புதுடெல்லி, பி.எப். தொகை பிடித்தம் செய்வதற்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பதன்மூலம் கூடுதல் ஊழியர்கள் பலன் அடைய உள்ளனர். தொழிலாளர்களின் சட்ட பாதுகாப்பு அமைப்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ) திகழ்கிறது. மாதாந்திர சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள தொழிலாளர்களை இந்த அமைப்பில் சேர்க்கவேண்டியது கட்டாயமாகும். அவர்களுக்கு இந்த அமைப்பு கட்டாய பாதுகாப்பை வழங்குகிறது. அதுபோல 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை வைத்திருக்கும் நிறுவனமும் இந்த அமைப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதாவது புதிதாக வேலைக்கு சேர்பவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரத்தை தாண்டாமல் இருந்தால் மட்டுமே இபிஎப்ஓ வாயிலாக கட்டாய சமூக பாதுகாப்பு கிடைத்தது. அதற்கு மேல் சம்பளம் பெற்று புதிதாக சேர்பவர்களை நிறுவனங்கள் கட்டாயமாக பிஎப்-க்குள் சேர்க்க வேண்டியதில்லை. அப்படியே சேர்க்கப்பட்டு அவர்களின் சம்பளம் அதிகமாக இருந்தாலும், ரூ.15 ஆயிரம் வரம்பை பின்பற்றி ஊழியர் மற்றும் நிறுவனம் தலா ரூ.1,800 பங்களிப்பு செலுத்தினால் போதும். இந்த ஊதிய வரம்பை உயர்த்த வேண்டும் என தொழிலாளர் நல அமைப்புகள் கோரிக்கை வைத்தன. சம்பள உயர்வு 2014-ல் ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டதில் இருந்து தற்போது வரை பல மாநிலங்களிலும், பல்வேறு தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமும் தற்போதுள்ள வரம்புக்கு நெருக்கமாக உயர்ந்து இருக்கிறது. 8-வது ஊதியக்குழுவும் விரைவில் வர இருக்கிறது. இதனால் சம்பளம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது கட்டமைப்பை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தது. இதனைத்தொடர்ந்து பிஎப் பிடித்தம் செய்வதற்கான ஊதிய வரம்பை உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரைகள் மீது அமைச்சகங்களுக்கு இடையே விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு உரிய முடிவு எட்டப்பட்டது. உச்சவரம்பு உயர்வு இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டு, பிஎப் தொகை பிடித்தம் செய்வதற்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதலின் மூலம் கூடுதலாக 51 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட இருக்கிறார்கள். தற்போது சுமார் 8 கோடி தொழிலாளர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 82 லட்சம் தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். பிஎப் பிடித்தம் செய்வதற்கான சம்பள வரம்பு உயர்த்தப்பட்டிருப்பதால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.11,339 கோடி கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது வழங்கப்பட்டு வரும் பட்ஜெட் நிதி ஆதரவான ரூ.10,250 கோடியை விட அதிகம் ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்துக்கு தோராயமாக ரூ.56,696 கோடி செலவு செய்யப்படும். ஊழியர்கள் பெறும் பலன்கள் பி.எப். தொகை பிடித்தம் செய்வதற்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பது ஊழியர்களுக்கு எத்தகைய பலன்களை வழங்கும் என்பதை பார்ப்போம். அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டிருப்பதால், மாதம் ரூ.15,000 முதல் ரூ. 25,000 வரை ஊதியம் பெறும் கூடுதல் ஊழியர்கள் கட்டாய இபிஎப் வரம்பிற்குள் கொண்டு வரப்பட உள்ளனர். இது இந்த திட்டத்தின் மிக முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய உச்சவரம்பின்படி, ரூ. 15,000-க்கு மேல் ஊதியம் பெறும் ஒரு புதிய ஊழியர் பணியில் சேரும்போது, அவர் தானாகவே கட்டாய இபிஎப் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவதில்லை. ஆனால், ஊதிய வரம்பு உயர்த்தப்படுவதன் மூலம், முறையான சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெறக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஊழியர்களில் பெரும்பகுதியினர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வாயிலாக முறையான நீண்டகால சேமிப்புத் திட்டத்தைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள். பணியில் இருக்கும்போது மேற்கொள்ளப்படும் இத்தகைய தொடர்ச்சியான பிஎப் பங்களிப்புகள் நீண்ட கால சேமிப்பை உருவாக்க உதவுவதுடன், ஓய்வுக்காலம் அல்லது தேவையான நேரத்தில் பணத்தை திரும்பப் பெறும்போது நிதி ஆதரவை அளிக்கின்றன. ஓய்வூதிய பலன்கள் தகுதியுள்ள ஊழியர்கள், ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியப் பாதுகாப்பை பெற முடியும். இது அத்திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. இதற்குமுன்பு ஊதியம் பழைய உச்சவரம்பை விட அதிகமாக இருந்து, கட்டாய இபிஎப் வரம்பிற்குள் வராத தொழிலாளர்களுக்கு, இனி ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தக்கூடும். காப்பீட்டு பாதுகாப்பு ஊதிய வரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பதால், அதிகமான ஊழியர்களை முறைசார்ந்த இபிஎப்ஓ கட்டமைப்பிற்குள் கொண்டுவந்து, அவர்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பும் கிடைக்க வழிவகுக்கும். ஊழியர்களின் வைப்பு நிதி சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய விதிகளின்படி உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கும். இந்த மாற்றம் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் சார்ந்தது மட்டுமல்ல; ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு முறைகள் மாறிவரும் சூழலில், தொழிலாளர்களுக்கான முறைசார் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/govt-raises-epfo-wage-ceiling-hiked-to-rs-25000-what-are-the-benefits-to-employees




