சென்னையைச் சுற்றியிருக்கும் மூன்று அம்மன் தலங்களை ஒரே நாளில் தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள். அவை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சி கோயில், குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயில் ஆகியன. இவை மூன்றையும் ஒரே நாளில் தரிசித்து வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் காத்யாயினி அம்மன் ஆல்யத்தில் அம்மனை வழிபட்டால் திருமணம் ஆகாத இளம் வயதினருக்கு விரைவில் திருமண பாக்கியம்கிடைக்கும் என்கிறார்கள். வாருங்கள், அந்த அற்புதத் தலத்தின் மகிமைகளை அறிந்துகொள்வோம். `காத்யாயினி’ என்ற பதத்துக்கு, தன்னை நாடி வந்து வணங்கும் அன்பர்களின் கல்யாண வேண்டுதலை, ஓர் அயன காலத்துக்குள் நிறைவேற்றி அருள்பவள் என்றே பொருள் கொள்ளலாம். அதாவது காத்யாயினி தேவியை வழிபட்டால் ஆறு மாத (ஓர் அயனம்) காலத்துக்குள் திருமண பாக்கியம் கிடைக்குமாம். குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயில் ஸ்ரீகிருஷ்ணரை அடைவதற்கான தடைகள் நீங்க வேண்டும் என விரும்பிய கோபியர், ஒருநாள் கானகத்தின் வழியில் காத்யாயன மகரிஷியைச் சந்தித்தனர். அவரை வணங்கி, தங்களது பிரச்னைக்குத் தீர்வுவேண்டினர். உடனே அவர் தன் வாக்கிருந்து வந்த பீஜ மந்திரங்களைக் கொண்டு காத்யாயினி தேவியை உருவாக்கித் தந்து, ‘இந்த தேவியை வழிபட்டால், விரைவில் தடைகள் நீங்கும்’ என்று உபதேசித்ததாக புராணத் தகவல் உண்டு. லலிதா சகஸ்ரநாமத்திலும், லலிதா திரிசதியிலும் இந்தத் தேவியின் மகிமை கூறப் பட்டுள்ளது. இங்ஙனம், ஞானநூல்கள் பலவும் விவரிப்பது போல் கல்யாண வரம் தரும் நாயகியாய், தேவிஸ்ரீ காத்யாயினி அம்மன் கோயில்கொண்டிருக்கும் தலம்தான் குன்றத்தூர். பெண்களின் தெய்வமாய் அவர்களது பிரச்னைகளை நீக்கியும், கல்யாண வரம் தந்தும் தேவிஸ்ரீ காத்யாயினி அம்மன் அருள்பாலிப்பதால், இந்தத் தலத்தை சக்தி கோயில் என்றே அழைக்கிறார்கள். இந்த அம்பிகையின் திருமேனி சந்திரகாந்தக் கல்லாலானது. அம்பிகையின் திருமேனியில் இருந்து பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அதிகளவில் மின்காந்த சக்தி வெளிப்படும் எனும் நம்பிக்கை உண்டு. எனவே குறிப்பிட்ட தினங்களில், அன்னையைத் தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். கருவறையில் நிதிகளின் தலைவனாகிய குபேரனின் சிலைகள் இரண்டு பீடத்தைத் தாங்கி நிற்க, நாகாபரணம் பூண்டவளாய் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறாள் தேவிஸ்ரீ காத்யாயினி அம்மன். தேவியின் பாதத்தில், ஸ்ரீசக்ர மகாமேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு சந்நிதி கொண்டுள்ள தோரண கணபதியை வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள். குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயில் திருச்சுற்றில் தனலட்சுமி, ஆதிலட்சுமி முதலாக அஷ்டலட்சுமியரையும் தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் இந்த லட்சுமி தேவியர் தாங்கியருளும் லட்சுமி கோபுரம் சாந்நித்தியம் மிகுந்த ஆன்மிகச் சின்னமாகத் திகழ்கிறது. தொடர்ந்து திருச்சுற்றை வலம் வரும்போது மூன்று கிளை வேம்பின் கீழ் குடும்பத்துடன் அருளும் நாகராஜரைத் தரிசிக்கலாம். இவரை, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தீபமிட்டு வழிபட்டால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும். அடுத்து நாம் தரிசிப்பது, பாலதுர்கை. இந்த தேவியும் வரப்பிரசாதியானவள். கன்னிப் பெண்களும், திருமணம் ஆகாத ஆண்களும் காத்யாயினி அம்மனின் சந்நிதிக்கு மூன்று வாரங்கள் வந்து வழிபட வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து மூன்று வாரங்கள் சென்று வழிபடலாம். திருமணப் பரிகாரம் முதல்முறை செய்யும் தரிசனத்துக்கு ‘காத்யாயினி தேவி திருமண பூஜை’ என்று பெயர். இரண்டு தேங்காய்களை வைத்து கிரக தோஷங்கள் நீங்கிட பிரார்த்தனை செய்து, காத்யாயினி அம்மனை வேண்டிக்கொள்ளும் கல்யாண ஸ்துதியான ‘ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் காத்யாயினி மஹாமாயே மஹாயோகினியதீஸ்வரி நந்தகோப சுதம்தேவம் அதிசீக்ரம் பதிம்மே குருதே நம:’ என்ற மூல மந்திர வரிகளை 16 முறை சொல்ல வேண்டும். இரண்டாவது வாரத்தில், ஆலயத்தில் விருட்ச பூஜை செய்து, பெண்ணின் வலக்கையில் மஞ்சள் காப்பு அணிந்து கொண்டு பிரார்த்தனை செய்து, மேலே சொன்ன மூலமந்திரத்தை 16 முறை ஜபிக்க வேண்டும். காத்யாயினி அலங்காரம் மூன்றாவது வாரம் தரிசிக்கும்போது ஜனன ஜாதகத்தை அம்மன் பாதத்தில் வைத்து, ‘ஜன்ம பத்திரிகா பூஜை’ என்ற விசேஷ பூஜையை செய்து அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். இப்போதும் ஆலயத்தை மும்முறை வலம்வந்து 16 முறை கல்யாண மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ஜாதகத்தில் நாகதோஷம், களத்திர தோஷம், தாரதோஷம் இருந்தால் அவை அகன்று, விரைவில் திருமணப்பேறு கிடைக்க இந்த வழிபாடு செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட அற்புதமான அம்மனின் ஆலயத்துக்கு வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும். எப்படிச் செல்வது? சென்னை - குன்றத்தூர், முருகன் கோயில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில், ஸ்ரீஊரகப்பெருமாள் ஆலயச் சுவரை ஒட்டியவாறு, சுமார் 100 மீட்டர் தூரம் சென்றால் காத்யாயினி ஆலயத்தை அடையலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/spiritual/temples/kundrathur-kathyayani-amman-temple




