'போட்டோகிராபர்' - சினிமா விமர்சனம் புகைப்பட கலைஞரான அஷ்ரப், யாருடைய கண்களுக்கும் புலப்படாத தங்க மரத்தை தேடி கொடைக்கானலில் உள்ள காட்டுப் பகுதியில் பயணிக்க முடிவு செய்கிறார். அவருடன் 'சுற்றுலா கைடு' ஒருவரும் உடன் வர ஏற்பாடு செய்கிறார். இந்த நிலையில் சுற்றுலா கைடு வர தாமதமான சூழலில் காட்டுக்குள் இறங்கும் அஷ்ரப், வழி தெரியாமல் திசை மாறி சென்று விடுகிறார். அந்த காட்டில், வன விலங்குகள், அவ்வப்போது கேட்கும் வினோத குரல் என பல உயிருக்கு ஆபத்தான சூழல்களை கடந்து போகிறார். காட்டில் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும் திக் திக் சூழலை எதிர்கொள்ளும் அஷ்ரபை இரண்டு பேர் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். உயிருக்கு பயந்து காட்டுக்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்கும் அஷ்ரப்பின் நிலை என்ன? அவர் நினைத்தபடி அந்த தங்க மரத்தை பார்த்தாரா? அவரை கொலை செய்ய துடிக்கும் இரண்டு பேர் யார்? போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஷ்ரப், முழு படத்தையும் தோளில் சுமந்து முடிந்த அளவு நடிப்பில் கவனம் ஈர்த்துள்ளார். பரபரப்பையும், விறுவிறுப்பையும் கொடுக்கும் வகையில் உடல் மொழியும், முகபாவனையும் கை கொடுத்திருக்கிறது. முதல் முயற்சிக்கு பாராட்டலாம். ஓரிரு காட்சிகளே வந்தாலும் அனனி சுவாமிநாதன் நினைவில் நிற்கிறார். அஷ்ரப்பின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். மற்றொரு நண்பராக நடித்திருக்கும் உறியடி சிவாவின் நடிப்பும் சிறப்பு. ஆடுகளம் நரேன், தேவி மகேஷ், அழகு உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறைவில்லை. ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத், காட்டின் அமைதியையும், ஆபத்தையும் அழகாக காட்டியுள்ளார். ராஜ்குமார் சந்திரசேகரனின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பின்னணி இசையும் அசத்தல். மர்மங்கள் நிறைந்த பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகளை யூகிக்க முடிகிறது. ஒரு புகைப்பட கலைஞரின் பயணத்தை கருவாக வைத்துக்கொண்டு, அதில் மர்மங்களும், அமானுஷ்யங்களும் கலந்து பரபரப்பான திரைக்கதையில் காட்சிகளை அடுக்கி நடிப்பு தாண்டி இயக்கத்திலும் கவனம் ஈர்த்துள்ளார் அஷ்ரப். கிளைமேக்ஸ் காட்சி திருப்பம். 'போட்டோகிராபர்' - டிரைலர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/movie-review/how-is-photographer-film-cinema-review




