சென்னை, தந்தை பெரியார் இயக்கத்தின் முன், எந்த எதிர்ப்பும், கந்தகத்தைத் தொட்ட கனலின் குச்சிகள் போல, தானே வெந்து போகும் என்பது உறுதி என்று தந்தை பெரியார் 148ம் ஆண்டு பிறந்தாள் வாழ்த்து செய்தியில், தி.க தலைவர் கி.வீரமணி சூளுரைத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- நம் பேராசான் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாச் செய்தி! வருக அவர் விரும்பும் சுயமரியாதை உலகு! நமது லட்சியங்களை நாம் அடைய வேண்டுமானால், அதற்குரிய கஷ்ட நஷ்டங்கள், கள அடக்குமுறைகள், அவதூறுகள், அழிவழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு, அவற்றிற்குரிய விலையை நாம் கொடுத்தே தீரவேண்டும். இதில் சற்றும் பின்வாங்கக்கூடாது. அனைவருக்கும் அரிய பாடங்கள் ஆகும்! தன்னலம் பாராது இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் எவருக்கும் இது எளிதான வகையில், லட்சியப் போரில், உரிய வெற்றியை நிச்சயம் அளித்தே தீரும்’’ என்ற அருமையான அனுபவ முத்திரை பதித்த அறிவுரை, அய்யாவின் அருந்தொண்டர்களாகிய நமக்கு மட்டுமல்ல, பொதுத் தொண்டில் ஈடுபடும் அனைவருக்கும் அரிய பாடங்கள் ஆகும்! ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தந்தை பெரியார், ஒற்றை மனிதராக சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, ‘உலகத்தோரின் எதிர்ப்பு இமயமே ஆனாலும், எனது லட்சியப் பயணத்தில் நான் ஒருபோதும் சோர்வடையேன்; நில்லேன்; மாரத்தான் ஓட்டப் பந்தய வீரனைப் போல், அலுக்காது, சலிக்காது ஓடிக்கொண்டே இருப்பேன்’’ என்ற உள்ள உறுதியோடு, எதிர்நீச்சலே எனக்கு வாடிக்கை என்று, தனது 95 ஆம் ஆண்டுவரை, 1973 டிசம்பர் 19 ஆம் தேதிவரை உடல் உபாதைகள், வலிகள், வேதனைகள் எல்லாவற்றையும் தாண்டியவர். அவர் பணியில் ஓய்ந்தவர் இல்லை என்று எதிரிகள்கூட திகைக்கும் வண்ணம் வாழ்ந்தவர் ‘அய்யா’ என்ற நம் அறிவாசான்! தனி மனிதன் என்ற நிலை மாறி, தத்துவ அறிவுக் கலங்கரை வெளிச்சமாகி, அவரது கொள்கை உலகமயமாகி வரும் நிலையில்தான், இன்று (17.9.2026) கொண்டாடப்படுகிறது பெரியார்தம் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! 53 ஆண்டுகள் அவர் முடிவெய்தி உருண்டோடி விட்டன! இன்னமும் அவர், ஆரியத்தின் அடிவேரையே அகற்றும் கோடரியாய் காணப்படுகிறார்! உலக அதிசயங்களில் முதன்மையானவை! அவர் எவரையும் வெறுத்தவர் இல்லை! ஆனால், அவர் இன்றும்கூட, போதை ஏறி, பாதை தெரியாதவர்களால் வெறுக்கப்பட்டு, கூலிப்படையாய், விபீடணன் - அனுமான் - சுக்கீரவன்களாகி வந்தாலும், ‘அத்தகைய எதிர்ப்பை நான் விரும்புகிறேன்; எனது கொள்கைப் பயிர் வளர, அப்படி ஒரு உரம் தேவையல்லவா?’ என்று எதிர்ப்பை வரவேற்கும் ஏற்றமிகு தலைவராக, வரலாற்றில் வாழ்ந்து வருகிறார் என்பது உலக அதிசயங்களில் முதன்மையானவை! அவரது காலத்தில், அவர் நின்ற, வென்ற களங்களில் எதிர்த்து நின்றவர்கள் பெயர்கள், மக்கள் நினைவிலிருந்து மறைந்தே போய்விட்டன. களம் காண – கழகத்தில், அஞ்சாநெஞ்சர்களை ஆயிரக்கணக்கில் உருவாக்கிவிட்டுத்தான் அவர் கண்மூடி, நமக்குக் கலங்கரை வெளிச்சமாகி, லட்சிய ஒளியாக, இன்று வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்! நெருப்பின் முன்னால் பருத்திப் பொதியா? புரட்சிக்கவிஞர் இதுபற்றி தீட்டிய ஒரு கருத்தோவியத்திலிருந்து உணர்வு கொப்பளிக்கும் வைர வரிகளில் சில, இதோ: ‘‘உண்மை ஒளியினை மக்களுக்குக் கூட்டிய பெரியார்தம்மை ஏசினர்; பேசினர். குட்டிநாய்கள்போல் குரைத்துப் பார்த்தனர் கோழைநரிகள்போல் ஊளைஇட்டனர் நெருப்பின் முன்னால் பருத்திப் பொதியா? வெள்ளத்தின் முன் உப்பு மூட்டையா? ஊற்றை மண்ணால் அடைக்க முடியுமா? புல்லேந்தும் கையால் வில்லேந்துவதாகச் சொல்லேந்திப் பார்த்து சோர்வடைந்தனர்! விபீடண மரபில் பிறந்த ஒருவரை கேடயமாக்கி கீழற்றுப்பவர்கள்’’ தந்தை பெரியார் இயக்கத்தின் முன், எந்த எதிர்ப்பும், கந்தகத்தைத் தொட்ட கனலின் குச்சிகள் போல, தானே வெந்து போகும் என்பது உறுதி! சுயமரியாதை உலகு! காலமெல்லாம் காவல் பட்டாளமாகி உழைக்கக் களப்பணியாளர்கள் தயார் – வீரர்களாகிய கருஞ்சட்டைப் பட்டாளத்திற்குக் கடமையே கண்ணாகும். அணிவகுப்போம், என்றும் தயாராக! பணி முடிப்போம், தயக்கமின்றி! திக்கெட்டும் திராவிட ஒளி பரவட்டும்! பெரியார் உலக மயம் - உலகம் பெரியார் மயம். இது கனவல்ல; செயல் திட்டத்தின் செழுமை! வாழ்க பெரியார். வருக அவர் விரும்பும் சுயமரியாதை உலகு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/field-workers-ready-to-work-as-an-organized-force-dk-president-k-veeramani




