திருச்சி, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில், உயிருடன் இருப்பவர்களை இறந்தவர் போன்று படுக்க வைத்து சடங்குகள் செய்த வினோதம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பின்னத்தூரில் பொட்டல்மேடு என்ற இடத்தில் 21 தெய்வங்களுக்கு கோவில்கள் உள்ளன. இதில் மாரியம்மன் மற்றும் கலுவடியான் கோவிலில் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 2-ந் தேதி கரகம் பாலித்தல் மற்றும் காப்புக்கட்டுதலு டன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் விநாயகர், கருப்பசாமி, எல்லையம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன், காளியம்மன் என ஒவ் வொரு சுவாமிக்கும் ஒவ்வொரு நாளும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடு பலி யிட்டும், மாவிளக்கு போட்டும், அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கழுமரம் ஏறுதல் என்ற வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. சடங்குகள் முன்னதாக கழுமரம் என்று அழைக்கப்படும் பச்சை மூங்கில் மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கழுமரத்தை இளைஞர்கள் தோலில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வந்து கோவில் முன்பாக தோண்டப்பட்டிருந்த குழியில் ஊன்றி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அருள் வந்த மருளாளி கழுமரத்தின் மீது ஏறி குறிப்பிட்ட உயரத்தில் நின்று சாமி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கழுமரம் இருந்த இடத்தின் கீழ் 2 சிறுவர்களை தரையில் படுக்க வைத்து, இறந்தவர்கள் உடலுக்கு செய்வது போன்று, சிறுவர்களின் கை, கால்களைக்கட்டி வேட்டியால் உடலை மூடி மாலை அணிவித்தனர். பின்னர் தாரை தப்பட்டை முழங்க இறந்தவர்களின் உடலுக்கு செய்யும் சடங்குகளை செய்தனர். இதேபோல் கழுமரத்தின் சற்று தொலைவில் ஒரு குழியில் உயிருடன் உள்ள ஒருவரை பிணம் போல் படுக்க வைத்து, பச்சை தென்னங்கீற்றால் மூடிவிட்டு அவரது உறவினர்கள், பொதுமக்களிடம் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. வினோதம் கழுமரத்தில் இருந்த மருளாளி அருள்வாக்கு கூறிய பின்னர். அந்த மரத்தின் கீழே பிணம் போன்று கிடத்தப்பட்ட சிறுவர்களை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆடுகள் பலியிடப்பட்டு அதன் குடலை எடுத்து அதனை மாலையாக கட்டி குழிக்குள் சடலமாக படுக்க வைக்கப்பட்டவரை எழுப்பி குடல் மாலையை அவருக்கு அணிவித்தனர். பின்னர் அங்கிருந்து கரும்புடையபாறை என்ற இடத்திற்கு சாமி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய ஐதீகத்தின் அடிப்படையில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த வினோத திருவிழாவில் பின்னத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rituals-involving-laying-living-people-down-as-if-they-were-dead-a-unique-event-at-a-temple-festival




