புதுடெல்லி, எத்தனால் 20 சதவீதம் கலக்கப்படும் இ20 பெட்ரோலுக்கு பதிலாக, இ10 பெட்ரோல் விற்பனை செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாட்டின் 2-வது மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் சஞ்சய் கன்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தற்போது தயாரிக்கப்படும் புதிய வாகனங்கள் இ20 பெட்ரோலில் இயங்கும் வகையிலான என்ஜின்களுடன் வருகின்றன. அதேநேரத்தில், பழைய வாகனங்களுக்கு குறைந்த அளவு எத்தனால் கலந்த பெட்ரோலை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனினும், எரிபொருளில் எத்தனால் கலப்பது தொடர்பான கொள்கையில் இதுவரை எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை.அரசு இதுகுறித்து முடிவு எடுத்தால், தற்போதுள்ள வினியோக கட்டமைப்பை பயன்படுத்தி இ10 பெட்ரோலுக்கு மாறுவதில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது.பழைய வாகனங்களுக்காக இ20 பெட்ரோலுக்கு பதிலாக இ10 பெட்ரோல் விற்பனைக்கு வரும் என்று இதுவரை கூறப்படவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார். பழைய வாகனங்கள் பாதிக்கப்படுமா? பி.எஸ்.-4 தரநிலை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, பி.எஸ்.-3 வரையிலான தரநிலையில் தயாரிக்கப்பட்ட 7.50 கோடி முதல் 8 கோடி வரையிலான இருசக்கர வாகனங்கள், அதிக அளவு எத்தனால் கலக்கப்பட்ட இ20 பெட்ரோல் பயன்பாட்டால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.ஆனால், இதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இ20 பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலந்திருப்பதால், பழைய வாகனங்களின் செயல்திறன் மற்றும் உதிரிபாகங்கள் தொடர்பாக சில வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, பழைய வாகனங்களுக்கு இ10 பெட்ரோலை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால், இ20 பெட்ரோலுடன் கூடுதலாக இ10 பெட்ரோலையும் நாடு முழுவதும் விற்பனை செய்வது என்பது பெரிய சவாலாக இருக்கும். ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், கிடங்குகள் மற்றும் விநியோக கட்டமைப்புகளில் தனித்தனி எரிபொருள் வகைகளை கையாள வேண்டிய நிலை ஏற்படும். எனவே, தற்போதைய நிலையில் இ20 பெட்ரோல் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக இ10 பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற தகவல் உண்மையல்ல. இ20-க்கு மாற்றாக இ10 கொண்டு வருவது குறித்தோ, இ20-யுடன் சேர்த்து இ10-ஐ விற்பனை செய்வது குறித்தோ இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/is-there-a-possibility-of-reducing-ethanol-blending-in-petrol-bharat-petroleum-official-responds




