‘நீட்’ நுழைவுத்தேர்வில் நடக்கும் முறைகேடுகளைக் களைந்து, தேர்வுமுறையில் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தியும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லி, ஜந்தர் மந்தரில் மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டம் மொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மருத்துவராகும் கனவோடு கடும் உழைப்பைச் செலுத்தி, நீட் தேர்வு எழுதிய சுமார் 22 லட்சம் மாணவர்களை, வினாத்தாள் கசிந்ததைக் காரணம் காட்டி மீண்டும் எழுத வைத்தது, உண்மையில் மிகப்பெரிய வன்முறை. இந்தப் பதற்றத்திலும் மன உளைச்சலிலும் சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏற்றுக்கொள்ளவே முடியாத பேரிழப்பு. 2019-ம் ஆண்டிலிருந்தே நீட் தேர்வில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதுதொடர்பாக வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனாலும், தேர்வுமுறையைச் சீரமைக்க மத்திய கல்வி அமைச்சகம் பெரிதாக கவனம் காட்ட வில்லை. அந்த அலட்சியத்துக்கு எதிராகத்தான் டெல்லியை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்கள் மாணவர்கள். ஆனால், `கலைந்து செல்லுங்கள்' என்ற ஒற்றை வரியைச் சொல்லி காவல்துறை மூலம் அவர்களைக் கலைக்க நினைத்தது அதிகாரத்தின் குரல். எதிர்வினையாக உலகமே திரும்பிப் பார்க்கும்படி விஸ்வரூபமெடுத்து நின்றது இளைஞர் படை. வெயிலிலும் மழையிலும் அவர்கள் நிற்கிறார்கள். தன்னெழுச்சியாக எண்ணிக்கை பெருகியபோதும், கூடாரம், முதலுதவி, ஒழுக்கம், வரம்பு மீறாத அறவழிப் போராட்டம் என தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொள்கிறார்கள். தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை பயமின்றி எதிர்கொள்கிறார்கள். மாணவர்களை அடைத்து அழைத்துச் சென்ற காவல் வாகனத்தின் முன் நின்று, ஒற்றைக் கையால் நிறுத்திய ரியா உட்பட, களத்தின் பல புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன. கல்வி ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடங்கி, அரசியல் தலைவர்கள், நாடெங்கிலும் உள்ள செயற்பாட்டாளர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் எனப் பலரும் மாணவர்களின் குரலோடு இணைந்து கரம்கோத்து நிற்கிறார்கள். போராடுகிற பிள்ளை களுக்கு எங்கெங்கிருந்தோ உணவுகள் அனுப்புகிறார்கள். இந்தியாவெங்குமே இந்தப் போராட்டத்தின் அனல் படரத் தொடங்கியிருக்கிறது. இந்த ஒற்றுமையும் உறுதியும், இறுதியில் பிரதமரை வாய்திறக்க வைத்திருக்கிறது. `நீட் வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள், புதிய சட்ட மசோதா (Anti-Paper Leak Bill) விரைவில் தாக்கல் செய்யப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். ஆயினும், கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். புதிய இந்தியாவின் முகத்தை உலகுக்குக் காட்டியிருக்கும் மாணவர்களுக்கு, சல்யூட்! உரிமையுடன், ஸ்ரீ ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/namakkulle-editorial-page-august-11-2026




