சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் கல்வி, மறுவாழ்வு மற்றும் ஆதரவு சார்ந்த தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மற்றும் ஆதரவு முகாம் இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.09.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் (OoSC) தொடர்பான முன்னெடுப்பின் ஆய்வில் 7,302 குழந்தைகள் கண்டறியப்பட்டு, 2,106 குழந்தைகள் முதற்கட்டமாக சரிபார்க்கப்பட்டனர். சரிபார்ப்பு நடவடிக்கையின் முதற்கட்டத்தைத் தொடர்ந்து, 509 குழந்தைகள் பள்ளிகளிலும், 263 குழந்தைகள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் (ITIs) சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட 28 குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் மற்றும் சிறப்பு ஆதரவு தேவைப்படுவதும் கண்டறியப்பட்டது. சிறப்பு முகாம் இவர்களின் கல்வி, மறுவாழ்வு மற்றும் ஆதரவு சார்ந்த குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை, சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN Rights Project) உள்ளிட்ட துறைகளின் சிறப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட 28 குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர். இம்முகாமில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள், கல்வி வாய்ப்புகள், உரிமைகள், திறன் மேம்பாட்டு வழிகள் மற்றும் மறுவாழ்வு உதவிகள் குறித்தும், சைகை மொழி உதவி மற்றும் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கண்ணாடிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. கண்காணிப்பு நடவடிக்கை மேலும், ஒவ்வொரு குழந்தையின் கல்வி, குடும்பம், உள-சமூக மற்றும் ஆதரவு சார்ந்த தேவைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உளவியலாளர்கள் மூலம் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தனிப்பட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் மறுவாழ்வு ஆதரவு, நலத்திட்டங்களுக்கான இணைப்பு, மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் தங்கள் கல்வி மற்றும் வளர்ச்சி சார்ந்த திறன்களை முழுமையாக வெளிக்கொணர்வதை உறுதிசெய்யும் வகையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இம்முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் சீனிவாசன் (தெற்கு), சரவண குமார் (வடக்கு), பாலின மற்றும் கொள்கை ஆய்வகத்தின் தலைவர் முனைவர் லெஜிஸ், கல்வி அலுவலர் ஜெ.வசந்தி, தலைமை சமூக மேம்பாட்டு அலுவலர் ராஜ்குமார், சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட அலுவலர்கள், சமூக அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-out-of-school-children-with-disabilities-in-chennai-corporation




