப் படாமலும், பல்வேறு காரணங்களால் தூர்வாரப்படாமல் உள்ளது. நாம் ஆய்வு செய்த வரை நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அணை முழுவதும் தூர் வாருவது நடைபெறவில்லை. நாம் பல பொறியாளர்களிடம் இது குறித்து நடத்திய உரையாடல்களில் இருந்து இதை உறுதி செய்யவும் முடிந்தது. அணையின் நீர்மட்டம் மிகவும் குறையும் போது மட்டுமே தூர்வார இயலும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இன்றைய காலகட்டத்தில் (2026) நீரின் மட்டம் குறைவாக உள்ளது. இப்போது எடுக்கப்படும் நடவடிக்கை நீண்டகால பயனை தரும். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள புதிய தமிழக அரசு இந்த தூர்வாரும் முக்கிய பணியை மேற்கொண்டால், மேட்டூர் அணையில் அதிக நீரை சேமிக்க முடியும். இது ஒரு நீண்ட கால திட்டம். பல தலைமுறைகள் இந்த அரசை வாழ்த்தும். செய்யும் என நம்புவோம். தொடர்ந்து பயணிப்போம். காவிரி நன்னீர் சிறப்பு பொருள்: பெருகி வரும் நீரையுடைய காவிரி ஆறு இட்ட மணலை விட பல காலம் நின் வாழ்நாள் சிறப்பதாகுக என்று அரசனை புகழ்வதாக உள்ளது இப்பாடல்.மிக்கு வரும் இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே / புறநானூறு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/science/history/history-anai-osai-mettur-dam-construction-series-35




