ஒரு காலத்தில், தேசிய அணிக்காக ஒரு பெரிய கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஏமாற்றத்தில் சர்வதேச கால்பந்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் லியோனல் மெஸ்ஸி. ஆனால், அந்த முடிவு அவரது அர்ஜென்டினா பயணத்தின் முடிவாக அமையவில்லை. மீண்டும் திரும்பினார். தோல்விகளையும் விமர்சனங்களையும் கடந்து, ஒரு காலத்தில் கனவாக மட்டுமே இருந்த கோபா அமெரிக்கா (Copa América) மற்றும் உலகக் கோப்பையை அர்ஜென்டினாவுடன் வென்றார். இப்போது, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சர்வதேச கால்பந்து பயணம் நிறைவுக்கு வந்திருக்கிறது. லியோனல் மெஸ்ஸி கோப்பைக்காகக் காத்திருந்த நாட்கள் 2005-ல் அர்ஜென்டினா மூத்தோர் அணிக்காக (Senior team) அறிமுகமான மெஸ்ஸி மீது ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பார்சிலோனா (Barcelona) அணியில் தனது திறமையால் உலக கால்பந்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்த அவர், தேசிய அணிக்காகவும் அதே வெற்றியைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. ஆனால், கிளப் கால்பந்தில் கிடைத்த வெற்றிகள் அர்ஜென்டினா ஜெர்சியில் உடனடியாகக் கிடைக்கவில்லை. 2014 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து 2015 மற்றும் 2016 கோபா அமெரிக்கா இறுதிப்போட்டிகளிலும் அணி தோல்வியைச் சந்தித்தது. தனிப்பட்ட முறையில் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகப் பேசப்பட்டாலும், தேசிய அணிக்காக ஒரு முக்கியமான கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மெஸ்சியைத் தொடர்ந்து வந்தது. 2016 - கண்ணீரில் வந்த முதல் விடை 2016 கோபா அமெரிக்கா சென்டெனாரியோ இறுதிப்போட்டியில் சிலிக்கு(Chile) எதிரான தோல்விக்குப் பிறகு, மெஸ்சி சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மெஸ்ஸி தொடர்ச்சியான இறுதிப்போட்டி தோல்விகளுக்குப் பிறகு வந்த அந்த முடிவு, ஒரு வீரரின் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தருணமாக இருந்தது. பெனாலிட்டி ஷூட் அவுட்டில் தனது வாய்ப்பைத் தவறவிட்டிருந்த மெஸ்ஸி, அந்தத் தோல்விக்குப் பிறகு கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால், அந்த விடை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ரசிகர்களின் வேண்டுகோளுக்குப் பிறகு அவர் மீண்டும் அர்ஜென்டினா அணிக்குத் திரும்பினார். அப்போது யாருக்கும் தெரியாது; அந்த மீள்வரவு அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் மிக முக்கியமான அத்தியாயத்துக்கு வழிவகுக்கும் என்று. Lionel Messi: மெஸ்ஸி எனும் மாயமானும், கிழிந்து தொங்கும் இந்தியக் கௌரவமும்! காத்திருப்புக்குப் கிடைத்த பதில் 2021 கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை வென்றது. மெஸ்ஸியின் சர்வதேசப் பயணத்தில் கிடைத்த முதல் பெரிய கோப்பை அது. பல ஆண்டுகளாக நீடித்த காத்திருப்புக்கு அந்த வெற்றி ஒரு பதிலாக அமைந்தது. அதைத் தொடர்ந்து 2022-ல் ஃபைனலிசிமா (Finalissima) வெற்றி. ஆனால், அர்ஜென்டினா ரசிகர்களின் மிகப்பெரிய கனவு இன்னும் நிறைவேறாமல் இருந்தது. 2022 கத்தார் உலகக் கோப்பை தொடக்கத்தில் சவுதி அரேபியாவிடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்வி, அர்ஜென்டினாவின் பயணத்தையே கேள்விக்குறியாக்கியது. ஆனால், அதன்பிறகு அணி மீண்டு வந்தது. மெஸ்ஸி ஒவ்வொரு போட்டியையும் கடந்து, இறுதிப்போட்டியில் பிரான்ஸுக்கு எதிராக விளையாடிய அர்ஜென்டினா, கால்பந்து உலகம் நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும் ஒரு இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது. 2022 டிசம்பர் 18 அன்று மெஸ்ஸி உலகக் கோப்பையை உயர்த்தியபோது, அது அவரது தனிப்பட்ட சாதனையின் தருணமாக மட்டும் இருக்கவில்லை. 1986-க்குப் பிறகு மீண்டும் அந்தக் கோப்பைக்காகக் காத்திருந்த ஒரு தேசத்தின் எதிர்பார்ப்பும் அதில் நிறைவடைந்தது. 