மகாவிஷ்ணுவுக்குரிய விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம் ஆகும். மிக உயர்ந்த பலன்களை தரக்கூடிய இந்த விரதத்தை கடைப்பிடிப்பது மிகவும் எளிதானது. பக்தர்கள் தங்களின் உடல் வலிமைக்கு ஏற்ப விரத முறையை தேர்வு செய்யலாம். உணவு எதுவும் சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். பால் அல்லது பழங்களை மட்டும் உட்கொண்டு விரதம் இருக்கலாம். குறிப்பாக, இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பக்தர்கள் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற தானிய உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை ஏகாதசி தினம் வரும். ஏகாதசி நாளில் விரதம் இருந்து இருந்து வழிபடும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்வார் எனது ஐதீகம். ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் சுத்திகரிக்கப்பட்டு தூய்மை அடையும். ஏகாதசி விரதம் இருப்பது, இந்த ஜென்மத்தை நமக்கு கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது. அவ்வகையில் ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினமான இன்று, பகவானின் தீவிர பக்தர்கள் முழு உபவாசம் இருந்து வழிபடுகிறார்கள். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், தானிய உணவை தவிர்த்து விரதம் கடைப்பிடிக்கிறார்கள். இன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி, பெருமாளின் திவ்ய நாமங்களைச் சொல்லி பாராயணம் செய்வது நல்லது. புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து சுவாமிக்கு படைக்கலாம். குறிப்பாக, பெருமாளுக்கு பிடித்தமான துளசி சார்த்தி வழிபடுவது பல நன்மைகளை வழங்கும். துளசி தீர்த்தம் பருகவேண்டும். பெருமாளுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது, வாழ்வில் வளம் சேர்க்கும். இன்றைய ஏகாதசிக்கு யோகினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசியின் சிறப்பு குறித்து பகவான் கிருஷ்ணர், யுதிஷ்டரிடம் கூறியதாக பத்ம புராணத்தில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகினி ஏகாதசி விரத கதை ஒருமுறை பகவான் கிருஷ்ணரிடம் யோகினி ஏகாதசியின் சிறப்பு குறித்து யுதிஷ்டிரர் கேட்டார். அவருக்கு யோகினி ஏகாதசி குறித்த கதையை பகவான் கிருஷ்ணர் கூறினார். யோகினி என்பது ஆஷாட மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர். இந்த நாளில் விரதம் அனுஷ்டித்து வழிபடும் பக்தர்களின் எல்லா பாவங்களும் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும். அழகாபுரி நகரை ஆண்ட குபேரனின் வேலைக்காரர்களில் ஒருவரான ஹேமமாலி, தெய்வ வழிபாட்டிற்காக மானசரோவரில் இருந்து பூக்களை வாங்கி ஒப்படைக்கும் பணியை செய்து வந்தார். ஒரு நாள், மானசரோவரில் இருந்து மலர்களை சேகரித்த பிறகு, ஹேமமாலி, காம ஆசைகளுக்கு ஆளானார். இதனால் குபேரனுக்கு மலர்களை வழங்குவதை மறந்து தனது மனைவியுடன் இன்பத்தில் ஈடுபட்டார். இந்த தகவல் அறிந்து ஆத்திரமடைந்த குபேரன், தனது மரியாதைக்குரிய தெய்வமான சிவபெருமானை அவமரியாதை செய்துவிட்டதாக கூறியதுடன், ஹேமமாலி அவரது மனைவியை பிரிந்து தொழுநோயாளியாக மாறும்படி சாபமிட்டார். குபேரனின் சாபமும். சாப விமோசனமும் இவ்வாறு குபேரனால் சபிக்கப்பட்ட ஹேமமாலி பூமியில் விழுந்து தொழுநோயாளியாக மாறினான். கால் போன போக்கில் அலைந்து கொண்டிருந்த அவர், இறுதியில் மார்க்கண்டேய ரிஷியை சந்தித்து, நடந்த சம்பவத்தை கூறி, தனது துன்பத்தைப் போக்கி, சாப விமோசனம் பெறும் வழிமுறைகளை கூறும்படி கைகூப்பி கேட்டான். உண்மையைச் சொன்னதால் ஹேமமாலிக்கு உபாயம் கூற முன்வந்த மார்க்கண்டேய ரிஷி, முக்தி தரும் யோகினி ஏகாதசி விரதத்தைப்பற்றி கூறினார். ஆஷாட மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் யோகினி ஏகாதசி விரதத்தை உண்மையாகக் கடைப்பிடித்தால், பாவங்கள் அனைத்தும் நீங்கி விடுவிக்கப்படுவதுடன், முழுமையாக குணமடையலாம், என்றார். மார்க்கண்டேய ரிஷியின் அறிவுரைப்படி யோகினி ஏகாதசி விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்த ஹேமமாலி, அந்த விரதத்தின் பலனாக, பழைய தோற்றத்தைப் பெற்று, மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். இந்த கதையை யுதிஷ்டிரரிடம் கூறிய பகவான் கிருஷ்ணர், “இந்த புனித நாளில் விரதம் இருப்பது அனைத்து பாவங்களையும் நீக்குகிறது, இறுதியில் முக்தி மற்றும் சொர்க்கத்தை அடைவதற்கு வழிவகுக்கும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/yogini-ekadashi-viratham-paves-the-way-for-attaining-heaven-by-cleansing-sins




