பெங்களூரு, கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கொட்டூரு தாலுகாவுக்கு உட்பட்ட சப்பர டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதர் (வயது 49). இவர் பெங்களூரு தெற்கு ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா, அக்கூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சசிதர் பள்ளியில் பயிலும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் உதவி எண்ணுக்கு புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, ராமநகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சசிதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மாடியில் இருந்து குதித்தார் பின்னர் கைதான சசிதரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று காலை அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவரின் கைரேகைகளை பதிவு செய்வதற்காக ராமநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அலுவலகத்தின் 3-வது மாடியில் வைத்து அவரது கைரேகைகளை பதிவு செய்யும் பணி நடந்தது. அப்போது திடீரென சசி தர், பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரை தள்ளி விட்டு, கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்தார். இதை எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உயிரிழப்பு இதனையடுத்து கீழே விழுந்த சசிதர் தலையில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார், அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள ராமநகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சசிதருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி சசிதர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ் காவல் கட்டுப்பாட்டில் இருந்த போக்சோ வழக்கு குற்றவாளி சூப்பிரண்டு அலுவலகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/pocso-accused-teacher-dies-after-jumping-from-sp-office-building-in-bengaluru




