ஜூடோவில் இந்தியா இதுவரை எட்டாத உச்சத்தை, 23 வயதான அஸ்மிதா டே எட்டியுள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் கனடாவின் ஹைடி குவாக்-ஐ (Heidi Quach) வீழ்த்தி தங்கம் வென்றுள்ள அவர், காமன்வெல்த் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்கு ஜூடோவில் கிடைத்திருக்கும் முதல் தங்கப் பதக்கம் இது என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இந்த வரலாற்று வெற்றிக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அவரது தந்தை உயிரிழந்திருந்தது, இந்தச் சாதனையின் மதிப்பை மேலும் உணர்வுபூர்வமாக்கியுள்ளது. 35 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஜூடோ வீரர்கள் பலமுறை பதக்கங்களை வென்றிருந்தாலும், தங்கப் பதக்கம் மட்டும் எட்டாத கனவாகவே இருந்து வந்தது. 1990-ஆம் ஆண்டு முதல் ஜூடோ முழுமையான பதக்க விளையாட்டாக இடம்பெற்ற நிலையில், இந்தியா ஐந்து வெள்ளி மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. அந்த 35 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு கிளாஸ்கோவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அஸ்மிதா. அஸ்மிதா அவரது இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் ஹர்ஷ் சிங்கும் தங்கம் வென்றார். மேலும், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் யாமினி மௌர்யா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம், இந்திய ஜூடோ அணிக்கு காமன்வெல்த் போட்டி வரலாற்றிலேயே மிகச் சிறந்த தொடக்கங்களில் ஒன்று அமைந்தது. ஓட்டப்பந்தய வீராங்கனையின் அசத்தல் பயணம் திரிபுரா மாநிலத்தின் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள பெலோனியா பகுதியைச் சேர்ந்தவர் அஸ்மிதா டே. எளிய குடும்பத்தில் வளர்ந்த அவர், சிறுவயதில் ஜூடோ வீராங்கனையாக அல்ல, 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனையாகவே தனது விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கினார். மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளிலும் தீவிரமாகப் பங்கேற்று வந்தார். அஸ்மிதா பின்னர், திறமைகள் கண்டறியும் முகாமின் மூலம் ஜூடோவுக்கு அறிமுகமானார். முதலில் பயிற்சியாளர் பினா டெப்நாத் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற அவர், அதன் பின்னர் திரிபுரா ஸ்போர்ட்ஸ் ஸ்கூலில் தனது திறமையை மெருகேற்றினார். 2018-ஆம் ஆண்டு 'ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா' (SAI) போபால் மையத்தில் இணைந்த அவர், தேசிய பயிற்சியாளர் யஷ்பால் சோலங்கியின் வழிகாட்டுதலில் அசாத்திய ஜூடோ வீராங்கனையாக உருவெடுத்தார். தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்த அஸ்மிதா, 2022-ஆம் ஆண்டு ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று, சர்வதேச அளவில் பதக்கம் வென்ற முதல் திரிபுரா ஜூடோ வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு மக்காவ் ஜூனியர் ஆசியக் கோப்பையில் தங்கமும், குவைத் ஆசிய ஓப்பனில் வெள்ளியும் வென்றார். அதே ஆண்டில், உத்தரப் பிரதேச காவல்துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அந்தப் பணி அவருக்குப் பொருளாதாரப் பாதுகாப்பையும், முழுநேரப் பயிற்சிக்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டு மொராக்கோவில் நடைபெற்ற காசாபிளாங்கா ஆப்பிரிக்க ஓபன் போட்டியில் தங்கம் வென்ற அவர், 2026 காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதியாகப் பிடித்தார். அஸ்மிதா தந்தையின் இழப்பும், மீண்டெழுந்த தாயின் ஊக்கமும் ஆனால், இந்த வெற்றிக்கான பாதை எளிதாக இருக்கவில்லை. 