தஞ்சாவூர், மேட்டூர் அணை காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படு வது வழக்கம். அணை திறக்கப்பட்டதும் டெல்டா மாவட்டங் களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு உரிய தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக டெல்டா பாசனத்திற்காக இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆழ்குழாயை நம்பிய விவசாயிகள் காவிரி நீர் கிடைக்காத சூழ்நிலையில், டெல்டா விவசாயிகள் வேறு வழியின்றி ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 3.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது. ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 1.50 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை சுமார் 1 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிர்கள் அனைத்துக்கும் ஆழ்குழாய் தண்ணீர் மூலமே பாசனம் செய்யப்பட்டு வருகிறது. உவர் நீரக மாறி வருகிறது காவிரியில் தண்ணீர் வராததால் ஆழ்குழாய் நீரை தொடர்ந்து அதிகளவில் உறிஞ்சி பயன்படுத்தி வருவதால், தற்போது நிலத்தடி நீரின் தரமே பாதிக்கப்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக தஞ்சை அருகே வெண்ணாற்று பாசனப் பகுதிகளான வெள்ளாம்பெரம்பூர், தென்பெரம்பூர். அள்ளூர் அழிசிகுடி, பனவெளி, விட்டலபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்து, குடிநீருக்கே பயன்படுத்த முடியாத அளவுக்கு உவர் நீராக மாறி வருகிறது. வேறு வழியின்றி இந்த உவர்நீரையே வயல்களுக்கு பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக வயல்களில் தண் ணீர் இருந்தாலும், மண்ணின் மேற்பரப்பில் வெண்மையாக உப்பு படிவம் உருவாகி வருகிறது. இந்த உப்புத்தன்மை நேரடியாக நெற்பயிர்களின் வேர்களை பாதித்து செடிகள் ஊட்டச்சத்தை உறிஞ்ச முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. பசுமை வயல்கள் மஞ்சளாக மாறின சுமார் 30 முதல் 45 நாட்கள் வளர்ச்சியடைந்த குறுவை நெற்ப யிர்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் முற்றிலும் காய்ந்து சருகுபோல் காட்சியளிக்கின்றன. பசுமையாக கண்ணுக்கு விருந்தாக இருக்க வேண்டிய வயல்கள் தற்போது வறண்ட தோற்றத்துடன் காணப்படுகின்றன. குறிப்பாக வெண்ணாற்று பாசனப் பகுதிகளில் பல வயல்களில் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியிருப்பது விவசாயிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவசாயிகள் அச்சம் இந்த கிராமங்களில் மட்டும் தற்போது வரை 25 சதவீத பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை இனியும் போதுமான அளவில் பெய்ய வில்லை என்றால் இந்த பாதிப்பு 50 முதல் 60 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நிலத்தடி நீரில் உப்புத்தன்மை மேலும் அதிகரித்தால் தற்போது பாதிக்கப்படாத வயல்களிலும் இதே நிலை உருவாகும் என்பதால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மகசூல் கடுமையாக குறையும் உவர்நீரால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் கதிர் வந்தாலும், முழுமையான மகசூல் கிடைக்காது. சாதாரணமாக ஒரு நெற் கொத்தில் 300 நெல் மணிகள் உருவாகும். ஆனால் உவர்நீர் பாதிப்பால் அந்த எண்ணிக்கை 60 முதல் 80 மணிகள் வரை மட்டுமே குறையும். இதனால் அறுவடை செய்தாலும் விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கும். சந்தையில் கிடைக்கும் விலையும் சாகுபடி செலவுக்கு ஈடாக இருக்காது. இதனால் விவசாயிகள் கடன் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஒரு ஏக்கர் குறுவை சாகுபடிக்கு விதை, நாற்று நடவு, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை எடுப்பு, டீசல் செலவு, தொழிலாளர் கூலி, அறுவடை எந்திர வாடகை உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மகசூல் பாதிக்கப்பட்டால், சாகுபடிக்காக செய்த முதலீட்டையே மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்படும். பலர் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று சாகுபடி செய்துள்ளதால், பயிர் கருகினால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது. உவர்நீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து உட னடியாக நேரில் ஆய்வு செய்து சேத மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-in-distress-as-rice-crops-scorched-by-brackish-water-from-deep-wells




