ஐதராபாத், சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த 73 வயது ஆயுள் தண்டனை கைதி ஒருவர், 40 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து அரசுப் பணியில் சேர்ந்து, சிறந்த ஆசிரியர் விருதும் பெற்று, பணியில் இருந்து ஓய்வு பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் பெத்தமுப்பாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தெல வீரன்னா. கடந்த 1983-ம் ஆண்டு கொலை வழக்கில், வாரங்கல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.அதே ஆண்டு டிசம்பர் மாதம், நிபந்தனைகளுடன் 3 மாதங்களுக்கு பரோலில் வீரன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால், பரோல் காலம் முடிந்த பிறகும் அவர் மீண்டும் சிறைக்கு திரும்பவில்லை. போலீசில் சரணடையாமல் தலைமறைவாகிவிட்டார். அரசுப் பள்ளியில் ஆசிரியர் இதன்பின்னர் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வீரன்னா பணியில் சேர்ந்தார். 2004-ம் ஆண்டு சிறந்த ஆசிரியர் விருதையும் பெற்றார். தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.இவ்வாறு சுமார் 40 ஆண்டுகள் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்த வீரன்னாவை, 2024-ம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து, அவருக்கு 3 ஆண்டுகளுக்கு பரோல் மற்றும் தண்டனைக் குறைப்பு சலுகைகளை வழங்க சிறைத்துறை மறுத்தது. இதனை எதிர்த்து வீரன்னாவின் மனைவி தெலுங்கானா ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.வயது முதிர்ந்த தனது கணவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதால், சிறைத்துறையின் உத்தரவை ரத்து செய்து அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். ஐகோர்ட்டு கருத்து இந்த மனுவை நீதிபதி டி. மாதவிதேவி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, பரோல் காலம் முடிந்த பின்னரும் வீரன்னா போலீசில் சரணடையவில்லை என்றும், வேண்டுமென்றே கைது நடவடிக்கையில் இருந்து தப்பி தலைமறைவாக வாழ்ந்துள்ளார் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும், தனது ஆயுள் தண்டனை குறித்த விவரங்களை மறைத்து மோசடியாக அரசு வேலை பெற்று ஆசிரியராக பணியாற்றியதுடன், ஓய்வும் பெற்றுள்ளார் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். சிறைத்துறையின் அலட்சியம் வீரன்னா தனது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தை சிறைக்கு வெளியே கழித்ததுடன், அதன் அனைத்து பலன்களையும் அனுபவித்துள்ளார். பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வழக்கு உணர்த்துகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதுபோன்ற குறைபாடுகள், மற்ற கைதிகளும் பரோல் காலம் முடிந்த பின்னரும் சிறைக்கு திரும்பாமல் வெளியிலேயே தங்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறினர்.இந்த சம்பவம் சிறைத்துறையின் அலட்சியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே, பரோலில் விடுவிக்கப்படும் கைதிகள் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் மீண்டும் சிறைக்குத் திரும்புவதை உறுதி செய்யும் வகையில், அவர்களை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்ட தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை சிறைத்துறை நிர்வாகம் உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.மேலும், வீரன்னாவுக்கு தேவையான மருத்துவ வசதிகளை சிறை வளாகத்திலேயே வழங்க முடியும் என்பதால், அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தனர். எப்படி ஆசிரியரானார்? எனினும், வீரன்னா அரசுப் பள்ளியில் பணியில் சேரும்போது எந்தச் சான்றிதழ்களை சமர்ப்பித்தார், அவரது முந்தைய தண்டனை விவரங்கள் பள்ளி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது, சுமார் 40 ஆண்டுகள் அவர் எவ்வாறு அரசுப் பணியில் தொடர முடிந்தது, மேலும் 2004-ம் ஆண்டு அவருக்கு சிறந்த ஆசிரியர் விருது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/the-tragedy-of-a-man-who-absconded-after-being-released-on-parolehaving-served-as-a-government-school-teacher-for-40-years




