முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அல்லது போலீஸார் என எதாவது ஒரு விசாரணை அமைப்பின் பெயரை சொல்லி காரியத்தை சாதிக்கிறார்கள். மும்பையில் டிராவல்ஸ் தொழில் செய்து வரும் 73 வயது முதியவர் ஒருவரை டெல்லியை சேர்ந்த ஒரு சைபர் கிரிமினல் கும்பல் டிஜிட்டலில் கைது செய்து பணத்தை பறித்து வந்தனர். மும்பை அந்தேரியைச் சேர்ந்த சேர்ந்த அந்த முதியவர் போலி பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் போல நடித்த மோசடிப் பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டு, சுமார் 8 கோடி ரூபாயை இழந்துள்ளார். அவர்கள் முதியவரை கிட்டத்தட்ட இரண்டு வாரம் 'டிஜிட்டல் சிறை'யில் வைத்திருந்தனர். இது குறித்து புது டெல்லியில் உள்ள இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் உளவுப் பிரிவுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் இது குறித்து மும்பை சைபர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து மும்பை மேற்கு மண்டல சைபர் போலீஸ் நிலைய அதிகாரிகள் கடந்த 18ம் தேதி அவரது வீட்டிற்கு வந்து, மோசடி கும்பலால் அவர் மோசடி செய்யப்படுகிறார் என்று தெரிவித்தபோதுதான், தான் ஏமாற்றப்பட்டதை அந்தப் முதியவர் முதன்முறையாக உணர்ந்தார். இதையடுத்து அவர் முறைப்படி புகார் செய்தார். அவர் தனது புகாரில்,''எனக்கு கடந்த 5ம் தேதி காலை 11.30 மணியளவில் வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. அந்த அழைப்பாளர், அவர் டெல்லி காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் என் பெயரிலான வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டதால், என்னை விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். அந்த வாட்ஸ்அப் எண்ணில் டெல்லி காவல்துறையின் இவ்வழக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால், இது மிகுந்த ரகசியத்தன்மையுடன் விசாரிக்கப்படும் என்றும், எனவே இது குறித்து வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் அவர்கள் என்னிடம் கூறினார்கள். விசாரணைக்காக எனக்கு ஒரு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்தது. அழைத்தவர் தன்னை டெல்லி போலீஸ்துறையைச் சேர்ந்த ராகுல் குப்தா என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்க எனது ஆதார் அட்டை விவரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் 7 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், வாட்ஸ்அப் மூலமாகவே கைது வாரண்ட் அனுப்பப்போவதாகவும் அவர் மிரட்டினார். இதனால் நான் பயந்துபோனேன். கடந்த 18ம் தேதி சைபர் பிரிவு அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து நான் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளாகியிருப்பதாக கூறியபோதுதான், நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்,"என்று குறிப்பிட்டுள்ளார். இம்மோசடி குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரி கூறுகையில், ''ஒரு சாதாரண அழைப்பாகத் தொடங்கி சம்பந்தப்பட்ட நபரை விரைவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பலமணி நேரம் சட்டரீதியான அச்சுறுத்தல்கள் கொடுக்கின்றனர். புகார்தாரரை அச்சுறுத்தும் வகையில், அமலாக்கத் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான போலியான ஆவணங்களை மோசடிக்காரர்கள் அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளனர். அத்துடன், அவர் எங்கே இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவ்வப்போது அவரைத் தொடர்புகொண்டு பேசவும் செய்தனர். பின்னர், டெல்லி சைபர் காவல் நிலையத்தைச் சேர்ந்த நிஷா படேல் என்பவர் அவரைத் தொடர்புகொண்டு, வங்கிக் கணக்கில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகளில் அவருக்குத் தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிவதால், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், சரிபார்ப்புக்காக அவரது அனைத்து மியூச்சுவல் ஃபண்ட், வைப்புத்தொகைகள் மற்றும் வங்கிக் கணக்கு இருப்புகள் ஆகியவற்றைத் தாங்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த மோசடிக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு போன்ற போலியான ஆவணம் ஒன்றையும் அவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினர்''என்று தெரிவித்தார். புகார்தாரர் ஜூலை 7 முதல் 16-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்த பல்வேறு தனியார் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ரூ. 7.9 கோடியை இரண்டு வார டிஜிட்டல் கைதின் போது ஆறு தவணைகளாக மாற்றியுள்ளார். அந்த ரூ. 7.9 கோடியை மீட்டெடுக்கும் நடவடிக்கையை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/held-in-digital-arrest-for-two-weeks-73-year-old-man-realizes-he-was-scammed-of-8-crore-after-police-alert




