நடிகர் ஆர்யா மீது ரூ.1.80 கோடி மதிப்பிலான நிதி மோசடி புகாரின் அடிப்படையில் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து ஆர்யா, இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ‘சார்பட்டா’ இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், 'ரன் பேபி ரன்' படத்தை இயக்கிய ஜியென் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘அனந்தன் காடு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரித்த இப்படத்தில் நிகிலா விமல், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 25ம் தேதி வெளியானது. ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் திரைப்பட உபகரணங்கள் வாடகைக்கு வழங்கும் நிறுவனம் அளித்துள்ள புகாரில், ‘அனந்தன் காடு’ திரைப்பட படப்பிடிப்பிற்காக உயர்தர கேமராக்கள், லென்ஸ்கள், லைட்டிங் சாதனங்கள், கிரிப் உபகரணங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றுக்கான வாடகை மற்றும் சேவைக் கட்டணமாக ரூ.1.80 கோடி நிலுவையில் இருந்தும், பலமுறை கோரிக்கை விடுத்தும் பணம் செலுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல கட்டங்களில் நேரடி பேச்சுவார்த்தைகள், சட்ட நோட்டீஸ்கள் மற்றும் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இருப்பினும் தொகை கிடைக்காததால் காவல்துறையை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அந்த நிறுவனம் தனது புகாரில் தெரிவித்துள்ளது. இந்த புகாரைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட ஜூபிலி ஹில்ஸ் போலீசார், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். புகாருடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்பந்த ஆவணங்கள், விலைப்பட்டியல்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள், மின்னஞ்சல் தொடர்புகள், வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள், தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள், படக்குழுவினர் மற்றும் இந்த நிதி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய பிற நபர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவையெனில் நடிகர் ஆர்யாவிடமும் நேரில் விளக்கம் பெற போலீசார் சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் திரைப்பட உபகரணங்கள் வாடகைக்கு வழங்கும் நிறுவனம் அளித்துள்ள புகாரில் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத், படத் தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதி கிஷோர் மீது ஜூப்ளி ஹில்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் ஆர்யா தனிப்பட்ட முறையில் ஒப்பந்தத்தில் இருந்தாரா, அல்லது தயாரிப்பு நிறுவனம் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கிடையேயான வர்த்தக பரிவர்த்தனையா என்பது குறித்தும் போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளனவா, நிலுவைத் தொகை தொடர்பான வர்த்தகத் தகராறா அல்லது மோசடி நோக்கத்துடன் நடந்த செயலா என்பது விசாரணைக்குப் பிறகே தெளிவாகும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/hyderabad-police-register-case-against-actor-arya-for-fraud-of-rs-180-crore




