சென்னை, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் எலக்ட்ரீசியன்களுக்கு ஒரு மாத சம்பளம் ரூ.22 லட்சம் என அதிகரித்துள்ளது. இது ஏ.ஐ. என்ஜினீயர்களின் சம்பளத்தைவிட அதிகமாகும். எலக்ட்ரீசியன் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு அதிக தேவை செயற்கை நுண்ணறிவு என்றாலே கம்ப்யூட்டர் துறையில் படித்தவர்களுக்கும், என்ஜினீயர்களுக்கும்தான் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பொதுவாக நினைக்கிறோம். ஆனால், நிலைமை அப்படியல்ல. செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சியால் எலக்ட்ரீசியன்கள், பிட்டர்கள், வெல்டர்கள், தச்சர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கும் இப்போது அதிக தேவை ஏற்பட்டுள்ளது. கணினி சாதனங்களுக்கு அதிக மின்சாரம் தேவை செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கான தரவு மையங்களில் உள்ள கணினி சாதனங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. ஒரு சாதனத் தொகுப்பு 120 முதல் 140 கிலோவாட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட சுமார் 10 மடங்கு அதிகம். இதனால் தரவு மையங்களுக்கு புதிய மின்சார துணை நிலையங்கள், உயர் மின்னழுத்த இணைப்புகள், தடையில்லா மின்சார அமைப்புகள் உள்ளிட்டவை அமைக்க வேண்டியுள்ளது. இதற்காக பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன்களின் மாத சம்பளம், ஏ.ஐ. என்ஜினீயர்களை விட அதிகம் தரவு மையங்களில் பணிபுரியும் சராசரி தொழிலாளர்களின் சராசரி மணி நேர ஊதியம், வழக்கமான கட்டுமானப் பணியாளர்களைவிட 42 சதவீதம் அதிகம். சில பணியாளர்களுக்கு வழக்கமான ஊதியத்தைவிட ஒரு மணி நேரத்துக்கு 10 டாலருக்கும் அதிகமாக கிடைக்கிறது. ஒரு டாலர் ரூ.95 என்ற கணக்கில் இது ரூ.950-க்கும் அதிகமாகும். சிறப்பு திறன் பெற்ற எலக்ட்ரீசியன்கள் மற்றும் கட்டுமான மேற்பார்வையாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவதன் மூலம் ஆண்டுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டாலர் வரை சம்பாதிக்கின்றனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடியே 66 லட்சம் ஆகும். அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.22 லட்சத்து 16 ஆயிரம் ஆகும். இது சராசரியாக ஒரு ஏ.ஐ. என்ஜினீயர்கள் பெறும் சம்பளத்தை விட அதிகம். 2030-க்குள் 1.3 லட்சத்துக்கும் அதிகமான எலக்ட்ரீசியன்கள் தேவை மெட்டா, பிளாக்ராக், கூகுள் நிறுவனங்களும் மின்சாரப் பணியாளர்களுக்கான பயிற்சி திட்டங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. தரவு மையங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு தொழிலாளர்கள் அதிக அளவில் செல்வதால், வீடு கட்டுதல், மருத்துவமனை கட்டுமானம், மின்சார வலையமைப்பு சீரமைப்பு உள்ளிட்ட பிற துறைகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்சார கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஏற்ப 2030-ம் ஆண்டுக்குள் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான கூடுதல் எலக்ட்ரீசியன்கள் தேவைப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தான் பிட்டர்கள், வெல்டர்கள், தச்சர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவிலும் எலக்ட்ரீசியன்களுக்கு கிராக்கி ஏற்படும் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த நிலை இந்தியாவிலும் எதிர்காலத்தில் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று தொழில்துறையினர் கூறுகின்றனர். இந்தியாவின் தரவு மைய மின் திறன் 2020-ம் ஆண்டில் 375 மெகாவாட்டாக இருந்தது. இது 2025-ம் ஆண்டில் சுமார் 1,500 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் தரவு மையதிறன் 6 முதல் 6.5 ஜிகாவாட் வரை அதிகரிக்கலாம். தரவு மையங்கள் அதிகரிக்கும்போது அவற்றை கட்டுவதற்கும், மின்சார இணைப்புகள் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். 1,000 முதல் 1,200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை கட்டும் காலத்தில் 1,000 முதல் 1,200 நேரடி தொழிலாளர் வேலைவாய்ப்புகள் உருவாகலாம். இதில் சுமார் 90 சதவீதம் எலக்ட்ரீசியன்கள், குளிரூட்டும் சாதன தொழில்நுட்ப பணியாளர்கள், எந்திரத் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு, கட்டிட பராமரிப்பு பணியாளர்களாக இருப்பார்கள் என்று யோட்டா டேட்டா சர்வீசஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சுனில் குப்தா தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/due-to-the-development-of-artificial-intelligence-the-monthly-salary-of-electricians-in-the-us-is-rs-22-lakh-more-than-that-of-engineers



