சென்னை, ஜலதோஷம்தான் அதிகம் இருக்கிறது. பாம்பு கடி தோஷம் எல்லாம் இருப்பது போல் கேள்விப்படவில்லை என்று அமைச்சர் அருண்ராஜ், திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வத்தின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். வினாக்கள் விடை நேரம் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக வினாக்கள் விடை நேரத்தில் சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்தார். நாகதோஷம் இருக்கிறது அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, "கேள்வி நேரம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாம்பு கடி தொடர்பாக உரிய விளக்கத்தை அளித்து வருகிறார். பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி இருப்பதாக அறிய முடிகிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். ஆகவே, பேரவைத் தலைவர் மூலமாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், நாகதோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால் அதனை செய்ய வேண்டும்" என்றார். ஜலதோஷம்தான் இருக்கிறது இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், "தமிழக முதல்-அமைச்சர் தலைமையில், அறிவியல் பூர்வமான அரசைத்தான் மேற்கொண்டு வருகிறோம். தோஷம், பில்லி சூனியம் ஆகியவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால், உங்களுடைய தொகுதிக்கு தோஷம் நிவர்த்தி மேற்கொள்ளலாம். மாநில அளவில் அறிவியல் பூர்வமான முயற்சிகள் மட்டும்தான் நாம் எடுப்போம். ஜலதோஷம்தான் அதிகம் இருக்கிறது. பாம்பு கடி தோஷம் எல்லாம் இருப்பது போல் நாம் கேள்விப்படவில்லை" என்றார். அறிவியல் பூர்வமாக அணுகுவோம் இதனை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அமைச்சர் விரும்பினால் இந்த தோஷம் கழிப்பதற்கு உரியவர்களை அனுப்பி வைப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், "தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை. விருப்பமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "பெரியார் இயக்கம் பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுகக்கூடியவர்கள் என்பதை பதிவு செய்கிறோம்" என்றார். தீர்வு காண வேண்டும் இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேட்டது உண்மையாகவே ஜலதோஷத்தை பற்றிதான். எங்களுடைய துணை தலைவருக்கு உண்மையாகவே ஜலதோஷம். அவருக்கு 2 நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதற்கும் தீர்வு காண வேண்டும்" என்றார். இந்த விவாதம் சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-snake-curse-only-cold-says-minister-in-tamil-nadu-assembly




