சென்னை. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முதல்-அமைச்சர் முடக்குவது நியாயமல்ல! கடந்த சில நாட்களுக்கு முன்பு, பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வந்தால் "விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்" என்று கூறி, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். முதல்-அமைச்சர் விஜய் அவர்கள். ஆனால், இன்று அதே சட்டமன்றத்தில், விவசாய நிலங்களை அழித்து ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டாம் என்ற அதிமுக எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், "ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டுமென்றால், விவசாய நிலங்களை எடுத்துத்தான் ஆக வேண்டும்: வேறு வழியில்லை"என்று கூறியுள்ளார். உண்மைக் காரணம் என்ன. எதற்கு இத்தனை பித்தலாட்டங்கள்? எதற்கு இந்த இரட்டை வேடம்? வளர்ச்சித் திட்டங்களுக்காக தமிழகத்தின் மற்ற விவசாய நிலங்களை கையகப்படுத்த தயாராக இருக்கும் தவெக அரசு, பரந்தூர் விவசாய நிலங்கள் மீது மட்டும் தனிக் கரிசனம் காட்டுவது போல நாடகமாடுவது ஏன்? ஏற்கனவே 1700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பரந்தூரில் விமான நிலையம் அமையவே கூடாது என முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் பிடிவாதம் பிடிப்பதன் உண்மைக் காரணம் என்ன? விவசாய நிலங்கள் காரணமாகவே பரந்தூர் திட்டம் நிராகரிக்கப்படுகிறது என்றால். ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கும் அதே விதி பொருந்தும் தானே? இரும்புக்காட்டுக்கோட்டை சிப்காட ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பெரும் தொழில் நகரங்களை இணைக்கும் படியாகவும், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயும் உள்ள பரந்தூரில், விமான நிலையம் அமைப்பதில் தவெக அரசுக்கு என்ன சிக்கல்? அனைத்து வகைகளிலும் பொருத்தமாக இருக்கும் பரந்தூரை ஓரம்கட்டிவிட்டு, ஓசூரில் புதிதாக விமான நிலையம் அமைத்தே தீருவோம் என கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சட்டமன்றத்தில் சபதம் எடுக்கிறார் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள். இது என்ன கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை? எனவே. தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்குவது துளியும் நியாயமல்ல என்பதை முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/justice-for-paranthur-justice-for-hosur-nainar-nagendran-questions-the-chief-minister




