சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பதற்காக சென்னை மாநகர மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை தனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். பள்ளிக்கரணை இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டத்தை தி.மு.க. அரசு தொடங்கியதும், இப்போதைய த.வெ.க. அரசு தொடர்ந்து செயல்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை. அழிக்கும் முயற்சி தமிழ்நாட்டின் கடலோர வளங்களை மீட்டெடுப்பதாகக் கூறி, தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற புதிய திட்டத்தை கடந்த 2024ஆம் ஆண்டில் திமுக அரசு தொடங்கியது. உலக வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1675 கோடி செலவில் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ நீளமுள்ள கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது. பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாலோ, மீட்க வேண்டும் என்றாலோ, அதற்காக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இரு நடவடிக்கைகள், ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக இருந்து இப்போது 1750 ஏக்கராக சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இயன்றவரை அகற்றுவதும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்வதும் தான். ஆனால், அதற்கு பதிலாக மீதமுள்ள சதுப்பு நிலத்தையும் அழிக்கும் முயற்சியை திமுக அரசு தொடங்கியது. இந்த பேரழிவுத் திட்டத்திற்காக மட்டும் வனத்துறை மூலம் திமுக அரசு ரூ.21 கோடியை ஒதுக்கியுள்ளது. ஊழல் செய்யும் நோக்கத்துடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தமிழக அரசு, அதன் பங்குக்கு ஆக்கிரமிப்பு செய்து 3 கி.மீ நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரையும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு நடைபாதையும் அமைத்து வருகிறது. தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும். கடந்த சில நாள்களில் பெய்த லேசான மழைக்கே அப்பகுதியில் மழை நீர் தேங்குவதே இதற்கு சான்றாகும். பள்ளிக்கரணையின் ஆகப்பெரும் சிறப்பே மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீரை ஈர்த்துக் கொண்டு, சென்னை மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாப்பதும் தான். இந்த இரு நோக்கங்களையும் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் சிதைத்து விடும். இப்படி ஒரு திட்டத்தை ஊழல் செய்யும் நோக்கத்துடன் தான் திமுக அரசு அறிவித்தது. ஆனால், ஊழலுக்கு இடம் கொடுக்கும் திட்டங்களையும், மக்களை பாதிக்கும் திட்டங்களையும் ரத்து செய்வதே தங்களின் கொள்கை என்று கூறி, ஐம்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களை நிறுத்தியும், ரத்து செய்தும் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு இந்தத் திட்டத்தை மட்டும் தொடருவது ஏன்? தவெக அரசு தொடர்வது ஏற்க முடியாதவை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியின் எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வசதியாக தனியார் கட்டுமான நிறுவனம் சதுப்பு நிலத்தை ஆக்கிரத்து சாலை அமைத்தது. இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தின் எல்லைகள் வரையறுத்து அறிவிக்கை செய்யப்படாததைக் கண்டித்து, சதுப்பு நில எல்லை அறிவிக்கை செய்யப்படும் வரை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானங்களைக் கட்ட இடைக்காலத் தடை விதித்தது. இந்த உண்மைகள் தெரிந்தும் இந்த அழிவுத் திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், தவெக அரசு தொடர்வதும் ஏற்க முடியாதவை. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்குள் இத்தகைய தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை அமைப்பது 2017&ஆம் ஆண்டின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இத்தகைய தடுப்பு சுவர் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவது மட்டுமின்றி, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையும் பாதிக்கப்படும். அதனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அங்கமாக உள்ள பறவைகள், ஊர்வன வகைகள், நிலநீர் உயிரினங்கள், மீன்கள், மரங்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்டவை அழிவைச் சந்திக்கும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும். தமிழக அரசு நிறுத்த வேண்டும் கடந்த காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவகங்கள் கட்டப்பட்டன. பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் சதுப்பு நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு, பறவைகளின் வருகை நின்று விட்டது. நெய்தல் மீட்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் ஒட்டுமொத்த பள்ளிக்கரணைக்கும் அதே நிலை தான் ஏற்படும். சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான். அதை செய்வதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கும் வகையிலும், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும் தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக்கூடாது. உடனடியாக அந்தப் பணிகளை தமிழக அரசு நிறுத்துவதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்றி அந்தப் பகுதிகளை ஏற்கனவே இருந்த இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதற்கும் மேலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதை செய்யத் தவறினால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பதற்காக சென்னை மாநகர மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/retaining-wall-in-pallikaranai-marshland-risk-of-flooding-a-plan-for-destruction-not-restoration-anbumani-ramadoss



