ஆண்ட்ராய்டு உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய 'ஆண்ட்ராய்டு 17' (Android 17) இயங்குதளத்தை, 'தி ஆண்ட்ராய்டு ஷோ 2026' (The Android Show 2026) நிகழ்ச்சியில் கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 16 ஆம் தேதி வெளியிட்ட இந்த நிகழ்வில் பல புதிய அப்டேட்கள் பற்றிய தகவல்கல் உள்ளன. ஏற்கனவே பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் டிஜிட்டல் நலன் சார்ந்த பல புதிய அம்சங்களை கூகுள் அறிவித்திருந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 17 மூலம் செயற்கை நுண்ணறிவு மையப்படுத்தப்பட்ட புதிய அனுபவத்தை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. குறிப்பாக 'ஜெமினி இன்டெலிஜென்ஸ்' என்ற ஏ.ஐ. அமைப்பு, ஆண்ட்ராய்டு போன்களை சாதாரண ஸ்மார்ட்போன்களில் இருந்து செயலில் உதவும் புத்திசாலி டிஜிட்டல் உதவியாளர்களாக மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. * ஜெமினி இன்டெலிஜென்ஸ் ஆண்ட்ராய்டு 17-ன் மைய அம்சமாக 'ஜெமினி இன்டெலிஜென்ஸ்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் பல செயலிகளில் செய்யும் பணிகளை ஏ.ஐ. தானாக புரிந்து செயல்படுத்தும். * இடைநிறுத்த புள்ளி இதனுடன், பயனர்களின் கவனச்சிதறலை குறைக்க இடைநிறுத்த புள்ளி (Pause Point) என்ற புதிய டிஜிட்டல் நலன் அம்சமும் ஆண்ட்ராய்டு 17-ல் இடம் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற அதிக நேரத்தை வீணாக்கும் செயலிகளை திறப்பதற்கு முன்பு, 10 விநாடிகள் காத்திருக்கச் செய்து "நீங்கள் ஏன் இந்த செயலியை திறக்கிறீர்கள்?" என்று பயனர்களை சிந்திக்க வைக்கும். அந்த இடைவெளியில் மூச்சுப்பயிற்சி, புத்தக பரிந்துரை, புகைப்பட நினைவுகள் போன்றவை காட்டப்படும். சமூக வலைத்தளங்களில் முடிவில்லா ஸ்க்ரோலிங்கை குறைத்து, ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். * பாதுகாப்பு மேம்பாடு ஆண்ட்ராய்டு 17-ல் பாதுகாப்பு அம்சங்களும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. வங்கி பெயரில் வரும் போலி அழைப்புகளை கண்டறிந்து தானாக துண்டிக்கும் பேங்கிங் ஸ்காம் பாதுகாப்பு (Banking Scam Protection) இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் லைவ் த்ரெட் டிடெக்ஷன் (Live Threat Detection) என்ற ஏ.ஐ பாதுகாப்பு அமைப்பு, செயலிகளின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்கும்; சந்தேகமான செயல்பாடுகளை எச்சரிக்கும். குறுஞ்செய்தி மோசடிகள், அனுமதிகளை தவறாக பயன்படுத்தும் செயலிகள் போன்றவற்றையும் இது கண்டறியும். * கன்டென்ட் கிரியேஷன் ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம் பல்வேறு கன்டென்ட் கிரியேஷன் வேலைகளுக்கு ஏற்ற அப்டேட்டுகளுடன் வந்திருக்கிறது. ரியாக்ஷன் வீடியோக்களை தயாரிக்க ஏதுவாக 'ஸ்கிரீன் ரியாக்ஷன்' (Screen Reactions) என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக், யூடியூப் வீடியோக்களை ரசிக்கும்போதே, உங்களின் முகப் பிரதிபலிப்பையும் சேர்த்து ரியாக்ஷன் வீடியோக்களாக உருவாக்கி வெளியிட முடியும். ராம்ப்லர் (Rambler) என்ற புதிய கீபோர்ட் அம்சமும் ஆண்ட்ராய்டு 17-ல் கவனம் பெற்றுள்ளது. பயனர்கள் இயல்பாக பேசும் போது வரும் இடைச்சொற்கள், தடுமாற்றங்கள், இடைவெளிகள் போன்றவற்றை ஏ.ஐ. தானாக திருத்தி தெளிவான எழுத்து வடிவமாக மாற்றிவிடும். இதனால் குரல் வழி தட்டச்சு அனுபவம் மேலும் இயல்பாக மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆப் பபுள்ஸ் (App Bubbles) என்ற புதிய வசதி மூலம், செயலிகளை மிதவை வடிவில் சிறியதாக வைத்துக்கொண்டு மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும். ஜூன் மாதம் முதல் இந்த அப்டேட்டை கூகுள் பிக்சல் மற்றும் சாம்சங் கேலக்ஸி சாதனங்களில் பெற முடியும் எனவும் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/updates-that-left-users-stunned-what-features-does-android-17-have




