கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 98 சவரன் நகைகள் மீட்பக்கட்டுள்ளன. இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 24-ம் தேதி இரவு சுமார் 12:30 மணியளவில் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.ஐ.பி கார்டனில் வசிக்கும் வினோத் குமார் என்பவர் '100'-க்கு அழைத்து, தங்கள் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்தார். உடனடியாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையக் குழு சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தது. கொள்ளைச் சம்பவம் என உறுதி செய்யப்பட்டவுடன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தப்பட்டது. வீட்டின் பின்புறக் கதவை கட்டர் மெஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்து, தரைத்தளத்தில் உள்ள இரண்டு அறைகளையும், முதல் தளத்தில் உள்ள அறையையும் சோதனை செய்து நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவ இடத்திலிருந்து 2 கையுறைகள், 1 முகக்கவசம் மற்றும் கதவை அறுக்கப் பயன்படுத்திய கட்டர் மெஷினின் பிளேடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் மற்றும் 5 உதவி ஆய்வாளர்கள் மேற்பார்வையில் மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகள் சம்பவ இடத்திற்குள் வந்த வழி குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு, குற்றவாளிகள் வெளியேறிய வழி குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு, அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதி சாட்சிகளிடம் விசாரிக்க ஒரு குழு, கால் டீட்டெயில்ஸ் ரெக்கார்ட் மற்றும் செல்போன் டவர் லொக்கேசன் தரவுகளை ஆய்வு செய்ய ஒரு குழு., இதே முறையில் இதற்கு முன் குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை ஆய்வு செய்ய ஒரு குழு என தனித்தனியாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. கைதுசெய்யப்பட்டவர்கள் சம்பவ இடத்தில் இரவு 11:30 முதல் 12:30 மணி வரை சந்தேகப்படும்படி சென்ற 3 பைக்குகளில் ஒரு பைக் பிரதான சந்தேகத்திற்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டது. அந்த பைக்கை பின்தொடர்ந்து சென்றோம். இதற்காக மொத்தம் 160 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. நாகர்கோவிலில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலும், அங்கிருந்து பிற மாவட்டங்கள் வரையிலும் கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஒரு சிசிடிவி கேமராவில் குற்றவாளியின் பைக்கின் பதிவு எண் மற்றும் அவரது முகம் தெளிவாகத் தெரிந்தது. தொழில்நுட்ப ஆய்வின் மூலம் செல்போன் எண்களை ஆய்வு செய்து ஒரு எண்ணை உறுதிப்படுத்தியபோது, அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை ஸ்ரீவைகுண்டத்திற்குச் சென்ற நிலையில், அவரது நடமாட்டம் மீண்டும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி வருவது கண்டறியப்பட்டது. உடனடியாக மாவட்டத்தின் அனைத்து நுழைவு வழிகளிலும் வாகனத் தணிக்கை முடுக்கிவிடப்பட்டது. குமரி மாவட்டத்தின் எறும்புகாடு பகுதியில் வாகனச் சோதனையின் போது, கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த இசக்கி பாண்டி மற்றும் முருகன் ஆகிய இருவரைப் பிடித்தனர். அவர்கள் பையில் இருந்து முதற்கட்டமாக 5 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் திருட்டு நகைகளைப் பெற்றுக்கொண்ட மேலும் இருவரான முருகேசன் மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை 98 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகளை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 100 சவரன் வரை நகைகள் திருடுபோனதாகக் கூறியுள்ளனர். யூடியூப்பர் மதுமிதா பாதிக்கப்பட்ட வினோத் குமார் மற்றும் அவரது மனைவி மதுமிதா இன்ஸ்டாகிராமில் தனது வீடு உள்ளிட்ட இடங்களை ரீல்ஸ் வீடியோக்களாக பதிவிட்டு வந்துள்ளனர். முக்கியக் குற்றவாளியான இசக்கி பாண்டி, கடந்த 5 முதல் 6 மாதங்களாக இவர்களது வீடியோக்களை உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளார். வீடியோக்களைப் பார்த்து வீட்டின் அமைப்பு, எந்தெந்த அறைகளில் என்னென்ன பொருட்கள் உள்ளன, எவ்வளவு நகைகள் வைத்துள்ளனர் என்பதை வீடியோ மூலம் பார்த்து திட்டமிட்டுள்ளார். அவர்கள் குழந்தையின் வீடியோவும் போட்டுள்ளனர். அந்த குழந்தையின் ஸ்கூல் பேக்கில் இருந்த பள்ளி அடையாளத்தை வைத்து, குழந்தையைப் பின்தொடர்ந்து சென்று வீட்டின் முகவரியைக் கண்டுபிடித்துள்ளனர். வீட்டின் முன்பிருந்த பெயர்ப் பலகையை வைத்தும் வீட்டை உறுதி செய்துள்ளனர். கடந்த 1-ம் தேதியிலிருந்து தொடர்ந்து அப்பகுதிக்கு வந்து நோட்டமிட்டு, கார் வீட்டில் இல்லாததை உறுதி செய்துகொண்டு இக்கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன் குற்றப் பின்னணி இல்லாதவர்கள். இப்போதுதான் முதல் முறையாகக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். நகைகள் தவிர ரொக்கப் பணம் குறித்துப் புகாரில் ஏதும் குறிப்பிடப்படவில்லை" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/what-happen-in-youtuber-madhumitha-house-robbery