2025 டிசம்பரில் அவரது தந்தை அர்ஜுன் குமார் டே திடீரென பக்கவாதத்தால் காலமானார். சைக்கிள் பழுதுபார்க்கும் தொழிலில் இருந்த அவர், அஸ்மிதாவின் விளையாட்டுப் பயணத்தில் தூணாக நின்றவர். முழுநேரப் பயிற்சி, மருத்துவச் செலவுகள் என மகளுக்கு உறுதுணையாக இருந்த தந்தையின் திடீர் மறைவு, அஸ்மிதாவை மனதளவில் உலுக்கியது. தந்தையின் மறைவுக்குப் பிறகு, சில நாள்கள் SAI போபால் மையத்தின் பயிற்சியிலிருந்தும் விலகியிருந்தார். அந்தக் காலகட்டத்தை நினைவுகூர்ந்த அவர், "எல்லாமே முடிந்துவிட்டது என்று நினைத்தேன்" என்று கண்கலங்கினார். ஆனால், அவரது தாயின் உறுதுணையும் ஊக்கமும்தான் மீண்டும் அவரை ஜூடோ களத்திற்குத் திரும்ப வைத்தது. "தந்தை உன் வெற்றிக்காகச் செய்த தியாகங்கள் வீணாகக் கூடாது" என்ற தாயின் வார்த்தைகள் அவருக்குள் புதிய பலத்தைக் கொடுத்தன; மீண்டும் தேசிய முகாமில் இணைந்து பயிற்சியைத் தொடங்கினார் என்றும் அவர் குறிப்பிட்டார். அஸ்மிதா கிளாஸ்கோ மேடையில் தங்கம் வென்ற விதம் கிளாஸ்கோவில் நடைபெற்ற மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு போட்டியில், அஸ்மிதா காலிறுதியில் ஸ்காட்லாந்தின் ஈவா ஈவிங்கை 'ஐப்போன்' (Ippon) முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், நான்கு முறை பிரிட்டிஷ் சாம்பியனான சம்மர் ஷாவை எதிர்கொண்டார். கடும் சவாலாக அமைந்த அந்த ஆட்டம் 'கோல்டன் ஸ்கோர்' (Golden Score) வரை நீடித்தது. கூடுதல் நேரத்தில் அவர் பெற்ற 'யூகோ' (Yuko) புள்ளியின் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டியில் கனடாவின் ஹைடி குவாக்கை எதிர்கொண்ட அஸ்மிதா, ஆட்டத்தின் தொடக்கத்தில் பின்தங்கினார். ஹெய்டி குவாக் முதலில் 'யூகோ' புள்ளி பெற்றதுடன், அஸ்மிதாவுக்கு 'ஷிடோ' (Shido) எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. இருப்பினும், பதற்றமடையாமல் தனது ஆட்ட உத்தியை மாற்றிய அவர், மூன்றாவது நிமிடத்தில் 'யூகோ' பெற்று கணக்கைச் சமன் செய்தார். நிர்ணயிக்கப்பட்ட நேரம் சமநிலையில் முடிவடைந்ததால், போட்டி மீண்டும் 'கோல்டன் ஸ்கோர்' முறைக்குச் சென்றது. கூடுதல் நேரம் தொடங்கி வெறும் 25 விநாடிகளிலேயே அஸ்மிதா வெற்றிக்கான 'யூகோ' புள்ளியைப் பெற்று, 2-1 என்ற கணக்கில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். காமன்வெல்த் வரலாற்றில் இந்தியாவின் முதல் ஜூடோ தங்கப் பதக்கம் அதிகாரப்பூர்வமாகப் பதிவானது. வெற்றிக்குப் பிறகு பேசிய அஸ்மிதா, "நான் வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது" என்றார். அந்த அசைக்க முடியாத நம்பிக்கையே, 35 ஆண்டுகளாக இந்திய ஜூடோ எதிர்பார்த்திருந்த வரலாற்றுச் சாதனையை நனவாக்கியுள்ளது. காமன்வெல்த்: '11 மாதக் குழந்தையின் அம்மா; PhD மாணவி' - தடைகளைத் தாண்டி சாதித்த சீமா; யார் இவர்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://sports.vikatan.com/asmita-dey-make-history-as-indias-first-gold-medallists-in-judo-at-commonwealth-games