2024 கோபா அமெரிக்கா வெற்றியுடன் அந்தத் தலைமுறையின் பயணம் மேலும் ஒரு முக்கியமான கோப்பையைச் சேர்த்தது. ஒரு வீரர் மாறிய விதம் இளம் வயதில் வேகமான ஓட்டம், டிரிப்ளிங் (Dribbling) மற்றும் கோல் அடிக்கும் திறன் மூலம் கவனம் பெற்ற மெஸ்ஸி, தனது பயணம் தொடரத் தொடர விளையாடும் விதத்தையும் மாற்றிக்கொண்டார். வயது அதிகரித்தபோது, ஒவ்வொரு பந்தையும் வேகத்தில் எடுத்துச் செல்லும் வீரராக இல்லாமல், மைதானத்தை வாசித்து விளையாடும் 'ப்ளேமேக்கர்' (Playmaker) ஆக அவரது பங்கு மாறியது. சரியான இடத்தில் இருப்பது, அணியினருக்கு வாய்ப்புகளை உருவாக்குவது, போட்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது என அவரது விளையாட்டில் வேறு பரிமாணங்கள் சேர்ந்தன. அர்ஜென்டினா அணியும் அதே நேரத்தில் மாறிக்கொண்டிருந்தது. மெஸ்ஸியை மட்டுமே நம்பிய அணியிலிருந்து, அவரைச் சுற்றி பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் அணியாக அது வளர்ந்தது. அந்த மாற்றமும் பின்னர் கிடைத்த வெற்றிகளுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது. மெஸ்ஸி 2026 - கடைசி அத்தியாயம் 2026 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கால்பந்திலிருந்து விலகும் மெஸ்ஸியின் முடிவு, 2016-ல் அறிவிக்கப்பட்ட ஓய்விலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அப்போது இருந்தது தோல்வியின் ஏமாற்றம்; இப்போது இருப்பது நீண்ட பயணத்துக்குப் பிறகு வந்த நிறைவு. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ஜென்டினாவுக்காக விளையாடிய மெஸ்சி, 200-க்கும் மேற்பட்ட போட்டிகளில் களமிறங்கி, 100-க்கும் மேற்பட்ட கோல்களைப் பதிவு செய்துள்ளார். உலகக் கோப்பை, இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்கள், ஃபைனலிசிமா உள்ளிட்ட கோப்பைகளுடன் அவரது சர்வதேசப் பயணம் நிறைவடைகிறது. MESSI: அசாத்திய ஹாட்ரிக்; அசத்திய மெஸ்ஸி! - உலகக் கோப்பையில் இமாலய சாதனை படைத்த சாதனை! கோப்பைகளைத் தாண்டிய பயணம் மெஸ்ஸியின் அர்ஜென்டினா பயணத்தை வெறும் கோப்பைகளாலும் புள்ளிவிவரங்களாலும் அளவிட முடியாது. மெஸ்ஸி ஒரு காலத்தில் தேசிய அணிக்காக வெல்ல முடியவில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டவர், பின்னர் அதே அணியின் கேப்டனாக உலகக் கோப்பையை உயர்த்தினார். ஒரு முறை விடைபெற முடிவெடுத்தவர், மீண்டும் திரும்பி தனது பயணத்தின் மிகப்பெரிய வெற்றிகளைச் சந்தித்தார். அதனால்தான் அவரது அர்ஜென்டினா பயணம் வெற்றிகளின் பட்டியல் மட்டுமல்ல; அது தோல்விகளுக்குப் பிறகும் தொடர்ந்த ஒரு போராட்டம். மெஸ்ஸி ஒரு தலைமுறையின் நினைவாக. இனி அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸியின் இடத்தைப் புதிய தலைமுறை வீரர்கள் நிரப்பலாம். கால்பந்து தொடர்ந்து நகரும்; புதிய நட்சத்திரங்கள் உருவாகுவார்கள்; புதிய அணிகள் புதிய கோப்பைகளுக்காகப் போராடும். ஆனால், ஒரு தலைமுறைக்கு அர்ஜென்டினா கால்பந்து என்றால் நினைவுக்கு வரும் சில காட்சிகளில் மெஸ்ஸி இருப்பார். * 2014-ல் நிறைவேறாத கனவு. * 2016-ல் கண்ணீருடன் வந்த விடை. * 2021-ல் கிடைத்த முதல் பெரிய கோப்பை. * 2022-ல் உலகக் கோப்பையுடன் நின்ற அந்தப் பொன்னான தருணம். இவை அனைத்தும் சேர்ந்து உருவானதுதான் அவரது 20 ஆண்டுகால அர்ஜென்டினா பயணம். ஒரு காலத்தில், "மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்காக எப்போது கோப்பை வெல்வார்?" என்று ஏங்கிக்கிடந்த ஒரு தேசம், இறுதியில் அவருடன் உலகக் கோப்பையைக் கொண்டாடியது. இப்போது அவர் அந்த நீலமும் வெள்ளையும் கலந்த ஜெர்சியிலிருந்து விடைபெற்றிருக்கலாம். ஆனால், ஒரு தேசத்தின் நீண்ட காத்திருப்புடனும் அதன் நிறைவேறிய கனவுடனும் இணைந்த அந்தப் பயணம், கால்பந்து ரசிகர்களின் நினைவுகளில் இன்னும் நீண்ட காலத்திற்குப் பயணிக்கும். MESSI: `களத்தில் அழுதது உண்மை தான். Football காரணம் அல்ல.' - உருகும் மெஸ்ஸி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://sports.vikatan.com/messi-retires-from-argentina-national-team-after-2026-world-cup




