ஆப்பிரிக்க கதைகள் உலகளவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு மற்றும் கல்வி சார்ந்த உள்ளடக்கங்களின் சந்தை 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் ரூ.9.65 லட்சம் கோடி) அதிகமாக உள்ளது. ஆனால் அதில் ஆப்பிரிக்க கதைகள் மிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளன. இந்த குறையைப் போக்கும் வகையில், ஆப்பிரிக்க குழந்தைகளின் கதைகளை உலக அரங்கில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அப்ரோடூன்ஸ் (Afrotoons) உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை குழந்தைகளுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்துவதுடன் ஆப்பிரிக்க அடையாளத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதையும் நிறுவனம் தனது இலக்காக கொண்டுள்ளது. தமிழ் இலக்கியம், சினிமா மற்றும் அனிமேஷன் படைப்புகள் உள்ளூர் கதைகளையும், மொழிகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியது போல ஆப்பிரிக்க குழந்தைகளும் தங்களது கலாசாரம் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களுடன் வளர வேண்டும் என்பதே அப்ரோடூன்ஸின் நோக்கமாகும். சிறப்பு காட்சி மேலும், நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இணைந்து செயல்படுவது, இரு பகுதிகளுக்கும் இடையே வலுப்பெற்று வரும் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது. உள்ளூர் கலாசாரம் மற்றும் அடையாளத்தை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் ரசிக்கும் வகையிலான கதைகளை அப்ரோடூன்ஸ் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், கானா தலைநகர் அக்ராவில் நிறுவனம் தனது முன்அறிமுக விழாவை நடத்தியது. இந்த விழாவில் அப்ரோடூன்ஸ் நிறுவனத்தின் முதல் கார்ட்டூன் ஆங்கில தொடரான 'செலாசேஸ் அட்வெஞ்சர்ஸ்' என்ற தொடரின் முதல் பகுதி சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. விழாவில் கானா தேசிய திரைப்பட ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி கபுய் டாங்கு-பிட்சர், யுனெஸ்கோ கலாசார திட்ட அதிகாரி கார்ல் அம்பா, கானாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் கலாசார விவகார அதிகாரி டோன்யா எல்ட்ரிட்ஜ், அமெரிக்க தூதரக பொதுமக்கள் தொடர்பு நிபுணர் நீ டெட்டே நெட்டி, யுனிசெப் சமூக மேலாளர் சோன்யா சாகன், நிதி நிபுணர் எஸ்பென் எம்போர்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முக்கியத்துவம் விழாவில் தினத்தந்தி குழும இயக்குனரும், அப்ரோடூன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான ஆதவன் ஆதித்தன் கூறியதாவது:- “இது ஒரு நிறுவனத்தின் முன்அறிமுக நிகழ்ச்சி மட்டுமல்ல. ஆப்பிரிக்காவின் கதைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் புதிய முயற்சியின் தொடக்கமாகும். நீண்ட காலமாக உலக அளவில் ஆப்பிரிக்க குழந்தைகளின் கதைகளுக்கு போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அந்த நிலையை மாற்றவே நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஆப்பிரிக்காவின் வளமான வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை குழந்தைகளுக்கு சுவாரசியமான முறையில் அறிமுகப்படுத்துவதே எங்களின் நோக்கம். அதற்காக உயர்தர கார்ட்டூன் தொடர்கள், டிஜிட்டல் கதைப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு படைப்புகளை உருவாக்க உள்ளோம்” என்றார். நாயகர்கள் அப்ரோடூன்ஸ் நிறுவனத்தின் தலைமை உள்ளடக்க அதிகாரி அமா ஆடி-டாகோ செய்டு கூறுகையில், "உலகின் பல நாடுகளின் கதைகள் கார்ட்டூன்களாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆப்பிரிக்க குழந்தைகள் தங்களை கதைகளின் நாயகர்களாக பார்க்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. அந்த நிலையை மாற்றுவதே எங்களின் நோக்கம்" என்றார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்தர் பால் கூறுகையில், "நான் சிறுவயதில் பார்த்த கார்ட்டூன்களில் ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் இல்லை. அதனால் நமது குழந்தைகளுக்காக நாமே கதைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதுவே இந்த நிறுவனத்தின் உருவாக்கத்துக்கு காரணமாக அமைந்தது" என்றார். ஆப்பிரிக்க சிறுமி செலாசே அப்ரோடூன்ஸ் நிறுவனத்தின் முதல் முக்கிய தயாரிப்பாக உருவாகி வரும் 'செலாசேஸ் அட்வெஞ்சர்ஸ்' தொடர், 4 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே பயணம் செய்வது ஆப்பிரிக்கர்களுக்கே எளிதானதாக இல்லாத சூழ்நிலையில், ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் உள்ள நாடுகள், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாசாரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது தொடரின் கதாநாயகியான செலாசே என்ற சிறுமி, ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆப்பிரிக்காவின் ஒரு புதிய நாட்டுக்கு பயணம் செய்து அங்குள்ள கலாசாரம். மரபுகள், வரலாறு மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வார். முதல் சீசனில் 13 அத்தியாயங்கள் இடம்பெற உள்ளன. முதல் அத்தியாயத்தைத் தொடர்ந்து 2-வது அத்தியாயமும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தொடர் நிறுவனத்தின் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து அப்ரோடூன்ஸ் நிறுவனத்தின் கார்ட்டூன் தொடர்களை காணலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/afrotoons-creates-cartoon-series-for-children-that-showcase-african-culture-to-the-world




