'கனா காணும் காலங்கள்' தொடரின் முதல் சீசனில் சங்கவியாக நடித்து மக்களுக்கு பேவரிட்டானவர் மோனிஷா ரவிஷங்கர். அத்தொடருக்குப் பிறகு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பிலிருந்து முழுமையாகவே விலகியிருந்தார். வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்திருக்கும் மோனிஷா, இப்போது மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியிருக்கிறார். Idhayam Murali Movie இப்போது அதர்வா நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் 'இதயம் முரளி' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மோனிஷா. படத்தில் வரும் இவருடைய காட்சிகளை பதிவிட்டு, 'ஹே நம்ம கனா காணும் காலங்கள் சங்கவி பா!' என ஆச்சரியத்துடன் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். ரீ-என்ட்ரிக்கு வாழ்த்துச் சொல்லி மோனிஷாவிடம் சின்னதாகப் பேட்டி கண்டோம். நம்மிடையே பேசியவர், " 'இதயம் முரளி' படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் இந்த அளவுக்கு ஆழமாகப் பதியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 'படத்தில் பல கதாபாத்திரங்கள் இருக்கின்றன. என்னுடைய கேரக்டர் தனித்துத் தெரியுமா!' என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எனக்கு இருந்தது. ஆனால், தியேட்டர்களில் படத்தைப் பார்த்துவிட்டுப் பலரும் என்னை சமூக வலைத்தளங்களில் டேக் செய்து பாராட்டி வருகிறார்கள். என்னுடைய எதிர்பார்ப்பையும் தாண்டி மக்கள் கொடுக்கும் இந்த வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. Kana Kaanum Kaalangal - Monisha Ravishankar கடந்த சில வருடங்களாகவே மீண்டும் சினிமாவுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு 'இதயம் முரளி' படத்தின் இயக்குநர் என்னை அணுகி இந்த கதாபாத்திரம் பற்றி சொன்னார். படத்தின் இயக்குநரே 'கனா காணும் காலங்கள்' தொடரின் ஒரு தீவிர ரசிகர்தான். 'இதயம் முரளி' என்னுடைய கம்பேக்கிற்கு ஒரு தகுந்த என்ட்ரியாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் என்னுடைய கேரக்டர் எவ்வளவு பெரியது என்று பார்க்காமல் உடனடியாக நடிக்கக் கமிட்டாகிவிட்டேன். தென்னிந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே 'கனா காணும் காலங்கள்' சீசன் 1 பெற்ற வெற்றியைப் போல வேறு எந்தவொரு ஷோவும் பெற்றதில்லை என்றுகூட சொல்லலாம். அந்தத் தொடரில் நடித்ததற்காக, இத்தனை வருடங்கள் கழித்தும் மக்கள் எங்களுக்கு அதே அன்பையும் அங்கீகாரத்தையும் கொடுத்து வருகிறார்கள். இன்று வரை நான் வெளியே சென்றாலும் என்னை பலரும் சங்கவி என்றுதான் அழைக்கிறார்கள். இவ்வளவு பெரிய இடைவெளிக்குப் பிறகும் மக்கள் என்னை நினைவில் வைத்து இப்போது பேசுகிறார்கள். அதுவும் அவர்கள் ஆர்வத்தோடு, 'அடுத்த ப்ராஜெக்ட் என்ன?' என்று கேட்கும்போது மிகவும் எமோஷனலாக இருக்கிறது." என்றவர், "நான் சினிமா பக்கமே வரவில்லை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் என்னை தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், நான் மருத்துவ மேல் படிப்புக்காகச் சென்றதால், என் ஒரிஜினல் பெயரைக் கூட மாற்றிக்கொண்டு முற்றிலும் அமைதியான ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். எம்.பி.பி.எஸ் படிப்பது சாதாரண விஷயம் அல்ல என்பதால், அந்தப் படிப்புக்கான முழு நேரத்தையும் உழைப்பையும் நான் கொடுத்தேன். Monisha Ravishankar - Idhayam Murali அப்போது என்னை நேரில் பார்ப்பவர்கள் 'எப்போது நடிக்க வருவீர்கள்?' என்றுதான் தொடர்ந்து கேட்பார்கள். ஆனால், சினிமாவுக்கு நான் மீண்டும் வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் நினைத்ததுபோலவே வாய்ப்பும் வந்தமைந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் முதல் நாள் கேமரா முன்னால் நின்ற அந்தத் தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பேரனுபவம்! நான் அழவில்லை என்றாலும், மனதிற்குள் பெரும் உணர்ச்சிப் பெருக்காக இருந்தது. நான் டாக்டராக இருந்தாலும் இப்போது நான் முழு நேரமாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மருத்துவப் படிப்பு மற்றும் பணிக்கான நேரத்தை ஏற்கனவே நான் கொடுத்துவிட்டதால், இனி என் முழு நேரமும் சினிமாவுக்குத்தான்!" என்றார் உற்சாகத்துடன். தொடர்ந்து பேசியவர், "எனது அடுத்த ரிலீஸ் மாதவன் சார் நடிக்கும் 'ஜிடி நாயுடு' திரைப்படம். இதிலும் ஒரு முக்கியமான கேமியோ ரோல் செய்திருக்கிறேன். அதைத் தவிர, இன்னும் மூன்று திரைப்படங்களில் நடிப்பதற்கான படப்பிடிப்புகள் தற்போது போய்க்கொண்டிருக்கின்றன. அப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். அவற்றைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். சீரியல்களைப் பொறுத்தவரை 'கனா காணும் காலங்கள்' ஒரு பள்ளி மாணவர்களின் கதையாக இருந்ததால் எனக்குப் பிடித்திருந்தது. Monisha Ravishankar - Idhayam Murali ஆனால், வழக்கமான சீரியல்களுடன் என்னால் கனெக்ட் செய்ய முடிவதில்லை. சினிமா மற்றும் ஓடிடி தளங்கள்தான் தற்போதைக்கு எனது இலக்கு. சில ரியாலிட்டி ஷோக்களில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், அதற்கு நான் செல்லவில்லை. ஆனால், எதிர்காலத்தில் 'கனா காணும் காலங்கள்' குழுவினர் அனைவரும் இணைந்து ஒரு ரீபூட் திட்டமிட்டால், அதற்கு நான் எப்பொழும் 100% தயாராக இருக்கிறேன்!" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/actress-monisha-ravishankar-exclusive-interview-kana-kaanum-kaalangal-sanghavi-idhayam-murali-comeback




