மும்பை, மராட்டிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து, ஓராண்டு நவீன மருந்தியல் சான்றிதழ் படிப்பு முடித்த ஓமியோபதி டாக்டர்களும் அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம் என மாநில அரசு அனுமதி அளித்தது. இதற்கு மராட்டிய பயிற்சி டாக்டர்கள் சங்கம்(மார்ட்) கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எம்.பி.பி.எஸ். படிப்பும், அதற்கு பிந்தைய மருத்துவ பயிற்சியும் பெற்ற டாக்டர்களுக்கு இணையாக, வெறும் 1 ஆண்டு கால சான்றிதழ் படிப்பு பெற்றவர்களை அலோபதி மருத்துவம் பார்க்க அனுமதிப்பது மருத்துவ தரத்தை குறைக்கும் என ‘மார்ட்’ சங்கம் கூறியது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த உத்தரவை மராட்டிய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இதில் மாநிலம் முழுவதும் உள்ள 32 அரசு மருத்துவக் கல்லூரிகளின் பயிற்சி டாக்டர்கள் பங்கேற்றனர். நேற்று 2-வது நாளாக பணியை புறக்கணித்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவ சேவை முடங்கியது. இந்நிலையில் மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ரவீந்திர குகே மற்றும் நீதிபதி கவுதம் அன்காத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தங்கள் உரிமைகளுக்காக போராட ஒவ்வொருவருக்கும் சட்டப்பூர்வ உரிமை இருக்கலாம். ஆனால் அது நோயாளிகளின் உயிரை பறிக்கும் விலையாக இருக்கக்கூடாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகளின் ஆரோக்கியம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். நோயாளிகளின் உயிரை பணயம் வைத்து ஏன் இந்த வேலைநிறுத்தம்? நாளை உங்கள் போராட்டம் ஒருவேளை வெற்றியடையலாம். ஆனால், இந்த போராட்டத்தின்போது சிகிச்சையின்றி உயிரிழக்கும் நோயாளிகளுக்கு உங்களால் மீண்டும் உயிர் கொடுக்கமுடியுமா? ஒரு தொழிற்சாலையில் 30 நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தால் பண இழப்பு மட்டும்தான் ஏற்படும். ஆனால் மருத்துவமனையில் டாக்டர்கள் வேலைநிறுத் தம் செய்தால் மனித உயிர்கள் பறிபோகும். உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களின் ஊதியம் நிறுத்தப்படும்” என்று கடும் எச்சரிக்கை விடுத்தனர். நீதிபதிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த வக்கீல் எஸ்.யு.காம்தார் மற்றும் மத்திய 'மார்ட்' சங்கத் தலைவர் டாக்டர் அதர்வா ஷிண்டே ஆகியோர் ஐகோர்ட்டில் ஆஜராகி, போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் செப்டம்பர் 8-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் மருத்துவர்கள் இதுபோன்ற வேலைநிறுத்தங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கான சட்ட வழிகாட்டுதல்களை உருவாக்க மூத்த வக்கீல் வினீத் நாயக் மற்றும் வக்கீல் அமோக் சிங் ஆகியோரை ஐகோர்ட்டு நியமித்தது. போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், பயிற்சி டாக்டர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) பணிக்கு திரும்பியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/high-court-warning-trainee-doctors-in-maharashtra-call-off-strike-returned-to-work-today




