மலையாளத்தில் 'வசந்தத்தின் கனல் வழிகளில்', தமிழில் வெளிவந்த 'வீரவணக்கம்' மற்றும் 'தீ' உள்ளிட்ட புரட்சிகர அரசியல் திரைப்படங்களை இயக்கியவர் அனில் வி. நாகேந்திரன். இவர் சி.பி.எம் கட்சியில் தீவிரமாக இயங்கிவந்தார். இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சி.பி.எம் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து சினிமா இயக்குநர் அனில் வி.நாகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "மிகுந்த மனவேதனையுடன், இத்தனை காலம் மனதார நம்பியிருந்த இயக்கத்தின் வாசற்படியை விட்டு வெளியேறுகிறேன். ஒடுக்கப்பட்டவர்கள், ஏழை எளியவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் சாதி, மதம், நிறத்தின் பெயரால் பாகுபாடுகளைச் சந்தித்து கண்ணீர் சிந்துபவர்களிடம் 'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்று துணைநிற்கும் கருணையும் துணிவும்தான் கம்யூனிசம் என்று நான் புரிந்துகொண்டேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய சூழலில் அதைக் கட்சியில் காண முடியவில்லை. சி.பி.எம் கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாகி வளர்ந்ததில் தியாகமிக்க பங்களிப்பைச் செய்த பாரம்பரிய குடும்பத்தின் வழித்தோன்றல் நான். பன்முகத் திறமையாளரும், பல்வேறு தொழிற்சங்கங்களின் நிறுவனரும், மறுமலர்ச்சி நாயகர்களில் முதல் கம்யூனிஸ்டுமான டாக்டர் வி.வி.வேலுக்குட்டி அரையன் எனது பாட்டனார். ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவரான எனது தந்தை வழக்கறிஞர் வி.வி. நாகேந்திரன், அவரது சகோதரர்கள் மற்றும் எனது தாய்மாமன் பி.ஜி.வேலாயுதன் நாயர் ஆகியோர் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாகவும் தீவிர ஊழியர்களாகவும் களத்தில் நின்றவர்கள். சகாக்கள் பி.கிருஷ்ணபிள்ளை, ஏ.கே.ஜி உள்ளிட்ட தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்களும், சமூக சீர்திருத்த இயக்க முன்னோடிகளும் வந்து சென்ற ஒரு குடும்பத்தில் பிறந்ததால், இயல்பாகவே சிறுவயது முதலே இந்த முற்போக்கு இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தேன். திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிசக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ படைப்புகளை எந்தவித லாப நோக்கமும் இன்றி தயாரித்து வெளியிட்டேன். இதன் விளைவாக கோடிக்கணக்கான ரூபாய் நிதி இழப்பும் பெரும் கடன் சுமைகளும் மட்டுமே எனக்கு மிஞ்சின. அத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் எனக்கு உதவி செய்ய முன்வராதது மட்டுமன்றி, தொடர்ந்து என்னை விரட்டி விரட்டி துன்புறுத்தும் கொடூரமான செயல்பாடுகளே எனக்குக் கிடைத்தன. இந்த அநீதிகளை இனியும் என்னால் சகித்துக் கொண்டு தொடர முடியாது" இவ்வாறு அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/cinema-director-came-out-from-cpm-party




